முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

ஆதரவற்றோருக்கு உதவும் இளைஞர்கள்

கரோனா ஏற்படுத்திய பாதிப்பால் எல்லாத் தொழில்களுமே பாதிக்கப்பட்டுள்ளன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:59 PM
பகிர்:

கரோனா ஏற்படுத்திய பாதிப்பால் எல்லாத் தொழில்களுமே பாதிக்கப்பட்டுள்ளன. இப்படி கரோனாவால் தொழிலை இழந்து பாதிப்படைந்தவர் தான் விஜயகுமார். ஆனால் இந்த பொது முடக்க காலத்திலும் சாலையோர வசிக்கும் ஆதரவற்றோர்களுக்கு இலவசமாக பிரெட் தயாரித்து வழங்கியுள்ளார்.  மேலும் நீரழிவு நோயாளிகளுக்காக பிரத்யேகமான கோதுமை ரொட்டி, நாட்டுச் சர்க்கரை தேங்காய் பன் தயாரித்து அந்தப் பகுதி மக்களின் பாராட்டையும் பெற்றுள்ளார்.

யார் இந்த விஜயகுமார்? 

நாமக்கல் மாவட்டம் அரியாகவுண்டம்பட்டி சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர். ஓட்டல் மேனேஜ்மெண்ட்டில் பட்டபடிப்பு முடித்த இவர்,  "பிரெட் பாய்ஸ்' எனும் சிறிய நிறுவனத்தைத் துவக்கினார். 

நூறுக்கும் மேற்பட்ட பிரெட் வகைகளைத் தயாரித்து மக்களின் கவனத்தை ஈர்த்தார். திருமண நிகழ்ச்சிகள், பிறந்தநாள் விழாக்களில் இவரின் பிரத்யேக உணவு வகைகள் தனி முத்திரையைப் பதித்து வந்தது. 

இனி விஜயகுமார் பேசுகிறார்:

""உலகம் முழுவதையும் புரட்டிப் போட்ட கரோனா தாக்கம் எங்களுடைய வர்த்தகத்தையும் விட்டு வைக்கவில்லை. ஆனால் மனம் தளராமல் நாமும் தொழிலை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. காரணம் நான் சிறிய நிறுவனம் நடத்தினாலும் என்னையும் நம்பி சில பேர் இருக்கிறார்கள். அவர்களுக்காக நாம் ஏதாவது செய்து ஆக வேண்டும் என்ற சூழ்நிலை உண்டானது  மாற்று வழியை யோசித்தேன்.

 பொது முடக்க காலத்தில் பிரெட் போன்றவை மக்களின் அத்தியாவசியப் பொருளாக மாறிப் போனதை கண்டறிந்து,  பொதுமக்களுக்கு உதவும் நோக்கில் கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள  பணி மனையில் சொந்தமாக பிரெட் தயாரிப்பு பணியில் இறங்கினேன். வழக்கமான மைதாவிற்கு பதிலாக இந்த முறை கோதுமைமாவில் ரொட்டிகளைத் தயாரிக்க திட்டமிட்டோம். 

காரணம் இந்தப் பகுதியிலுள்ள பலர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள். அவர்கள் தாங்கள் சாப்பிடுவதற்கு ஏற்ற வகையில் ரொட்டி தயாரித்து வழங்கும்படி கேட்டுக் கொண்டனர். அதனால் கோதுமை ரொட்டி, மற்றும் நாட்டு சக்கரையில் பன்களை தயாரித்தோம். இதுவரை மொத்த வியாபாரம் செய்த எங்களை கரோனா சில்லறை வியாபாரம் செய்ய வைத்துவிட்டது. இப்போதைக்கு எங்களுக்கு கை கொடுப்பதும் சில்லறை வியாபாரம் தான். எங்கள் தொழிற்சாலைக்கே வந்து நீரிழிவு நோயாளிகள் ரொட்டி மற்றும் பன்களை வாங்கிச் செல்கிறார்கள். இது தற்போது நீரிழிவு நோயாளிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இலவசமாக சாலையோரம் வசிப்பவர்கள், ஆதரவற்றோருக்கு பிரெட்களை தயாரித்து வழங்க எங்களுக்கு பணம் தேவையாக உள்ளது. என்னை நம்பி தொழிலாளர்களுக்கும் இப்போதைக்கு கை கொடுப்பது கோதுமை ரொட்டி, நாட்டு சக்கரை பன் மட்டுமே, என்னைப் போன்று சுய தொழில் செய்யும் விரும்பும் இளைஞர்களை அரசு ஊக்குவித்தால் பல இளைஞர்களின் பசி தீரும்''  என்கிறார் விஜயகுமார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.