குறும்பட உலகில் முத்திரை
குறும்படங்களின் மூலம் தன்னை நிரூபித்து சினிமாவில் நுழையும் வாய்ப்பை இப்போதைய இளைஞர்கள் பெரிதும் விரும்புகிறார்கள்.
குறும்படங்களின் மூலம் தன்னை நிரூபித்து சினிமாவில் நுழையும் வாய்ப்பை இப்போதைய இளைஞர்கள் பெரிதும் விரும்புகிறார்கள். அந்த வகையில் ஜெ.எம். ராஜா குறும்பட உலகத்தில் தனி முத்திரையை பதித்து வருகிறார். "ஒரு நாள்', "இருவர்', "சொந்த பந்தம்' என இவர் இயக்கிய குறும்படங்கள் பல விருதுகளை வாங்கியுள்ளன. இந்த நிலையில் தனது முதல் சினிமாவை இயக்குவதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார்.
இது குறித்து அவரிடம் பேசும் போது... ""கோவை எனக்கு சொந்த ஊர். நடிகராக வேண்டும் என்ற கனவில் சென்னைக்கு வந்து பல போராட்டத்திற்கு பிறகு பாக்யராஜிடம் வேலைக்குச் சேர்ந்தேன். அவரின் "சுவரில்லாத சித்திரம்' படம் பார்த்த பிறகு தன்னை ஒரு இயக்குநராக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். இயக்கம் சம்பந்தமாக தனக்கு என்ன தெரியும் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பல்வேறு வேலைகளை செய்து அதில் கிடைத்த பணத்தை வைத்து என் அம்மாவின் பெயரில் ஒரு நிறுவனம் தொடங்கி அதில் பல குறும் படத்தை இயக்க ஆரம்பித்தேன்.
குறும் படங்களை இயக்கிக் கொண்டே கே பாக்யராஜ், நவீன் ஆகியோரிடம் உதவியாளராகவும் வேலை செய்தேன். ஹிந்தியில் உருவாகிக்கொண்டிருக்கும் காந்திஜியின் வரலாற்று படத்தில், தமிழ், தெலுங்கு, மலையாளத்தின் மொழிமாற்று வசனத்தை எழுதி பெரும் அனுபவம் பெற்றேன். கரோனா பொது முடக்க காலத்தில் "அல்வா' என்ற குறும்படத்தை இயக்கினேன். இம்மாத கடைசியில் இந்தப் படம் இணையத்தில் வெளியாகவுள்ளது. அடுத்து பட வாய்ப்பு கிடைத்துள்ளது. பெரும் நிறுவனம், முன்னணி நடிகர் என சரியான வாய்ப்பு. நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்'' என்றார் ஜெ.எம். ராஜா.