சென்னை எம்.ஜி.ஆர் அரசு திரைப்படக் கல்லூரியில் நான்காம் ஆண்டு படிப்பவர் மாணவர் மணிகண்டன்.இசைக் கருவிகளைப் பற்றி பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து வருகிறார். இவர் சமீபத்தில் எடுத்த "கின்னாரம்' ஆவணப்படம் இசை ஆர்வலர்களின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த ஆவணப்படம் மூலம் நலிந்த இசைக்கலைஞர் ஒருவரையும் உலகிற்கு அடையாளம் காட்டி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
மணிகண்டனிடம் பேசினோம்:
""என்னுடைய சொந்த ஊர் ஈரோடு மாவட்டம். சிறு வயதிலிருந்து இசை ஆர்வம் அதிகம். வீட்டில் சாப்பிடும் தட்டில் தாளம் போடுவேன். பள்ளி மேஜையில் தாளம் போடுவேன். கோயில் திருவிழாக்களுக்கு செல்லும் போதெல்லாம் அங்கு வாசிக்கப்படும் இசைக்கருவிகளை கூர்ந்து கவனிப்பேன். கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும் போதிலிருந்து இசைக்கருவிகளை பற்றி ஆராய்ச்சி செய்யத் தொடங்கினேன். கல்லூரியில் சவுண்ட் இன்ஜினியரிங் படிப்பதால் என்னுடைய பெயரை படிப்புடன் இணைத்து "சவுண்ட்' மணி என்று கூப்பிட ஆரம்பித்தார்கள். இன்று சமூகவலைதளங்களில் "சவுண்ட்' மணி என்ற பெயரைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது.
இசைக்கருவிகளை வாசிக்க கற்றுக்கொள்ள என்னிடம் பணமில்லை. ஆனால் இணையத்தின் உதவியுடன் இசைக்கருவிகளை வாசிக்க கற்றுக்கொண்டேன். இப்போது 60 இசைக்கருவிகளை என்னால் வாசிக்க முடியும். மேலும் தொல்காப்பியம், சிலப்பதிகாரத்தை படித்து 10 இசைக்கருவிகளை நானே செய்து வாசித்து வருகிறேன். சூரிய பிறை, சந்திரபிறை, மழையொளி மூங்கில் போன்ற அரிய இசைக்கருவிகள் நம்முடைய அருங்காட்சியங்களில் தான் பார்க்க முடியும். ஆனால் இவற்றை தயாரிக்கவும் வாசிக்கவும் நூல்களைப் படித்து கற்றுக்கொண்டு இருக்கிறேன். 20 நாட்டுப்புறக் கலைகளை ஆடவும் கற்றுக்கொண்டுள்ளேன். கலைகளின் மீது எனக்கு இருக்கும் ஆர்வத்தைப் பார்த்து தமிழக அரசு இந்த ஆண்டு (2021)எனக்கு சிறந்த தாளவாத்திய கலைஞர் விருதை சுதந்திர தினத்தன்று வழங்கியுள்ளது.
"கின்னாரம்' ஆவணப்படம் பற்றி சொல்லுங்கள்?
செல்போன் மூலம் நாங்கள் பதிவு செய்யும் விஷயங்களை குறும்படமாக எடுப்போம். இந்த கரோனா காலத்தில் நலிந்த இசைக்கலைஞர்களை சந்திப்பதற்காக சென்றேன். திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் பகுதியில் வாழ்ந்து வருபவர் அருணாச்சலம், "கின்னார' தாத்தா என்று அழைக்கப்படுபவர். இவர் பாரம்பரிய தொழிலே இதுதான். கடந்த மூன்று தலைமுறையாக இவரும் இவர் அப்பாவும், அய்யனும் (தாத்தாவும்) இந்த கலையை பாதுகாத்து வருகிறார்கள். இவரை நாங்கள் பார்க்க சென்ற போது பாடல் ஒன்றை பாடி காண்பித்தார். இது கோவலன் -கண்ணகி பாடல்.
இயல் இசை நாடகம் என்பது தொல்பழந்தமிழரின் முத்தமிழ் ஆகும். இம் முத்தமிழின் இலக்கணத்தையும் விளக்கி அகத்துள்பொதிந்து இயற்றப்பட்டதே/எழுதப்பட்டதே சிலப்பதிகாரம் எனும் காப்பியம். இது எழுதப்படுவதற்கு முன்பே பல்லாயிரம் ஆண்டுகாலமாக கதைப்பாடல் வடிவில் பாடப்பட்டுவந்த ஒரு வரலாற்று நிகழ்வே கோவலன் கண்ணகி கதைப்பாடல் .... இது கோவலன்கதை எனும்பெயரில் ஓலைச்சுவடி வடிவிலும் கன்னியாகுமரி பகுதியில் உள்ளதாக கேள்விப்படுகிறோம். ஓலைச்சுவடியிலிருந்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சுவடியியல் புலத்தின் சார்பில் நூலாகவும் தொகுக்கப்பட்டுள்ளது .
அந்தக்கதைப்பாடலை பாணர் மரபில் பாடியும் பாடலாக இசைத்தும் கூத்தயர் பாணர் விறலியர்/மரபில் கூத்து வடிவில் பாடி ஆடி வந்த மரபில் தோன்றியவரே...அருணாசலம் என்பது தெரியவந்தது. இவரைப்பற்றிய ஆவணப்படத்தை நாங்கள் தயாரித்தோம். அதை தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார். "சின்ன பசங்க ஏதோ செய்து இருக்கிறாங்கன்னு, அலட்சியப்படுத்தாமல் ஆர்வமாக கேள்விகள் கேட்டு பாராட்டி ஊக்குவித்தார் அமைச்சர். கின்னாரம் தாத்தாவுக்கு அரசு சார்பில் மாதம் 3 ஆயிரம் ஓய்வூதியமும், தங்குவதற்கு அரசு சார்பில் ஒரு வீடு தருவதாக சொல்லியிருக்கிறார்கள்.
பொதுவாக சவுண்ட் இன்ஜினியிரிங் படிப்பவர்களுக்கு இசை பற்றி பெரிதாக ஆர்வம் இருக்காது. எனக்கு இசையைப்பற்றியும் தெரியும் என்பதால் எதிர்காலத்தில் என்னுடைய தளத்தில் பயணிக்க வசதியாக இருக்கும்.
மேலும் அழிந்து வரும் நம்முடைய கலையை வெளிக்கொண்டு வர வேண்டும். நலிவடைந்த பல கலைஞர்களை பாதுகாக்க வேண்டும். அதுவே நாம் கலையை வளர்க்க செய்யும் சரியான சேவையாகும்'' என்கிறார் மணிகண்டன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.