முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

நடனக் கலைஞர்களுக்கு அங்கீகாரம் குறைவு

ஒரு திரைப்படத்தில் ரசிகர்களை கொண்டாட்டம் போட வைப்பது பாடல்கள்தான்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:26 PM
பகிர்:

ஒரு திரைப்படத்தில் ரசிகர்களை கொண்டாட்டம் போட வைப்பது பாடல்கள்தான். அதுவும் குழுவாக நடனம் ஆடும் பாடல்கள் கண்களுக்கும் விருந்தாக அமையும். ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் அந்த நடனக் கலைஞர்கள் வாழ்க்கை பெரும் போராட்டமான வாழ்கையாக இருக்கிறது.   நடன இயக்குநரான லலிதா ஷோபி.  இவர் கமல், விஜய், ஜோதிகா உள்ளிட்ட பல நட்சத்திரங்களை நடனத்திற்காக ஆட்டி வைத்தவர். சமீபத்தில் வெளியாகியிருக்கும் "சுஃபியும் சுஜாதாவும்' என்ற மலையாளப்படத்தில் இவர் அமைத்த கதக் நடனத்திற்காகப் பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.  நம்மிடம்  லலிதா ஷோபி பேசினார்:  

உங்களின் திரைப்பட அனுபவம் பற்றி....

நான் என்னுடைய சிறிய வயதிலேயே டான்ஸராக வந்து விட்டேன். 1994-ஆம் ஆண்டு சினிமாவில் நடித்தேன். இதுவரைக்கும் தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று பல படங்களில் பணியாற்றியிருக்கிறேன்.. 

நடனக் கலைஞர்களின் உழைப்புக்கு அங்கீகாரம்  கிடைக்கிறதா?

அங்கீகாரம்  குறைவாக இருக்கிறது. ஒரு படத்தில் ஹீரோ,  ஹீரோயின் நன்றாக நடனம் ஆடியிருந்தால் அதற்குப் பின்னால் ஒரு நடன இயக்குநரின் உழைப்பு இருக்கிறது. இது அந்த நடிகர்,நடிகைகளுக்கும் தெரியும். ஆனால் ரசிகர்கள் சொல்லும் போது குறிப்பிட்ட நடிகர் நடிகைகளின் பெயரைச்சொல்லி சூப்பராக நடனம் ஆடினார்கள் என்றுதான் சொல்வார்கள். அது இயல்பான ஒன்றுதான். ஆனால் சம்பமந்தப்பட்ட ஹிரோவோ ஹீரோயினோ எங்களை தனிப்பட்ட முறையில் அழைத்துப் பாராட்டுவார்கள். இதுதான் எங்களுக்குப் பெரிய மகிழ்ச்சியாக இருக்கும். ஜோதிகா என்னைப் பற்றி பல மேடையில் பாராட்டி பேசியிருக்கிறார். நான் ராஜூ சுந்தரம் மாஸ்டரிடம் உதவி இருக்கும் போது நடன இயக்குநராக ஜோதிகாவிற்கு நிறையப் படங்களில் நடனம் சொல்லிக்கொடுத்திருக்கிறேன்.  இதற்காக அவரிடமிருந்து நிறைய அன்பளிப்புகளைப் பெற்றிருக்கிறேன். சூர்யா என்னைப் பற்றி பெருமையாகப் பல மேடைகளில் பேசியிருக்கிறார். அதனால் எனக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என்றுதான் சொல்வேன். மற்றவர்களுக்கு அது கிடைத்திருக்கிறதா என்றால் அது குறைவே.

பாடலுக்கான நடன அசைவுகளையும் காட்சி அமைப்பையும் யார் முடிவு செய்வது?

இயக்குநர் ஒரு கதையின் சூழலைச்சொல்லுவார். அதற்கான பாடலையும் கேட்கும் போது அதற்கு இந்த வகையிலான நடனத்தை வைக்கலாம் என்று நாங்கள் யோசனை சொல்லுவோம். அதில் இயக்குநர் சொல்லும் சில விஷயங்களையும் சேர்த்து அந்த நடனத்தின் தன்மை அமையும். பரதம் கலந்தோ, கதக் கலந்தோ அமையும். இப்போது "சுஃபியும் சுஜாதாவும்' படத்தில் ஹிரோயின் அதிதிராவ்  கதக் நடன கலைஞராக வருகிறார். அதனால் படத்தில் கதக் நடனத்தின் அனைத்து தன்மைகளையும் நாம் கொண்டு வரமுடியும். அதே போல ஆந்திராவில் எடுக்கப்படும் ஒரு படத்திற்கு அந்த மக்கள் எந்த மாதிரியான நடனத்தை விரும்புகிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ற நடனத்தை அமைக்க வேண்டும். 

இன்றைய திரைப்படங்களில் குழு நடனத்தின் நிலை எப்படியிருக்கிறது?

ரொம்பவும் பரிதாபமாக இருக்கிறது. இன்றைக்கு நிறையப் படங்களில் பாடல்களே வைப்பதில்லை. அப்படி வைத்தாலும் அது கதைக்களத்தோடு இருக்கும் பாடலாக வந்து விடுகிறது. படத்தின் பட்ஜெட்டை காரணமாக வைத்துப் பாடல்களைதான் நீக்குகிறார்கள். இதனால் நடனக்கலைஞர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. அவர்களுக்கு வேலையும் கிடைப்பதில்லை. அந்தக் காலத்தில் ஒரு படத்தில் ஐந்து பாடல்கள் என்றால் அதில் நான்கு பாடல்கள் நடனப் பாடல்களாக இருக்கும். ஆனால் இன்று அப்படியில்லை. அதிலும் நன்றாக நடனம் ஆடும் நட்சத்திரங்கள் வருடத்திற்கு ஒரு படம் இரண்டு படமோதான் நடிக்கிறார்கள். இதனால் படங்கள் குறைகிறது.  இதனால் பாடல்கள் இல்லாமலேயே படம் எடுத்தால் என்ன என்கிற சிந்தனை மற்றவர்களுக்கும் வந்து விட்டது. இயக்குநர்  ஷங்கர் போன்றவர்கள்  பாடல்கள் மூலம் ரசிகர்களை ஈர்த்து விடுகிறார்கள். பாடல்கள் குறைந்து கொண்டே வந்தால் நடனக்கலைஞர்களின் வாழ்க்கை ரொம்பவும் கஷ்டம்தான். 

குழு நடனத்தில் இருக்கும் பலரின் நிலை எப்படியிருக்கிறது?

எல்லோரும் மாஸ்டர் ஆக நினைத்துதான் இந்தத் துறைக்கு வருகிறார்கள். அதில் சிலருடைய ஆசை மட்டும்தான் நிறைவேறுகிறது. சிலருக்கு உடல் ஒத்துழைக்காது, சிலருக்குக் குடும்பச் சூழல் அவர்களைத் தடுக்கும். சிலர் தாங்களாகவே வேறு துறைக்குப் போய் விடுகிறார்க்ள். இப்படிப் பல சூழல் இருக்கிறது.. ஆனால் சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கும் அனைவரும் எங்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்கள்தான். 

சொல்லிக்கொடுக்கும் நடன அசைவுகளை எளிதாகப் புரிந்து கொண்டு ஆடும் நட்சத்திரங்கள் யார்?

என்னைப்பொருத்தவரைக்கும் எப்போதுமே விஜய் தான். அப்புறம் ஜோதிகா. இப்போது அதிதிராவ்  நன்றாக ஆடுகிறார்.பல நாயகிகள் நடனத்தை முறையாக கற்றுக்கொண்டுதான் வருகிறார்கள். என்னுடைய ஆல்டைம் பேவரிட் சிம்ரன் தான். நடனம் என்றால் அவ்வளவு இஷ்டம் அவருக்கு.. இன்று சமந்தா, தமன்னா, ஸ்ரேயா ஆகியோர் நன்றாக ஆடக்கூடிய நடிகைகளாக இருக்கிறார்கள். 

நீங்கள் இயக்குநராகும் திட்டம் இருக்கிறதா?

கண்டிப்பாக நான் படங்கள் இயக்குவேன். குழு நடனக்கலைஞராக சினிமாவில் நுழைந்து நடன இயக்குநரான ஷோபி மாஸ்டரை காதலித்து திருமணம் செய்தேன்.  நிறைவாக உணர்கிறேன். இனி அடுத்து இயக்குநராக படங்கள் இயக்க வேண்டும். அந்தப்படத்தில் வித்தியாசமான நடனத்தை வைக்க வேண்டும். அதிலும்  கமல்ஹாசன் போல் புதுமைகள் செய்ய வேண்டும் என்று ஆசை இருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.