முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

மர்மம் நிறைந்த கோட்டை

ருமேனியாவில் உள்ள பழைமையான கோட்டைகளை சுற்றிப் பார்ப்பதை வாம்பையர் சுற்றுலா (ரத்தக் காட்டேரி சுற்றுலா) என்று அழைக்கிறார்கள். அந்த அளவுக்கு இந்த கோட்டைகள் மர்மம் நிறைந்ததாக அமைந்துள்ளன.

Updated On : 17 மே, 2020 at 7:28 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:09 PM

ருமேனியாவில் உள்ள பழைமையான கோட்டைகளை சுற்றிப் பார்ப்பதை வாம்பையர் சுற்றுலா (ரத்தக் காட்டேரி சுற்றுலா) என்று அழைக்கிறார்கள். அந்த அளவுக்கு இந்த கோட்டைகள் மர்மம் நிறைந்ததாக அமைந்துள்ளன.

அப்படிப்பட்ட கோட்டைகளில் ஒன்று பிரான் கோட்டை . இது பிராஸ்கோவ் பகுதியில் அமைந்துள்ளது. 14-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோட்டை ருமேனியாவில் சிறந்த கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டு.

தெற்கு பிரான் பகுதியில் பிலிஸ்கோட்டை அமைந்துள்ளது. இது மலையில் அமைந்துள்ள கோட்டையாகும். முதலாம் கரோல் மன்னர் கோடைக்காலத்தில் தங்குவதற்காக இந்த கோட்டையை கட்டியுள்ளார். இது 1875-ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகும்.

Advertisement

குனி டோரா நகர் பகுதியில் அமைந்துள்ளது கார்வின் கோட்டை. இது 1446-ஆம் ஆண்டு அங்கேரி தலைவரான ஜான்ஹுன்யாடி என்பவரால் கட்டப்பட்டது. கோதிக் கட்டடக்கலை அமைப்பில் உருவான இந்தக் கோட்டை தான் ஐரோப்பா கண்டத்தில் உள்ள கோட்டைகளில் மிகவும் பெரியதாகும்.

பழைமையான கட்டடங்கள்: ருமேனியாவை விலாத் மன்னர் ஆட்சி செய்த போது கட்டப்பட்ட அரண்மனையின் பெயர் குர்தீவீகி என்பதாகும். இது டாம்போவிடா ஆற்றின் கரையில் 1459-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. துருக்கியர்களின் தாக்குதலில் இருந்து புகாரெஸட் நகரை பாதுகாக்கும் வகையில் இந்த அரண்மனை அமைந்திருந்தது. இது தவிர 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மோகோசோயி அரண்மனையும் கட்டடக்கலை சிறப்புமிக்கதாகும். இது பிரான்கோவியன் என்ற மன்னர் காலத்தில் கட்டப்பட்டதாகும். சிறந்த மர வேலைப்பாடுகள் மற்றும் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்ததாக இந்த அரண்மனை கட்டப்பட்டுள்ளது. மத்திய புகாரெஸ்ட் பகுதியில் அமைந்துள்ள சிஸ்மிகுயி பூங்கா மிகவும் பெரியது. பழைமையானது. இதில் அமைந்துள்ள ஏரியில் படகு சவாரி செய்வது பொழுது போக்கு ஆகும்.

டிராகுலாவின் மகன்: ருமேனியாவின் தென்பகுதியில் இருக்கும் வாலாச்சியாவை ஆண்டவர் மன்னர் 3-ஆம் விலாத். இவர் 1431-ஆம் ஆண்டு முதல் 1476 வரை இந்தப் பகுதியை ஆட்சி செய்தார். இவரது தந்தை டிராகுலா என்ற வம்சத்தை சேர்ந்தவர். எனவே இவரை டிராகுலாவின் மகன் என்று அழைத்தனர்.

டிராகுலா என்றால் மனித ரத்தம் குடிக்கும் காட்டேரி என்று பொருளாகும். ஆனால் மூன்றாம் விலாத் மன்னர் ரத்தம் குடிக்கும் மனிதர் அல்ல. ஆனால் கொலை வெறியும், ரத்த வெறியும் பிடித்தவர். தனது எதிரிகளை விதவிதமாக கொடுமைகளை செய்து கொல்வதில் விருப்பம் உள்ளவர். கூரிய ஆயுதங்கள் மூலம் எதிரிகளை இவர் கொன்று குவித்துள்ளார்.மூன்றாம் விலாத் மன்னர் ருமேனியாவின் கதாநாயகன் என்றும் புகழப்படுகிறார். இதற்கு காரணம் ருமேனியாவை தாக்கிய துருக்கியைச் சேர்ந்த  ஒட்டாமன் வம்சத்தினரை அழித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.