முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

வண்ண வண்ண மீன்கள்

லட்சத்தீவு என்பது இந்தியாவின் தென்மேற்கு கடற்கரையில் அரபிக் கடலில் அமைந்துள்ள 36 தீவுகளின் அமைப்பாகும்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
பகிர்:

லட்சத்தீவு என்பது இந்தியாவின் தென்மேற்கு கடற்கரையில் அரபிக் கடலில் அமைந்துள்ள 36 தீவுகளின் அமைப்பாகும். இந்த தீவுகளில் உள்ள பவளப் பாறைகளைச் சுற்றிலும் முதுகெலும்பு இல்லாத அலங்கார இறால்கள் அதிகளவில் உள்ளன. மேலும் இவற்றின் தனித்துவமான நிறம், வடிவம் மற்றும் செயல்பாடுகள் வண்ணமீன் ஆர்வலர்களிடம் புதிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் செயற்கை கடல்நீர் தொழில்நுட்ப வளர்ச்சியால் உவர்நீர் கிடைக்காத பகுதிகளிலும் கடல் உயிரினங்கள் அலங்காரத்துக்காக வளர்க்கப்படுகின்றன. இதனால் இந்த உயிரினங்களின் தேவை அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு இந்திய தேசிய மீன் மரபணு மையம் அரபிக் கடலில் உள்ள தீவுகளில் ஒன்றான அகத்தி தீவைக் கண்டுபிடித்து அங்கு உற்பத்தி மையம் அமைத்து புதிய வகை வண்ண இறால்களை இனப்பெருக்கம் செய்து உலகளவில் சாதனை படைத்துள்ளது. 

இந்தியாவில் (ஐ.சி.ஏ.ஆர்) தேசிய மீன் மரபணு மையம் 1983-ஆம் ஆண்டு முதல் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சிலின் உதவியுடன் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் நோக்கம் நீர்நிலைகளிலுள்ள புதிய உயிரினங்களை கண்டறிதல், எதிர்கால சந்ததியினர்களுக்கான மீன் மரபணு வளங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் பாதுகாப்பது. இந்திய ஆராய்ச்சியாளர்கள் கட்டுப்படுத்தப்பட்ட திட்ட செயல்முறையில் பவளப்பாறைகளின் சுற்றுச்சூழலில் வாழும் மிகவும் பிரபலமான மற்றும் பரவலாகவும் வர்த்தகம் செய்யப்படும் நீர்வாழ் உயிரினமான கடல் அலங்கார இறால்களை இனப்பெருக்கம் செய்தும், இதற்கான நவீன இனப்பெருக்க தொழில்நுட்பத்தையும் உருவாக்கியுள்ளனர்.

""உலகில் முதல் முறையாக லட்சத்தீவில் கண்டறியப்பட்ட இந்த இறால்களை உற்பத்தி செய்து பிற நாடுகளுக்கு வழங்குவதன் மூலம், வண்ண மீன் சந்தையில் இந்தியா முதலிடம் வகிக்கும். இந்திய அரசின் நீலப் புரட்சிக்கு வண்ணம் தீட்டும் வகையில் அலங்கார இறால்கள் புதிய சகாப்தம் படைக்க வாய்ப்புள்ளது.   

இந்த மையம் அகத்தி தீவிலுள்ள ஆர்வமுள்ள பெண் தொழில் முனைவோரை இனம் கண்டு அவர்களுக்கு ஊதியத்துடன் (மாதம் ரூ.2,500) கூடிய பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. 60 நாள்கள் பயிற்சியை முடிக்கும் மக்களுக்கு அந்த மையம் உற்பத்தி செய்த இறால்களை இலவசமாக வழங்குகிறது. அவர்கள் வீட்டின் அருகே இறால்களை வளர்த்து 2 மாதங்களில் சந்தைப்படுத்தக்கூடிய வளர்ச்சியை எட்டும்போது வியாபாரம் செய்வதற்காக சில வர்த்தகர்களுடன் வியாபார சந்தையையும் ஏற்படுத்தி கொடுக்கிறது. இந்த வணிக வியாபாரம் முழுமையாக தெரிந்த பின்பு அலங்கார இறால்கள் அவர்களுக்கு தகுந்த மானியத்துடன் விற்கப்படும். வரும் 2020 ஆண்டின் இறுதிக்குள் அலங்கார இறால்கள் வளர்ப்பில் ஆர்வமுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மக்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளோம். 

2017-ஆம் ஆண்டு அலங்கார மீன் வர்த்தகம் குறித்த ஆய்வறிக்கையில் அலங்கார மீன் உற்பத்தி என்பது உலகளவில் பல பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட தொழில் என தெரியவந்துள்ளது. ஆரம்ப கால கட்டத்தில் இந்த தொழிலை வளர்ந்த நாடுகள் மட்டுமே செய்து வந்தன. இதன் சந்தை மதிப்பை பார்த்த பின்பு தற்போது வளரும் நாடுகளும் இத்தொழிலை தொடங்கியுள்ளன. 
வண்ன இறால் இனப்பெருக்க தொழில்நுட்பத்தை தயார்படுத்த பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இறால் குஞ்சுகளுக்கு வழங்கும் பல வகை உணவு மற்றும் உணவின் அளவு ஆகியவற்றை கணக்கிடுவது ஒரு சவாலான விஷயம். வளர்ச்சியின் ஆரம்ப கட்டத்தின் அதன் வாயின் அளவு மிகச் சிறியது அதனை நுண்ணோக்கியின் உதவியுடன் கண்டுபிடித்து வாயின் அளவுக்கு தகுந்தாற்போல பல்வேறு வகையான திரவ மற்றும் திட உணவுகளை தேர்ந்தெடுத்தோம். இந்த நிகழ்வில் எந்த ஒரு உயிர் இழப்பும் இல்லை எனவும், ஏதாவது ஒரு உயிரினம் உடல்நிலை மோசமடைந்துவிட்டால் அதற்கான தட்பவெட்ப சூழ்நிலைகளை கண்டறிந்து தகுந்த காரணிகளை மாற்றி அமைக்கிறோம். உலகளவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட வண்ண இறால்கள் மற்றும் அதன் உற்பத்தி தொழில்நுட்பம் வண்ணமீன் சந்தையில் நமது நாட்டை உலகளவில் உயர்த்தும்'' என்கிறார் மையத்தின் முதன்மை ஆய்வாளர் டி.டி.அஜீத்குமார்.

மீன் மரபணு வளங்களின் இயக்குநர் குல்தீப் கேலால் கூறுகிறார். 

பவளப்பாறைகள் மிக எளிதில் உடையக் கூடியவை. இவை இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் அட்டவணை-1 கீழ் பாதுகாக்கப்படுகிறது.  

சந்தையில் விற்கப்படும் அலங்கார மீன் வகைகளில் பெரும்பாலானவை பவளப் பாறைகள் நிறைந்த பகுதிகளிலிருந்து சேகரிக்கப்படுகின்றன. அத்தகைய வர்த்தகத்தை நிறுத்துவது என்பது மிக கடினம். அதற்கு மாற்று வழியாக இந்த கட்டுப்படுத்தப்பட்ட இனப்பெருக்க வர்த்தகத்தின் மூலம் நாம் முயற்சி செய்தால் மட்டும் இயற்கை வாழ்விடங்களின் எதிர்மறையான தாக்கத்தை முற்றிலும் குறைக்க முடிவதுடன் அவை பாதுகாக்கப்படுகின்றது. எங்களது முக்கிய நோக்கமே இந்த அலங்கார இறால்களை பொரிப்பகத்தில் உற்பத்தி செய்து அந்த தொழில்நுட்பத்தை லட்சத்தீவு மக்களுக்கு கற்றுத்தந்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே ஆகும். வியாபார லாபத்துக்காக பவளப் பாறைகளை சிறையுறச் செய்வது, அலங்கார இறால்களை பிடிப்பதை முற்றிலும் நிறுத்துவதற்காகவும், அடுத்த தலைமுறை பல்லுயிர் பெருக்கத்தின் பயன்களை அனுபவிப்பதே முக்கிய நோக்கமாகவும் கொண்டுள்ளது.

இந்திய அரசின் உயிரி தொழில்நுட்பத் துறையின் நிதி உதவியுடன் 2018-ஆம் ஆண்டு லட்சத்தீவில் உள்ள அகத்தி தீவில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் கடல் அலங்கார முதுகெலும்பில்லாத உயிரினங்களுக்கான பாதுகாப்பு மையமாக திகழ்கிறது. நாங்கள் கட்டுப்படுத்தப்பட்ட இனப்பெருக்க தொழில் நுட்பத்தின் மூலம் கீழ்கண்ட வண்ண அலங்கார இறால்கள் சிறப்பான முறையில் இனப்பெருக்கம் செய்யும் தொழில்நுட்பத்தை தயார்படுத்தியுள்ளோம். கவர்ச்சி இறால், பளிங்கு இறால், பப்ளி இறால், மயில்வால் இறால் ஆகியவற்றின் தற்போதைய இந்திய சந்தை மதிப்பு கிலோ ரூ.750 முதல் ரூ. 1000க்கும் மேலாக இருப்பதால், வண்ண இறால் உற்பத்தியாளர்களிடம் இந்த திட்டம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது'' என்றார்.  

இந்த மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் கள ஆய்வுகளை நடத்தியதன் மூலம் புதிய வகை இறால்கள் மற்றும் இந்தியாவில் புதிதாக அறியப்பட்ட வண்ண இறால்களையும் கண்டறிந்து, உலகின் தலைசிறந்த ஆராய்ச்சி நூலான சூட்டாக்சாவில் (ZOOTAXA)  வெளியிட்டுள்ளனர். ''

முழு கட்டுரையைப் படிக்க →