காதலுக்குக் கண்ணில்லை என்பார்கள். காதலுக்குக் காலம் நேரம் இல்லை என்பதுதான் உண்மை. காதல் எப்போது வேண்டுமானாலும் இரண்டு இதயங்களை இணைக்கும். அமெரிக்காவில் கரோனா வைரஸ் பாதித்திருக்கும் மக்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்தைத் தாண்டிவிட்ட நிலையில், கரோனா தனிமையில் ஒரு வாரத்திற்குள் காதலியை கண்டுபிடித்துக் காதலை சொல்ல முடியுமா? "முடியும்' என்று நிரூபித்திருக்கிறார் ஜெர்மி கோஹன். அமெரிக்காவின் நியூயார்க் நகரின் ப்ரூக்ளின் பகுதியைச் சேர்ந்தவர். ஜெர்மியின் காதலுக்கு புறாவாகப் பயன்
பட்டிருப்பது ட்ரோன் (Drone).
இளைஞர் ஜெர்மி கரோனா வைரஸ் பரவி வருவதால் வீட்டிற்குள் தனிமைப்படுத்தப்பட்டவர். ஒரு வார காலமாக யாரையும் பார்க்கவில்லை. பேசவில்லை.. எத்தனை நேரம்தான் வீட்டுக்குள் அடைந்து கிடப்பார். "போர் அடிக்குது.. வெளியே எட்டிப் பார்க்கலாம்' என்று பால்கனிக்கு வந்து நின்ற போது, அருகிலுள்ள மொட்டை மாடியில் ஏதோ ஒரு பாடலுக்குக் கை கால்களை ஆட்டித் துள்ளும் இளம் பெண்ணை ஜெர்மி கண்டிருக்கிறார். அந்தப் பெண்ணின் உற்சாகம் ஜெர்மியைத் தொற்றிக் கொள்ள, அந்த இளம் பெண்ணைப் பார்த்து ஜெர்மி கை அசைக்க, அந்தப் பெண்ணும் பதிலுக்குக் கை அசைவு காட்டஜெர்மிக்கு காதல் பற்றிக் கொண்டது.
"ஆஹா.. அந்தப் பெண்ணிடம் பேச வேண்டுமே.. ஆனால் தூரம் அதிகம் என்பதால் உரக்க பேசினாலும் கேட்காது.. அது பல அசெளகரியங்களை, பிரச்னைகளை உருவாக்கும். முதல் முறையாகக் காதலை சொல்லும் போது காதலியின் காதுக்குள் கிசுகிசுக்க வேண்டும் அல்லது அருகில் நின்று மென்மையாகச் சொல்ல வேண்டும். நூறு பேர்கள் கேட்கிற மாதிரி உறக்கக் கத்தி சொல்லக் கூடாது. மொபைல் மூலம் பேசலாம்.. ஆனால் காதலியின் அலைபேசி எண் தெரியாதே..எப்படி பேச்சுத் தொடர்பினை ஏற்படுத்திக் கொள்வது?
சிறிது நேரம் மூளையைப் பிசைந்து கொண்ட ஜெர்மிக்கு தனது ட்ரோன் நினைவுக்கு வந்தது. உடனே சிறிய காகிதத்தில் தனது பெயர் , அலைபேசி எண்ணை எழுதி ட்ரோனில் ஒட்டி, ட்ரோனை தனது பால்கனியிலிருந்து கிளம்புமாறு இயக்கி அந்தப் பெண்ணின் மொட்டை மாடியில் இறங்கச் செய்தார். ட்ரோன் மாடியில் இறங்கியதும் அந்தப் பெண் ஆனந்தத்தில் ஜெர்மி அனுப்பிய காகிதத் துண்டை எடுத்து வாசித்து , ஜெர்மியின் எண்ணுக்கு தனது எண்ணை டெக்ஸ்ட் செய்ய , ஜெர்மி ட்ரோன்னை இயக்கி தன்னிடம் திரும்ப அழைத்துக் கொண்டார். பிறகென்ன இருபுறமும் அலைபேசிகள் காதல் அலைவரிசையில் சேர்ந்து கொண்டன.
அந்தப் பெண்ணின் பெயர் டோரி. வயது 28 என்பது பேச்சில் ஜெர்மிக்குத் தெரிய வந்தது. அடுத்த நாள், அலைபேசியில், விடியோ கால் பேசிக் கொண்டே ஜெர்மி பால்கனியிலும் டோரி மொட்டைமாடியில் சிற்றுண்டியைச் சுவைத்தனர். தொடர்ந்து மெúஸஜ் அனுப்பிப் பரஸ்பரம் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர்.
எத்தனை நேரம் வெறுமனே மொபைல், ஈமெயில், குறுஞ்செய்திகள் மூலமாய் பேசுவது..? "காதலியை நேரில் சந்திக்காமல் .. அவளுடன் கொஞ்ச தூரமாவது நடந்து கொண்டே பேசாமல் என்ன காதல் வேண்டியிருக்கிறது' என்று சிந்தித்த ஜெர்மி, "சந்திக்கலாமா..' என்று டோரியிடம் கேட்க, "ஓகே ' என்றார் டோரி. ஆனால் ஜெர்மியை " கரோனா நோயின் சமூக விலகல்' பயமுறுத்தியது. "கரோனா தனிமையிலிருந்து தப்பி எப்படி வீட்டை விட்டு வெளியே போவது... காதலியின் வீடு வரை சென்று .. காலாற அவளுடன் கொஞ்ச தூரம் நடப்பது ? சமூக விலகல் இடைவெளியைக் கடைப்பிடித்தாலும் ஒருவேளை என்னிடம் கரோனா வைரஸ் இருந்து அது டோரிக்குத் தொற்றிவிட்டால் .. ஆபத்தாகுமே' என்று ஜெர்மியின் மனம் எச்சரிக்கை மணியை அடித்தது.சற்று நேரத்தில் தனது தேடலுக்கு ஜெர்மி வழியைக் கண்டுபிடித்தார். காதலி டோரியை முதன் முதலாக நேரில் சந்திக்கும் போது பூச்செண்டு கையில் இருக்க வேண்டாமா..? அவசர அவசரமாகப் பூச்செண்டை ரெடி செய்தார். சானிடைசரையும் கையில் எடுத்துக் கொண்டார். பிளாஸ்டிக் பந்துக்குள் நின்று கொண்டு காற்றைப் பந்துக்குள் நிரப்பினார். அந்தப் பந்து கரோனா பாதுகாப்பு கோளமாக மாறியது. பந்துக்குள் இருந்து கொண்டு காதலியை நெருக்கத்தில் பார்க்கலாம். கையோடு கை சேர்க்கலாம். ஆனால் தொட முடியாது.. நடுவில் பந்தின் பிளாஸ்டிக் திரை உள்ளதே!
"உன்னைச் சந்திக்க வந்து கொண்டிருக்கிறேன்' என்று அலைபேசியில் தகவல் சொல்லிவிட்டு ஜெர்மி பந்துக்குள் நின்றவாறே நடக்க ஆரம்பித்தார். காதலனைப் பார்க்க வீட்டிலிருந்து இறங்கிய காதலிக்கோ ஆனந்தக் கண்ணீர். இப்படிப் பிளாஸ்டிக் குமிழியில் ஜெர்மி வருவார் என்று டோரி நினைத்துப் பார்க்கவில்லை. ஆச்சரியத்தில் சிலிர்த்துப் போய்விட்டார். ஜெர்மி பூச்செண்டை சிம்பாலிக்காகக் காதலியிடம் நீட்ட..அவரும் சிம்பாலிக்காகப் பெற்றுக் கொண்டார்.
நடுவில் பிளாஸ்டிக் திரை இருக்கிறதே என்ற தைரியத்தில் உள்ளங்கையுடன் உள்ளங்கையை சிறிது நேரம் சேர்த்து வைத்தனர்.. அப்படியே நடைபாதையில் நடக்க ஆரம்பித்தார்கள். அமெரிக்காவிலும் "ஊரடங்கு .. வீட்டுக்குள் அடங்கு' போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளன என்பதால் சாலையில் தெருவில் மனித நடமாட்டம் இல்லை. ஆனால் ஜெர்மி டோரி நடந்து போவதை அடுக்கு மாடிகளில் நின்றவர்கள் பார்த்தார்கள். படம் பிடித்தார்கள். வித்தியாசமாக ஒருவர் பலூனுக்குள் நடக்க அவர் அருகில் பெண் நடந்து செல்வதை மோப்பம் பிடித்த போலீஸ், வண்டியுடன் வர... ஜெர்மி படம் பிடிப்பவர் .. டிவி சானல் ஒன்றிற்குப் பங்களிப்பவராக இருப்பதால் அதிகம் கேள்விகள் கேட்கவில்லை. கரோனா காலத்தில் மலர்ந்த காதல் என்பதைத் தெரிந்து கொண்டதும் காதலர்களுடன் படம் எடுத்துக் கொண்டு இடத்தைக் காலி செய்தனர்.
"கரோனா தாக்கம் குறைந்ததும் திருமணம் செய்து கொள்வோம்..' என்கிறார் ஜெர்மி. வாழ்க கரோனா காதல்..!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.