ஒரு நாட்டின் வளத்திற்கு ஆதாரமாக விளங்குவது நீர்வளம். "நீரின்றி அமையாது உலகு' என்று நீரின் பெருமையைப் பேசுகிறார் திருவள்ளுவர். ஆறு, ஏரி, குளம், கிணறு போன்றவை நமக்கு நீர் வளத்தைத் தருகின்றன.
ஒரு நாட்டின் அரசன் நற்புகழோடு இருக்க வேண்டுமெனில் நீர் நிலைகளை அமைத்து உணவு உற்பத்திக்கு செயல்பட வேண்டும் என்று பாண்டிய நெடுஞ்செழியனைப் பார்த்து குடப் புலவியனார் என்ற புலவர் பாடினார்.
வரலாறு துவங்குவதற்கு முன்பு இருந்தே ஏரிகள், ஆறுகள், மனிதவாழ்வில் முக்கிய இடம் பெறுகின்றன. மனிதன், நாகரீகம் அடையும் முன் இயற்கையாய் அமைந்த ஏரிகள் குளங்களுக்கு அருகில் தன் இருப்பிடத்தை அமைத்துக் கொண்டான். ஆறுகளுக்கு அருகிலே வேளாண்மைத் தொழிலைச் செய்திருக்கின்றான் என்பதற்கு போதிய தொன்மைக் காலச் சான்றுகள் கிடைத்துள்ளன.
மனிதன் எழுதப் படிக்கத் தெரிந்த காலத்தை வரலாற்றுக் காலம் என்கிறோம். இக்காலத்தில் தான் நீர் நிலைகளின் அவசியம் மேலும் உணரப்படுகின்றது. மன்னர்கள் ஒரு கிராமத்தை அமைக்கத் தொடங்கிய பொழுது அவ்வூரில் ஏரி, குளம் ஆகியவற்றை அமைத்தார்கள். குளம் மற்றும் ஏரிகள் ஏற்படுத்திய மன்னர்கள் பெயரால் அவை அழைக்கப்பட்டு வந்தமையும் காண்கிறோம்.
மன்னன் பெயரில் ஏரிகள்:
திருச்சி மாவட்டத்தில், லால்குடி - அரியலூர் சாலையில் புள்ளம்பாடி அருகே ஆலம்பாக்கம் என்ற ஊர் உள்ளது. இவ்வூர் பல்லவ மன்னன் தந்திவர்மன் காலத்தில் அமைக்கப்பட்டடுத்த தந்திவர்ம மங்கலம் என அழைக்கப்பட்டது. இவ்வூரில் உள்ள ஏரியை மார்பிடுகு ஏரி என கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. "மார்பிடுகு' என்பது தந்திவர்மனுடைய பட்டப்பெயராகும். முதலாம் ராசேந்திர சோழனின் கங்கைச் சமவெளி வெற்றி ஒரு மாபெரும் வெற்றியாகக் கருதப்பட்டது.
"கங்கை கொண்ட சோழன்' என்று புகழ் பெற்றான். அதன் நினைவாக "கங்கை கொண்ட சோழபுரம்' தலைநகராக அமையப் பெற்றது. கங்கையிலிருந்து கொண்டு வந்த நீரைச் "சோழகங்கம்' என்னும் பெரிய ஏரியை அமைத்து அதில் கங்கை நீரை ஊற்றி, நீர் நிலையை வெற்றிச் சின்னமாக ஆக்கினான் எனத் திருவாலங்காட்டுச் செப்பேடு கூறுகிறது. இன்று அந்த ஏரி "பொன்னேரி' என அழைக்கப்படுகிறது. வெற்றியின் அடையாளமாக ஏரியை அழைத்தாலும் அவ்வேரிதான் கங்கை கொண்ட சோழபுரப் பகுதி வேளாண்மைக்கு இன்றும் உதவுகிறது.
பல்லவ மன்னன் பரமேசுவர வர்மன் காலத்தில் கூரம் என்னும் கிராமத்தில் "பரமேச்சுர தடாகம்' என்னும் ஏரி அமைக்கப்பட்டது. இதற்குப் பாலாற்றிலிருந்து நீர் கொண்டுவரப் பெரும்பிடுகுக் கால் என்னும் கால்வாய் தோண்டப்பட்டது. மாமண்டூரில் உள்ள ஏரிக்குச் "சித்திரமேக தடாகம்' என்றும் உத்திரமேரூரில் உள்ள ஏரிக்கு "வயிரமேக தடாகம்' என்றும் பெயரிட்டு அழைக்கப்பட்டதாகக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
காஞ்சிபுரம் அருகே உள்ள தென்னேரி காஞ்சிபுரத்தை ஆட்சி செய்த தொண்டைமான் இளந்திரையனால் ஏற்படுத்தப்பட்டு, பின்னர் பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் மேம்பாடு செய்யப்பட்டிருக்க வேண்டும். கசாக்குடி செப்பேடு இவ்வேரியை "திரளயதடாகம்' எனப் பெயரிட்டு அழைக்கிறது. சோழ மன்னர்கள் காலத்தில் திரையன்ஏரி எனவும், விஜயநகர மன்னர்கள் காலத்தில் தாதசமுத்திரம் எனவும் இவ்வேரி அழைக்கப்பட்டு, போற்றி பராமரிக்கப்பட்டதைக் கல்வெட்டுச் சான்றுகளால் அறியமுடிகிறது.
சோழ மன்னன் பராந்தக சோழனுக்கு வீர நாராயணன் என்ற சிறப்பு பெயர் உண்டு. அம்மன்னனால் ஏற்படுத்தப்பட்ட ஏரி வீர நாராயணன் ஏரி ஆகும். இன்று வீராணம் ஏரி (சிதம்பரம் அருகே உள்ளது) என்று அழைக்கப்படுகிறது. பாசன தேவைகளுக்கு மட்டுமன்றி சென்னை நகரின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்வதிலும் வீராணம் ஏரி முக்கிய பங்கு பெற்று விளங்குகிறது. திருவெறும்பூர் கோயில் நிலங்களுக்கு நீர் பாய்ச்சுவதற்காக மதகுடன் கூடிய வாய்க்கால் வெட்டப்பட்டது. இதற்கு "உத்தம சீலி வாய்க்கால்' என்று பெயரிடப்பட்டது. முதலாம் பராந்தக சோழனின் மகன் பெயர் உத்தம சீலி.
கிணறுகள்:
நிலங்களுக்கு நீர் பாய்ச்சக் கிணறுகளும் வெட்டப்பட்டன. இதனைக் "கிணறு தொட்டல்', "கிணறு குழித்தல்' என்றார்கள். கிணறு தோண்ட ஊர்ச்சபை அல்லது அரசு ஆணை பெறவேண்டும் என்பதைத் தண்டந் தோட்டம் செப்பேடுகள் கூறுகின்றன. கிணறுகளுக்கு கூடப் பெயரிட்டு அழைக்கப்பட்டதை அறிய முடிகிறது. திருவெள்ளறையில் உள்ள கிணறுக்கு "மார்ப்பிடுகு பெருங்கிணறு' என்று பெயர். கோப்பெருஞ் சிங்கனுடைய திருவண்ணாமக் கல்வெட்டில் குளம் ஒன்று "தமிழ்நாடு காத்த பெருமாள்' என்று பெயரிட்டும் கிணறு ஒன்று "வடிவாள் வல்ல கிணறு' என்றும் அழைக்கப்பட்டன.
ஆற்றுக்கால்:
கிராமம் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட போது அங்குப் பல வாய்க்கால்கள் புதிதாக வெட்டப்பட்டன. இவற்றுக்கு கணபதி, சரசுவதி, சுப்பிரமணிய என்ற தெய்வங்களின் பெயரிட்டு அழைக்கப்பட்டன. இவை ஏரியிலிருந்து நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்குப் பயன்படும் வாய்க்கால்களாக விளங்கியிருக்கின்றன. ஆற்றிலிருந்து வரும் வாய்க்காலுக்கு ஆற்றுக்கால் என்று பெயர். இதன்வழியே நீர் ஏரிக்குச் சென்று பாயும். இதில் ஏற்றம் அமைத்து நீர் இறைக்கக் கூடாது என்ற கட்டுப்பாடும் இருந்திருக்கிறது.
பாண்டிய நாட்டில் வைகை ஆற்றிலிருந்து பிரியும் வாய்க்காலை அரிகேசரி பராங்குச மாறவர்ம பாண்டியன் (650 - 700) அமைத்தார். அது அவ்வாய்க்காலுக்கு "அரிகேசரி' என்று பெயரிடப்பட்டிருந்தது. ஏரிகளுக்கு இவ்வாறு வைகை நீரை கொண்டு சென்றதால் ஆறு பல தலைக்கண்டவர் என்று பெயர் பெற்றதாக செப்பேடுகள் புகழ்ந்து கூறுகின்றன.
ஏரிகளின் கரைகள் உயர்த்தப்பட்டன. கடல் போலக்குளம் பலவின் கரை உயர்த்தியும் எண்ணிறந்த தடாககங்களை இயற்றுவித்தும் என்று பாண்டிய மன்னர்களை தளவாய்ப்புரச் செப்பேடு கூறுகிறது.
வாய்த்தலை:
பெரிய ஆற்றிலிருந்து கிளை ஆறுகள் வெட்டப்பட்டன. இந்தக் கிளை ஆறுகளின் தலைப்பு வாய்த்தலை எனப்பட்டது. திருச்சிப் பகுதியில் பேட்டை வாய்த்தலை என்று ஊரின் பெயரே உள்ளது. இங்கு உய்ய கொண்டான் வாய்க்காலின் தலைப்பு மூன்றாம் இராசராசன் காலத்தில் அமைக்கப்பட்டது என்பதை இங்குள்ள கல்வெட்டால் அறிய முடிகிறது.
தலைவாய் சான்றோம்:
திருச்சி - கரூர்ச்சாலையில் காவிரி ஆற்றின் கரையில் அல்லூர் என்ற ஊர் உள்ளது. இவ்வூர்க் கோயிலில் உள்ள கல்வெட்டு தலைவாய் சான்றோம் என்ற அமைப்பினைப் பற்றிக் கூறுகிறது. காவிரி ஆற்றிலிருந்து பிரிந்து வரும் ஆறு, வாய்க்கால் போன்றவற்றின் நீர்ப் பாசனப் பணிகளைக் கவனித்து முறைப்படுத்தி பாசன வசதிகளை செய்து வந்தனர் என்பதை அறிய முடிகிறது.
ஆற்று வாரியம் :
பண்டைத் தமிழகத்தில் கிராம நிர்வாகத்தை ஊர்ச் சபைகள் கவனித்து வந்தன. கிராமத்தின் பல்வேறு பணிகளைக் கவனிக்கப் பல்வகை வாரியங்கள் இருந்தன. திருச்சி மாவட்டத்தில் திருவெறும்பூருக்கு அருகில் உய்யக்கொண்டான் ஆற்றின் கரையில் சோழமாதேவி என்ற கிராமம் உள்ளது. இவ்வூர்க் கோயிலில் உள்ள கல்வெட்டில் உய்ய கொண்டான் "ஆற்று வாரியம்' என்ற அமைப்பு குறிப்பிடப்படுகிறது. இவ்வமைப்பு உய்ய கொண்டான் வாய்க்காலில் வரும் நீரை பயன்படுத்திக் கொள்ள உதவியது.
திருச்சி - புதுக்கோட்டைச் சாலையில் ஒரு பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் பழமையான குமிழி ஒன்று உள்ளது.இதில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டால் ராசகேசரி எனப்படும் ஆதித்த சோழன் காலத்தில் குண்டூரைச் சேர்ந்த பெருந்தட்டான் மாறன் குவாவன் என்பவனால் இது செய்து அமைக்கப்பட்டது என அறிய முடிகிறது.
இம்மாவட்டத்தில் திருமழபாடிக்கு அருகே செம்பியன் மாதேவி பேரேரி என்ற பெயரில் ஓர் ஏரி இருந்தது. இந்த ஏரியில் ராஜராஜன் தூம்பு என்ற பெயருடைய மதகு இருந்தது. இம்மதகு வழியாகச் சென்ற வாய்க்கால் "ராஜராஜன் வாய்க்கால்' என்று அழைக்கப்பட்டதையும் அறிகிறோம்.
ஏரி வாரியம் :
பண்டைக்காலத்தில் ஏரிப் பராமரிப்பு மிகவும் இன்றியமையாத ஒன்று. காவேரிப்பாக்கம், திருப்பாற்கடல், உக்கல் போன்ற ஊர்களின் கோயில்களில் காணப்படும் கல்வெட்டுகளில் "ஏரி வாரியம்' "ஏரி வாரியப் பெருமக்கள்' பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. ஏரியைச் செப்பனிடும் பணி, "ஏரி வாரிய பெருமக்களிடம்' தரப்பட்டது. ஆண்டுதோறும் ஏரியை ஆழமாக்கிக் கரையை பலப்படுத்தும் பணியை இவர்கள் செய்து வந்துள்ளனர்.
ஏரி பராமரிப்பு :
ஏரியை ஒவ்வோர் ஆண்டும் ஆழப்படுத்த வேண்டும். இத்தகைய ஏரிப் பராமரிப்பு பற்றிய செய்திகளைப் பல கல்வெட்டுகள் சுவையுடன் கூறுகின்றன. அதே சமயம் அச்செய்திகள் நமக்கு வியப்பும் அளிக்கின்றன.
திருவையாறு அருகில் உள்ள திருப்பழனம் கோயில் கல்வெட்டில் "கரிகாலக் கரை' என்று காவிரி ஆற்றின் கரை குறிப்பிடப்படுகிறது. மேலும் "காவிரிக் கரை விநியோகம்' என்ற வரி திருப்பாம்புரம் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. காவிரிக்கரையைப் பலப்படுத்துவதற்காக இவ்வரி விதிக்கப்பட்டிருக்கலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் தமிழகத்தில் ஏரிகள், குளங்கள் நிறைந்த மாவட்டம் . தூம்பு குமிழி அமைத்தவர்களின் பெயர்கள், ஏரிகள் பாதுகாக்கப்பட்ட முறை போன்ற பல செய்திகளைத் தருவதில் இம்மாவட்டக் கல்வெட்டுகள் சிறப்பிடம் பெறுகின்றன.
மக்கள் தம்மிடையே கருத்து வேற்றுமை வந்தால் ஊரில் பொதுவாக இருக்கும் கிணறு, ஏரி, ஏரிக்கரையில் இருக்கும். மரங்கள், சாலைகள், வயல்களுக்கு செல்லும் வாய்க்கால்கள் ஆகியவற்றுக்கு எவ்விதச் சேதமும் செய்யக்கூடாது. மீறியவர்கள் கடும் தண்டனை பெறுவார்கள்' என மூன்றாம் குலோத்துங்கனுடைய கீரனூர்க் கல்வெட்டுக் கூறுகிறது.
அக்காலத்தில் நீர்ப்பாசன அமைப்புகளைப் பாதுகாத்து பொதுச் சொத்துக்களையும் எப்படி கண்காணித்தனர் என்பதையும் அறிந்து வியக்க முடிகிறது.
தொல்லியல் துறை (ஓய்வு) சென்னை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.