முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

வெற்றி இலக்கை அடைய எளிய வழி!

""குறிக்கோள் இருந்தால் உங்கள் வெற்றி இலக்கை எளிதில் அடையலாம்'' என்று தன்னம்பிக்கை அளிக்கிறார் சென்னைச் சேர்ந்த 26 வயதான இளைஞர் அசாருதீன்.

Updated On : 17 மே, 2020 at 7:21 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:09 PM

""குறிக்கோள் இருந்தால் உங்கள் வெற்றி இலக்கை எளிதில் அடையலாம்'' என்று தன்னம்பிக்கை அளிக்கிறார் சென்னைச் சேர்ந்த 26 வயதான இளைஞர் அசாருதீன்.

யார் இந்த அசாருதீன்?

சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் வசிப்பவர். சிறு வயதிலிருந்தே சொந்தமாக தொழில் தொடங்கும் ஆர்வம் இருந்ததால், கல்லூரியில் 4- ஆம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் போது நிறுவனம் ஒன்றை துவங்கினார். இன்று வெற்றிகரமாக லட்சங்களில் வருமானம் ஈட்டுவதுடன் எட்டு நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்துள்ளார். 

Advertisement

இந்தளவு வளர்ச்சியை எட்டியது எப்படி அவரிடமே கேட்டோம்:

""பல கனவுகளுடன் பள்ளிப்படிப்பை முடித்த, எனக்கு எலக்ட்ரானிக்ஸ் மிகவும் பிடிக்கும் கண்ணில் படும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் பாகங்களை பிரித்துவிட்டு அதன் செயல்பாடுகளை ஆராய்வேன். இதனால் எனக்கு கணினி தொழில் நுட்பத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டு அதை கற்றுக்கொண்டேன். 

கல்லூரியில் படிக்கும் போதே பகுதி நேரமாக கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தில்  வேலை செய்து புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொண்டேன். நான் கற்றுக்கொண்டதை பிறருக்கு கற்றுக்கொடுப்பதிலும் எனக்கு ஆர்வம் அதிகம் எனவே இத்துறையை தொழிலாக தேர்ந்தெடுத்தேன்.

தொழில், முதலீடு, செயல்பாடுகள் என உங்களின் கனவை நீங்கள் வளர்த்தெடுக்கவில்லை என்றால் வேறொருவரின் கனவை வளர்க்க உங்களை அவர்கள் பணியிலமர்த்திவிடுவார்கள், எனும் வாக்கியம் என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. 

கல்லூரியில் படிக்கும் போது ப்ரோகிராமிங், சாப்ட்வேர், ஹார்ட்வேர் மற்றும் ஏனைய கம்ப்யூட்டர் டெக்னாலஜியை முழுவதையும் கற்றுக்கொண்டேன். 2015 செப்டம்பர் மாதம் "பிரின்ஸ் கம்ப்யூட்டர் பயிற்சி மையம்' என்ற பெயரில் கம்ப்யூட்டர் ட்ரெயினிங் இன்ஸ்டிடியூட் துவங்கினேன். 

துவக்கத்தில் பல இடையூறுகளை சந்தித்தாலும் தொடர்ந்து முயற்சி செய்து நிறுவனத்தின் அடிப்படை கட்டமைப்புக்கு 1.5 லட்சம் ரூபாய் செலவழித்து தொடங்கினோம். இக்கட்டான பொருளாதார சூழலில் எனது அப்பா மிகவும் உதவியாக இருந்தார். பயிற்சி மையத்தில் பல புதுமைகளை செய்தோம். கணினி பயிற்சி மட்டுமின்றி வேலைவாய்ப்பிற்கு உதவும் பயிற்சிகளையும் மாணவர்களுக்கு வழங்கி வருகிறோம். 

அரசு பள்ளியில் படிக்கும் தகுதிவாய்ந்த மாணவர்களுக்கு அவர்கள் விரும்பும் தொழில்நுட்பத்தை இலவசமாக கற்றுத்தருகிறோம்.  

நிறுவனம் தொடங்கிய பொழுது மிகுந்த சவால்களை சந்திக்க நேர்ந்தது. குறிப்பாக வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. அந்த சூழலில் எனது நண்பர்கள் சில மாதம் சம்பளம் இல்லாமல் எனக்காக வேலை செய்தார்கள். 

வர்தா புயலின் போதும் அதற்கு முன் ஏற்பட்ட வெள்ளத்தின் போதும் எங்களது பயிற்சி மையம் பெரும் சேதத்திற்கு உள்ளானது. குறிப்பாக வெள்ளத்தின் போது ஏற்பட்ட சேதத்தில் இருந்து மீள்வது கடினமாக இருந்தது, 

ஏனென்றால் அது புதிதாக தொழில் துவங்கிய தருணம்.மறுகட்டமைப்புக்கு தேவையான பொருளாதாரம் இல்லாமலும், கல்லூரியில் இறுதி செமெஸ்டரில் இருந்த சமயம் என்பதாலும் கடுமையான நஷ்டத்துடன் சிரமப்பட்டோம் இருந்தும் விடாமுயற்சியுடன் சில நண்பர்களின் உதவியால் எல்லாவற்றையும் சரி செய்ததை நினைவுக்கூர்ந்தார்.  

தற்போது லாபத்துடன் இயங்கி மாதம் 1.5 லட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது. பொறியியல் துறையை தேர்தெடுக்கும் மாணவர்கள் தங்களுடைய குறிக்கோள் முதலில் மனதில் உருவாக்குங்கள். அந்த குறிக்கோளை அடைய உங்கள் மனதே உங்களை ஊக்கப்படுத்தும். நீங்கள் நினைத்த இலக்கை எளிதில் அடையாளம்''  என தான் கடந்த வந்த பாதை சொல்லி முடித்தார். 

இவர், சந்தையில் புதிய தொழில்நுட்பங்களின் ஆதிக்கத்தை கவனித்து அதற்கு ஏற்றார் போல் தன்னை மேம்படுத்திக் கொண்டிருக்கிறார். படித்து முடித்து வேலை தேடும் இளைஞர்கள் மத்தியில் அசாருதீன் போன்றவர்கள் வாழ்க்கைப் பாதை நிச்சயம் பலருக்கும் வழிகாட்டும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.