முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

ஏமாறாமல் உதவ முடியாது!

தியாகராஜ பாகவதர், அவர் நடித்து வந்த "திருநீலகண்டர்' படத்தின் வெளிப்புறப் படப்பிடிப்புக்காகப் போயிருந்தார்.

Updated On : 12 ஜூலை, 2020 at 6:00 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:25 PM

தியாகராஜ பாகவதர், அவர் நடித்து வந்த "திருநீலகண்டர்' படத்தின் வெளிப்புறப் படப்பிடிப்புக்காகப் போயிருந்தார். படப்பிடிப்புக் குழுவினர் வெயிலை எதிர்பார்த்து மரத்தடி நிழலில் உட்கார்ந்திருக்கும்போது, ""ஐயா, தருமராசா'' என்று குரல் கொடுத்துக் கொண்டே அவரை நோக்கி வந்தாள் ஒரு கர்ப்பிணிப் பெண்.
""தர்மராசாவா? நான் யாரிடமும் என் மனைவியை வைத்துச் சூதாடவில்லையே?'' என்றார் பாகவதர் சிரித்துக் கொண்டே..
""அந்த மாதிரி கதி எல்லாம் உங்களுக்கு வரவேண்டாம் மகாராசா ! நீங்க நல்லாயிருக்கணும். உங்களாலே ஏழைங்க பிழைக்கணும்''.
""சரி, இப்போ எதுக்காக நீ என்னைத் தேடி வந்தாய்?''
""ஆஸ்பத்திரிக்குப் போறேன், புண்ணியவானே... கையிலே காலணா இல்லை!''
""புத்திர பாக்கியத்துக்கு உன்னை உள்ளாக்கிய புண்ணியவான் எங்கே போயிட்டாரு?''
"" அவன் ஒரு சோமாரி, எங்கேயோ எதையோ திருடிவிட்டு ஜெயிலுக்குப் போயிட்டான்''.
தன் உதவியாளரைக் கூப்பிட்டு, அவளிடம் ஒரு பத்து ரூபாய் கொடுக்கச் சொன்னார் பாகவதர். அதைப் பெற்றுக் கொண்டு அவள் இரண்டடிகள் எடுத்து வைத்ததுதான் தாமதம்,
""ஏமாந்தீரா?'' என்று சொல்லிக் கொண்டே அவரை நோக்கி வந்தார் என்.எஸ். கிருஷ்ணன்.
""ஏமாந்தேனா? நானா? யாரிடம்'' என்று பாகவதர் கேட்டார்.
""இப்போது இங்கே வந்து போனாளே, அந்தப் பெண்ணிடம்''
""ஓ, அதை சொல்கிறீர்களா? அவள் உண்மையான கர்ப்பிணி இல்லை. கர்ப்பிணி போல் நடித்து, ஏமாற்றுபவள் என்று சொல்லப் போகிறீர்கள். அப்படித்தானே'' என்றார் பாகவதர், சாதாரணமாக!
என்.எஸ். கிருஷ்ணனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. ""அது தெரிந்துமா அவளுக்கு பத்து ரூபாய் கொடுக்கச் சொன்னீர்?'' என்றார் வியப்புடன்.
""ஆமாம்''
""நான், நீங்கள் ஏமாந்து போய் கொடுக்கச் சொன்னதாக அல்லவா நினைத்தேன்?''
""ஏமாறாமல் நாம் யாருக்கு என்ன கொடுத்து விடுகிறோம்''.
இதைக் கேட்டதும் என்.எஸ். கிருஷ்ணனுக்குத் தூக்கிவாரிப் போட்டது.
""எவ்வளவு பெரிய உண்மையை எவ்வளவு சர்வ சாதாரணமாகச் சொல்லிவிட்டீர்!'' என்று சொல்லிக் கொண்டே அவர் ஒரு கணம் திகைத்து நின்றார்.
""மறுகணம் உண்மை, நீர் சொன்னது. முக்காலும் உண்மை, முற்றிலும் உண்மை. எந்த மனிதனும் ஏதாவது ஒரு விதத்தில் ஏமாறாமல் யாருக்கும் எதையும் கொடுத்துவிடுவதில்லை. ஏமாந்தே கொடுக்கிறான். காரணம்.
பொது நலத்தைப் பற்றி அவன் என்னதான் பேசினாலும் உடன் பிறந்த சுயநலம் அவனை விட்டு எந்த நிலையிலும் போகாமல் இருப்பதுதான்! '' என்றார்.
""அதனால்தான் அவனிடம் உதவி பெற வருபவர்களும்
ஏதாவது ஒரு விதத்தில் அவனை ஏமாற்றியே உதவி பெறப் பார்க்கிறார்கள். இதற்கு இங்கே வந்த பெண் மட்டும் எப்படி விதிவிலக்காக இருக்க முடியும் ?'' என்றார் பாகவதர்.
"ஏழிசை மன்னர் எம்.கே. தியாகராஜ பாகவதர் என்ற நூலிலிருந்து...'

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.