இந்திய சுதந்திரப் போராட்டத்தில் அல்லயன்ஸ்!
இந்தியா தனது 75-ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வேளையில், அதில் நமது சென்னைக்கும் தமிழ்நாட்டுக்கும் முக்கியமான பங்களிப்பு உண்டு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
ஞாயிறு கொண்டாட்டம்இந்திய சுதந்திரப் போராட்டத்தில் அல்லயன்ஸ்!
இந்தியா தனது 75-ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வேளையில், அதில் நமது சென்னைக்கும் தமிழ்நாட்டுக்கும் முக்கியமான பங்களிப்பு உண்டு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
இந்தியா தனது 75-ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வேளையில், அதில் நமது சென்னைக்கும் தமிழ்நாட்டுக்கும் முக்கியமான பங்களிப்பு உண்டு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. சொல்லப்போனால், காங்கிரஸ் பேரியக்கம் தொடங்குவதற்கான பிள்ளையார் சுழி சென்னையில்தான் போடப்பட்டது. அதுவும் மையிலாப்பூரில்...
சென்னை மயிலாப்பூரில் இருந்த திவான் பகதூர் ரகுநாத ராவ் வீட்டில் மெளலானா அபுல் கலாம் ஆசாத் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்தான், 1885-ஆம் ஆண்டு காங்கிரஸ் பேரியக்கம் தொடங்குவது என்று முடிவு எடுக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாகத்தான் 1886 -இல் முதல் காங்கிரஸ் மாநாடு மும்பையில் (பம்பாய்) கூடியது.
ரகுநாத ராவ் வீட்டிற்கு (தற்போது விஸ்வ கமல் அபார்ட்மெண்ட்ஸ்) அடுத்த கட்டடத்தில்தான் அல்லயன்ஸ் குப்புஸ்லாமி ஐயரின் வீடு இருந்தது. இப்போது அங்கே அல்லயன்ஸ் நிறுவனம் உள்ளது. அதன் முன்பக்கம் இருந்த திண்ணையில் காங்கிரஸ் பிரமுகர்கள் அமர்ந்து பேசுவார்கள். அப்படித்தான் தொடங்கியது இந்திய விடுதலை இயக்கத்துடனான "அல்லயன்ஸ்' நிறுவனத்தின் தொடர்பு.
குப்புஸ்வாமி ஐயர், தேசியப் போராட்டம் தொடர்பான நூல்களை ஏராளமாக வெளியிடத் தொடங்கினார். 1896-ஆம் ஆண்டு முதற்கொண்டே அல்லயன்ஸ் நிறுவனர் வி.குப்புஸ்வாமி ஐயர் தேச பக்தர்கள் வரலாற்றை சிறு சிறு புத்தகங்களாக வெளியிட்டு வந்தார். இளைஞர்களிடையே இந்த நூல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. 1901-ஆம் ஆண்டு அல்லயன்ஸ் கம்பனியை நிறுவி, தொடர்ந்து தேசியம் சம்பந்தமான நூல்களையும், தேசிய தலைவர்களின் வரலாற்று நூல்களையும் வெளியிட்டு வந்தார்.
இந்தியாவின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டு சம்பவங்களையும் விடாமல் தமிழில் புத்தகங்களாக வெளியிட்டு வந்தார். அப்போது அல்லயன்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஹரிபுரா காங்கிரஸ், திரிபுரா காங்கிரஸ், நாகபுரி காங்கிரஸ் தொடர்பான புத்தகங்கள் இன்றளவும் ஆவணங்களாகத் திகழ்கின்றன.
தேசத் தலைவர்களுடன் நெருங்கிப் பழகிய பத்திரிகையாளர்கள் அல்லது எழுத்தாளர்களைக் கொண்டு எழுதப்பட்டு வெளியிடப்பட்டதால், இந்த நூல்களின் நம்பகத்தன்மை மேம்பட்டது. மேலும் இந்த நூல்களை எழுதியவர்களும் தேசியத்தின் மீது உண்மைப் பற்றுக் கொண்டிருந்தனர்.
"தினமணி' நாளிதழின் முன்னாள் ஆசிரியர் டி. எஸ். சொக்கலிங்கம், எம்.எஸ். சுப்பிரமணியம், சுந்தர ராகவன் போன்ற பல எழுத்தாளர்கள் இதில் அடங்குவர்.
""தேசசேவை ஒன்றையே கருத்தில் கொண்டு வெளியிடப்பட்ட இந்நூல்கள், பொருளாதார நெருக்கடியைத் தந்தாலும், மன நிம்மதியைத் தந்தது என்பார்'' "அல்லயன்ஸ்' குப்புஸ்வாமி ஐயர். அதைக் கேள்வியுற்ற ராஜாஜி, தன்னுடைய எழுத்துக்களை - எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் - வெளியிட அனுமதி வழங்கினார். ராஜாஜி எழுதிய புத்தகங்களுக்கு மிகப் பெரிய வரவேற்பு இருந்ததால், "அல்லயன்ஸ்' வெற்றிப் பாதையில் நடைபோடத் தொடங்கியது.
1937-இல் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் அனுமதியுடன், அவர் எழுதிய "இளைஞனின் கனவு', "புது வழி' என்ற இரண்டு நூல்களைத் தமிழில் பிரசுரித்தது "அல்லயன்ஸ்'. அந்தச் சமயத்தில் சென்னை வந்த சுபாஷ் சந்திர போஸ், ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தார்.
அப்பொழுது குப்புஸ்வாமி ஐயரின் மகன் கே.வி.எஸ். மணி நேதாஜியை சந்தித்து நூல்களின் ஃபைனல் புரூஃபை காட்டுவதற்காக அங்கு சென்றிருந்தார். நேதாஜியைச் சந்தித்து விட்டுத் திரும்பும்போது, அவரும் வெளியே வந்தார். குதிரையின் மீது அமர்ந்து கிளம்புவதற்குத் தயாரானாராம் நேதாஜி.
கட்டுக்கடங்காத கூட்டம். "வந்தே மாதரம்' என்கிற வானைப் பிளக்கும் கோஷம். சும்மா விட்டார்களா வெள்ளையரின் போலீஸ்..? தடியடி ஆரம்பித்து விட்டனர். சுபாஷ் போஸ் உட்காந்திருந்த குதிரையின் முன்னங்காலில் பெரிய தடியால் அடித்தனர். குதிரை சரிந்து கீழே விழ, சுபாஷ் போஸூம் சரிந்தார். இதைப் பார்த்த தேச பக்தர்களுக்கு ஆவேசம் பொங்கி, திருப்பித் தாக்கத் தொடங்கினர். போர்க்களமானது ராயப்பேட்டை.
பின்பு அந்த இரண்டு நூல்களை குப்புஸ்வாமி ஐயர் வெளியிட்டார். அரசு அதற்குத் தடை விதித்துவிட்டது. ஆனால், தடை வருவதற்கு முன்பே இரண்டு நூல்களின் பிரதிகளையும் சிலோன், சிங்கப்பூர், மலேசியா, பர்மா ஆகிய இடங்களுக்கு அவர் அனுப்பிவிட்டிருந்தார்.
அதனால், சுபாஷ் போஸ் மலேசியா சென்றிருந்த போது, அவரது அன்பர்கள் இந்த நூல்களை இலவசமாக அச்சிட்டு அங்கிருந்த தமிழர்களுக்கெல்லாம் வழங்கினார்களாம். அதன்மூலம் சுபாஷ் போஸின் மீது பற்று ஏற்பட்ட ஏராளமான தமிழர்கள் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்தனர் என்பார்கள். நேதாஜியிடம் "டைப்பிஸ்ட்' ஆக இருந்த அமீர் ஹம்சா என்ற பெரியவர், உணர்ச்சிப்பூர்வமாக இதைப் பலமுறை சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.
இதேபோல் பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய "ஆனந்த மடம்' என்ற நூலையும் "அல்லயன்ஸ்' கம்பெனி தமிழில் வெளியிட்டவுடன் தடைசெய்தனர். ஏனெனில், "வந்தே மாதரம்...' என்ற தாரக மந்திரத்தை எழுப்பியது இந்த நூல்தான்.
பாபு ராஜேந்திர பிரசாத் அவர்களது வாழ்க்கை வரலாற்று நூலை வெளியிடும் போது, பாபு அவர்கள் சென்னைக்கு வந்திருந்தார். அவருக்கு நேர அவகாசம் இல்லாமையால் ரயில் வண்டியில் இருந்து இறங்கியவுடன், பிளாட்பாரத்திலேயே நூலை வெளியிட்டு "அல்லயன்ஸ்' நிறுவனத்தை கெளரவப்படுத்தினார் ராஜேந்திர பிரசாத்.
"கவியரசி சரோஜினி தேவி' என்கிற நூலை, கவியரசி சென்னைக்கு வந்திருந்தபோது வெளியிட்டபோது, "அல்லயன்ஸ்' குப்புஸ்வாமி ஐயருக்கு வெண்முத்து ஒன்றை பரிசாக வழங்கினார் அவர். அப்போது அது பரபரப்பாகப் பேசப்பட்டது.
தியாகியும், எழுத்தாளருமான தி.ஜ.ர. (ரங்கநாதன்) அவர்கள் "ஆசிய ஜோதி ஜவாஹர்' என்ற நூலை எழுதி அல்லயன்ஸ் ஐயர் வெளியிட்டதோடு, அந்த நூலை ஜவாஹர்லால் நேருவுக்கு ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து அனுப்பினர். "வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதுபவர்கள், கட்டாயம் இந்த நூலைப் படிக்கவேண்டும். மிகவும் சுவாரசியமாக எழுதப்பட்டுள்ளது' என்று பாராட்டி நேரு கடிதம் அனுப்பினராம்.
1932 -இல் பிரான்ஸ் பிரதம மந்திரி ரோமெய்ன் ரோலண்டு எழுதிய "மகாத்மா காந்தி' என்ற நூலை அவரது அனுமதியுடன் தமிழில் வெளியிட்டது "அல்லயன்ஸ்'. வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம், சென்னை உப்பு சத்தியாகிரகம் ஆகிய நிகழ்வுகளையும் நூல்களாக வெளியிட்டது "அல்லயன்ஸ்'. இவற்றையெல்லாம் கேள்வியுற்ற நமது தேசத்தந்தை மகாத்மா காந்தி 28. 01.1946 -இல் சென்னை ஹிந்தி பிரசார சபையில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்று, அங்கு அமைக்கப்பட்ட அல்லயன்ஸ் கடைக்கு விஜயம் செய்து - ஒவ்வொரு நூலாகப் பார்த்து - விவரங்களைக் கேட்டறிந்து, குப்புஸ்வாமி ஐயரைப் பாராட்டினார்.
"அல்லயன்ஸ்' குப்புஸ்வாமி ஐயர், தான் நடத்தி வந்த "விவேக போதினி' என்ற மாத சஞ்சிகையில் (1908 - 1932) பால கங்காதர திலகர், மதன் மோகன் மாளவியா, மகாதேவ கோவிந்த ரானடே, மகான் மணி ஐயர், சுப்பிரமணிய ஐயர் போன்ற தேச பக்தர்களின் வரலாறுகளைத் தொடராக வெளியிட்டு, பிறகு புத்தகங்களாகவும் வெளியிட்டார்.
1947 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினத்தன்று, அந்தத் திருநாளைக் கொண்டாட "தேசிய கீதம்' என்ற நூலை அச்சிட்டு இலவசமாக வழங்கியது "அல்லயன்ஸ்'.
தேசிய ஒற்றுமையை வளர்க்கும் வகையில், வங்க மொழியிலிருந்து பங்கிம் சந்திர சட்டர்ஜி, சரத் சந்திர சட்டர்ஜி, ரவீந்திரநாத் தாகூர் நூல்களையும், ஹிந்தி மொழியிலிருந்து முன்ஷி பிரேம்சந்த் எழுதிய நூல்களையும், மராத்தியிலிருந்து காண்டேகர் நூல்களையும் தமிழில் வெளியிட்டார் குப்புஸ்வாமி ஐயர்.
துக்ளக் ஆசிரியர் சோ ராமஸ்வாமி "அல்லயன்ஸ்' பதிப்பகத்தின் நூற்றாண்டு விழாவில் (2001) பேசிய பேச்சு சுவாரஸ்யமானது.
""பேரைப் பாருங்களேன் "அல்லயன்ஸ்!' சாதாரணமா அல்லயன்ஸ் - என்றால் ஒரு எலக்ஷன் வரைக்கும்கூடத் தாங்காது..! நூறு ஆண்டுகள் தாங்கின "அல்லயன்ஸ்'
இந்தியாவிலேயே இது ஒன்றுதான் இருக்கும்..!''
சுதந்திர தினப் பவள விழாவின்போது இதையெல்லாம் நினைவுகூரத் தோன்றுகிறது. விடுதலை வேள்வியுடன் நெருங்கிய தொடர்புடைய நிறுவனம் என்பதால், அதைக் கொண்டாடி மகிழும்
தகுதியும், காரணமும் "அல்லயன்ஸ்' பதிப்பகத்துக்கு நிறையவே உண்டு.