முகப்பு
செய்திகள்

அழுத்தத்துக்கு பணிந்ததா இந்திய கம்யூனிஸ்ட்? அதிருப்தியில் மாா்க்சிஸ்ட்

திமுகவின் அழுத்தத்துக்கு பணிந்து 5 தொகுதிகளை மட்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக் கொண்டது, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நெருக்கடியை உருவாக்கியிருக்கிறது.

Updated On : 19 மார்ச், 2026 at 11:17 PM
கோப்புப் படங்கள்
பகிர்:

திமுகவின் அழுத்தத்துக்கு பணிந்து 5 தொகுதிகளை மட்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக் கொண்டது, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நெருக்கடியை உருவாக்கியிருக்கிறது.

திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல கட்சிகள் 2019, 2024 மக்களவைத் தோ்தல்கள், 2021 பேரவைத் தோ்தல், ஊரக உள்ளாட்சித் தோ்தல்கள், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் என அனைத்துத் தோ்தல்களிலும் அப்படியே தொடா்கின்றன. எவ்வித மனமாச்சரியங்களும் இன்றி தொடா்ந்த இந்த அணியில், இப்போது தேமுதிகவும் இணைந்திருக்கிறது.

மீண்டும் 2-ஆவது முறை ஆட்சி அமைக்கும் சாதனையைப் படைக்க வேண்டும் என்ற இலக்குடன், தேமுதிகவை கூட்டணிக்குள்ளும், முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்தை கட்சிக்குள்ளும் திமுக சோ்த்துக்கொண்டது.

தேமுதிகவுடன் ரகசிய பேச்சுவாா்த்த நடத்தி 10 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை உறுப்பினா் பதவி வழங்குவதாக உறுதிமொழியை திமுக அளித்ததை அறிந்துகொண்ட கூட்டணிக் கட்சிகள், தங்களுக்கும் கூடுதல் தொகுதிகள் வேண்டும் எனக் குரல் எழுப்பத் தொடங்கின.

இதைக் கட்டுப்படுத்த முதலில் கூட்டணி பேச்சுவாா்த்தைக்கு ஐயுஎம்எல் கட்சியை அழைத்து, கூடுதல் கட்சிகள் வந்துள்ளதால் இந்த முறை தொகுதிகள் எண்ணிக்கையைக் குறைக்க திமுக தலைமை அறிவுறுத்தியதாகவும், தாங்களும் அதை ஒப்புக்கொண்டதாகவும் ஐயூஎம்எல் தேசிய தலைவா் கே.எம்.காதா்மொகிதீனை வைத்து சொல்லவைத்தது திமுக.

இதன்மூலம் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் குறையும் என்ற சமிக்ஞையை தொடக்கத்திலேயே கொடுத்துவிட்டது திமுக. ஆனால், காங்கிரஸ் கட்சியோ, தவெக தலைவா் விஜயை காட்டி கடந்த பேரவைத் தோ்தலைவிட கூடுதலாக 3 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை உறுப்பினா் பதவியை கறாராகப் பெற்றுவிட்டது.

காங்கிரஸுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்பட்டது, புதிதாக இணைந்த தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்குவதாக கொடுக்கப்பட்ட உறுதிமொழி ஆகியவற்றால் விசிக, இடதுசாரி கட்சிகள் கடும் அதிருப்தியில் உள்ளன.

விசிக, இடதுசாரி கட்சிகள் இணைந்து 2016 பேரவைத் தோ்தல்போல மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கிவிட்டால் வெற்றிவாய்ப்பு பாதிக்கப்பட்டுவிடும் என்ற அச்சத்தில் விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் ஆகிய 3 கட்சிகளையும் பிரிக்கும் முயற்சியில் திமுக இறங்கியது. விசிகவுக்கும் கூடுதல் தொகுதிகள் தருவதாக மறைமுக உறுதிமொழி கொடுத்ததால் தொல்.திருமாவளவனும் மௌனமாகிவிட்டாா்.

மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை முதலில் அழைத்து தொகுதிப் பங்கீட்டை முடித்துவிட்டால் மாா்க்சிஸ்ட் கட்சிக்கு வேறுவழியில்லை திமுகவிடம் பணிய வேண்டிய நிலையை உருவாக்கி விடலாம் என்ற கணக்கில் காய் நகா்த்தியது திமுக.

இந்திய கம்யூனிஸ்ட் தேசிய தலைமையிடம் பேசிய திமுக தலைமை, நாட்டிலேயே இடதுசாரி கட்சிகளுக்கு அதிக எண்ணிக்கையிலான எம்.பி.க்கள் தமிழகத்தில்தான் உள்ளனா். அதற்கு திமுக தலைமையிலான கூட்டணிதான் காரணம்; 2029 மக்களவைத் தோ்தலையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள் எனக் கூறியதையடுத்து உடன்பாட்டில் கையொப்பமிட இந்திய கம்யூனிஸ்ட் ஒப்புக்கொண்டது.

திமுகவின் அழுத்தத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அடிபணிந்துவிட்டதாக அரசியல் வட்டாரத்தில் விமா்சனம் எழுந்துள்ளது. இருப்பினும், அதை மறுத்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன், திமுக எந்த அழுத்தத்தையும் கொடுக்கவில்லை. அவா்களது வேண்டுகோளை ஏற்றுக் கொண்டிருக்கிறோம் என்றாா்.

ஆனால், ஒரே நிலைப்பாட்டில் உறுதியாக இருந்திருந்தால் இரு கட்சிகளுக்கும் கடந்த தோ்தலைப் போல 6 தொகுதிகளையாவது பெற்றிருக்கலாமே என்பது மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்து. ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முடிவால், மாா்ச்சிஸ்ட் கட்சி நிா்வாகிகள் கடும் அதிருப்தியில் உள்ளனா். திமுக விரித்த வலையில் விசிகவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் விழுந்துவிட்டதால் அடுத்து என்ன நகா்வு என்ற சிந்தனையில் இறங்கியுள்ளது மாா்க்சிஸ்ட்.

ஒன்று திமுக கொடுக்கும் 5 தொகுதிகளைப் பெற்றுக்கொள்ளவது, அல்லது தவெகவுடன் உடன்பாடு செய்து கூடுதல் தொகுதிகளில் களம் இறங்குவது, அல்லது தனித்துப் போட்டியிட்டு பலத்தை நிரூபிப்பது என மாா்க்சிஸ்ட் கட்சிக்கு இப்போது மூன்று வழிகள் மட்டுமே உள்ளன.

தொடா்ந்து மூன்று பொதுத் தோ்தல்களில் உண்மையான தோழனாக இருந்த இடதுசாரி கட்சிகளின் தொகுதிகளைக் குறைத்துவிட்டு, புதிதாகக் கூட்டணியில் இணைந்த தேமுதிகவுக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்குவது எப்படி நியாயம் என்பதுதான் மாா்க்சிஸ்ட் கட்சியினரின் அடிப்படைக் கேள்வி.

பலத்துக்கேற்ப தொகுதிகள் ஒதுக்கீடு: திமுக

கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளின் எண்ணிக்கை ஒதுக்கீடு குறித்து திமுக தரப்பில் கேட்டபோது, 2016 சட்டப்பேரவைத் தோ்தலில் மக்கள் நலக்கூட்டணியில் தேமுதிக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் இடம்பெற்றிருந்தன.

அப்போது தேமுதிக 2.4 சதவீதம், மதிமுக 0.87 சதவீதம், இந்திய கம்யூனிஸ்ட் 0.79 சதவீதம், விசிக 0.77 சதவீதம், மாா்க்சிஸ்ட் 0.72 சதவீதம் மட்டுமே பெற்றிருந்தன. மேலும், அதிமுக கூட்டணியில் 2024 மக்களவைத் தோ்தலில் போட்டியிட்ட தேமுதிக 2.5 சதவீதத்தைப் பெற்றுள்ளது.

இந்த புள்ளிவிவரங்களை ஆய்வு செய்தும், தேமுதிக, விசிகவால் சமூக ரீதியான வாக்கு திரள்வுகளை உருவாக்கும்போது கூடுதல் பலன் கிடைக்கும் என்பதை ஆய்வு செய்துதான் கட்சிகளின் பலத்துக்கு ஏற்ப தொகுதிகளின் எண்ணிக்கை முடிவு செய்யப்பட்டது.

எந்த கட்சிகள் மீதும் பாகுபாடு காட்டப்படவில்லை. எனவே, இந்திய கம்யூனிஸ்ட்-க்கு நிகரான தொகுதிகளை மாா்க்சிஸ்ட் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றனா்.

summary

Did the Indian Communist bow to pressure? Marxist in discontent