ஞாயிறு கொண்டாட்டம்

வரலாற்று சான்றுகளான மணிக்கூண்டுகள்!

சென்னை மாநகரில் ஆங்காங்கே நிறுவப்பட்டுள்ள மணிக்கூண்டுகள் வரலாற்று சான்றுகளாக காட்சியளிக்கின்றன.

வனராஜன்


சென்னை மாநகரில் ஆங்காங்கே நிறுவப்பட்டுள்ள மணிக்கூண்டுகள் வரலாற்று சான்றுகளாக காட்சியளிக்கின்றன. நூறு ஆண்டுகளுக்கு முன்னால் கைக்கடிகாரம் என்பது விலையுயர்ந்த பொருளாக இருந்தது. சிலரால் மட்டுமே வாங்கிப் பயன்படுத்தக் கூடிய பொருள்களில் ஒன்றாகவும் இருந்தது. அப்போது, பொதுமக்களின் பயன்பாட்டுக்காக நகரின் முக்கியப் பகுதிகளில் அமைக்கப்பட்டதுதான் மணிக்கூண்டுகள்.

மணிக்கூண்டு என்பது, பொதுவாக நான்கு திசைகளிலும் இருந்து பார்க்கக்கூடிய வகையில் அதன் நான்கு பக்கங்களிலும் கடிகாரம் பொருத்தப்பட்ட ஒரு கோபுரம் ஆகும்.

சென்னையில் நான்கு மணிக்கூண்டுகள் பிரபலமானவை. ராயப்பேட்டை, டிமெல்லோஸ் சாலை, டவுட்டன் மற்றும் தங்க சாலையில் இந்த மணிக்கூண்டுகள் அமைந்திருந்தன. இது தவிர எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையம், பி.ஆர் & சன்ஸ், சென்னை மாநகராட்சி இயங்கும் ரிப்பன் கட்டடம் போன்றவற்றில் அனைவரும் பார்க்கும் வண்ணம் மிகப்பெரிய கடிகாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பி.ஆர் & சன்ஸ்

சென்னை அண்ணாசாலை சந்திப்பிலுள்ள மணிக்கூண்டு பி.ஆர் & சன்ஸ் நிறுவனத்திற்குரியது. இது நூற்றாண்டுகளையும் கடந்தது. இதன் திறப்பு விழாவில் இங்கிலாந்து இளவரசர் ஜார்ஜ், அவரை மணக்க இருந்த இளவரசி மேரி மற்றும் அன்றைய சமஸ்தானங்கள் கலந்து கொண்டதாக வரலாறு உண்டு. பிற்காலத்தில் இளவரசர் ஜார்ஜ், ஐந்தாம் ஜார்ஜாகவும், இளவரசி மேரி, ராணி மேரியாகவும் ஆனார்கள்.

பி.ஆர் & சன்ஸ் மணிக்கூண்டில் மூன்று பக்கங்களில் மட்டுமே கடிகாரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கடிகாரத்தில் காட்டப்படும் நேரமும், சென்னை வானிலை ஆராய்ச்சி மையத்தில் உள்ள மணிக்காட்டியின் நேரமும் இணைக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்புகள் உள்ளன.

ராயப்பேட்டை

ராயப்பேட்டை மணிக்கூண்டு 1930-இல் கட்டப்பட்டது. சவுத் இந்தியா வாட்ச் கம்பெனி என அறியப்பட்ட கனி & சன்ஸ் இதிலுள்ள கடிகாரத்தை உருவாக்கினார்கள். கனி & சன்ஸ் நிறுவனத்தை 1909-இல் இரானிய ஹாஜி மிர்சா கனி நமாசி துவக்கினார். இந்த நிறுவனமே பின்னாளில் சூளை, திருவொற்றியூர் போன்ற இடங்களில் நிறுவப்பட்ட மற்ற தனித்த மணிக்கூண்டுகளுக்கான கடிகாரங்களை உருவாக்கியது.

தங்க சாலை

தங்கசாலை மணிக்கூண்டு 1948-இல் திறக்கப்பட்டது. இந்த கோபுரம் 60 அடி உயரமுடையது. இதிலுள்ள கடிகாரம் கனி & சன்ஸ் நிறுவனத்தினர் உருவாக்கியதுதான். 1948 -ஆம் ஆண்டு சென்னை மேயராக இருந்த டாக்டர் யு. கிருஷ்ணா ராவ் இந்த கிளாக் டவரை திறந்து வைத்தார்.

கடிகாரத்தின் ஒவ்வொரு பக்க முகப்பும் அலுமினியத்தால் ஆனது. இந்த கடிகார முகப்புகள் நான்கு அடி விட்டமுடையவை. எடையால் இயங்கும் அமைப்பால் இந்தக் கடிகாரம் இயங்குகின்றது. உள்ளமை இயங்குமுறை இரும்புக் கம்பியால் பிணைக்கப்பட்டுள்ள ஆறு இரும்புத் தட்டுக்களைக் கொண்டுள்ளது; இவை சக்கரச் சங்கிலிகளுக்கு இணைக்கப்பட்டுள்ளன.

இந்த சக்கரங்கள் சுழலும்போது இரும்புத் தட்டுக்களை கீழ்நோக்கித் தள்ளி முகப்பிலுள்ள பித்தளை முள்ளை நகர்த்துகிறது. இந்தத் தட்டுக்கள் தரைநிலைக்கு கீழிறங்கியவுடன் கடிகாரம் இயங்குவது நின்றுவிடுகிறது. இந்தத் தட்டுகள் வாரத்திற்கொருமுறை சாவி கொண்டு மனித முயற்சியால் மேலேற்றப்படுகின்றன. இந்தக் கடிகாரம் பத்தாண்டுகளாக இயங்காமல் இருந்தது. 2013-இல், இந்த சந்திப்பில் தங்கச்சாலை மேம்பாலம் கட்டப்பட்ட பின்னர் மாநகராட்சி இந்த மணிக்கூண்டை புதுப்பிக்க முடிவு செய்தது. ஜனவரி 2014-இல் சென்னை மாநகராட்சி பி.ஓர் & சன்ஸூடன் இணைந்து கூட்டாக புதுப்பித்தனர்.

சென்னைப் பல்கலைக்கழகம்

சென்னை நேப்பியர் பாலத்தை வாகனங்களில் கடக்கும் போது சிவப்பு நிறத்தில் உயரமாக நம் கண்களுக்கு காட்சியளிப்பது சென்னைப் பல்கலைக்கழகத்தின் டவர் கிளாக். 108 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. நான்கு திசைகளிலும் மணி காட்டும். 1913-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மணிக்கூண்டு 27 மீட்டர் உயரம் கொண்டது. சேப்பாக்கம் வளாகத்திலேயே இரண்டாவது உயரமான கட்டடம் இது. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி, சென்னை பல்கலைக்கழகத்தின் மணிக்கூண்டில் மணிக்கு ஒருமுறை திருக்குறள் ஒலிக்கும் புதிய முறையும் தொடங்கப்பட்டது.

மணிக்கூண்டில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு குறள் என்று தினமும் 24 திருக்குறள்கள் பொருளுடன் ஒலிக்கும். இதில் 1330 குறள்களும், விளக்கங்களும் உள்ளன. இது மாணவர்களுக்கு திருக்குறள் மீது ஆர்வம் ஏற்படுத்தும் பொருட்டு கொண்டு வரப்பட்டது. நாளடைவில் இதில் பொருத்தப்பட்டுள்ள கடிகாரம் இயங்காமல் நின்று போனது. திருக்குறளும் ஒலிக்கவில்லை. தற்போது சரிபார்க்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்தின் இந்த மணிக்கூண்டு நூற்றாண்டை கடந்தது. பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் அந்த காலத்திலேயே வடிவமைக்கப்பட்டது. செங்கலுடன் சுண்ணாம்பு, வெல்ல கலவையுடன் கட்டப்பட்டது. நான்கு பெரிய மணிகள் வெவ்வேறு அளவில் இந்த மணிக்கூண்டின் உட்புறம் உள்ளன. இதன் அருகாமையில் தண்ணீர் தொட்டி ஒன்று உள்ளது. அந்த காலத்தில் இந்த மணி ஒலிக்கும் போதெல்லாம் தண்ணீர் தொட்டியிலிருந்து அனைத்து பகுதிகளுக்கு தண்ணீர் சப்ளை செய்யப்படுமாம்.

இப்போது அதிலுள்ள செங்கல்கள் சேதமடைந்து விட்டன. கட்டடம் நீர் கசிய ஆரம்பித்துவிட்டது. மேலும் மணிக்கூண்டின் உள்ளே புறாக்கள் மற்றும் ஆந்தைகள் ஏராளம் வாழ்ந்து வந்தன. தற்போது பணியாளர்கள் அங்கே தூய்மை பணியில் ஈடுபட 50 கிலோ பறவைகளின் கழிவுகள் அகற்றப்பட்டதாக ஆச்சரியமூடன் சொல்கிறார்கள்.

தற்போது பழைமை மாறாமல் இந்த கட்டடத்தையும் மணிக்கூண்டையும் புதுப்பிக்கும் பணியை பொதுபணித்துறையினரும், பல்கலைக்கழக நிர்வாகமும் இணைந்து ஈடுபட்டுள்ளது. இதற்காக ஆகும் செலவு 4.1 கோடி. ஏன் இத்தனை செலவு தெரியுமா? குறிப்பாக ஆங்கிலேயர்கள் பின்பற்றிய முறைப்படி வெல்ல சாறு, எலுமிச்சை சாறு, மணல், நீர் சேர்ந்த கலவையினால் விரிசல் சரி செய்யப்பட்டு வருகின்றன. மணிக்கூண்டின் உள்ளே வயரிங் வேலை முழுமையாக நடைபெற்று வருகிறது. இந்த மராமத்து பணிகள் 2022 -ஆம் ஆண்டு மார்ச் மாதம் முடிவடையுமாம்.

மராமத்து மற்றும் புதுப்பிப்பு பணிகள் முடிந்ததும் மணிக்கூண்டு சரியான நேரத்தை காட்டும். கூடுதல் சிறப்பாக ஒரு மணி நேரத்திற்கு ஒரு குறள் மீண்டும் ஒலிக்கும். சென்னையின் பெருமையை பறைசாற்றும் இது போன்ற வரலாற்று சான்றுகள் புதுப்பிக்கப்பட்டு எப்போது பார்வையிட போகிறோம் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் சென்னை வாசிகள்.

வரலாற்று சான்றுகளான இந்த மணிக்கூண்டுகள் கட்டட வடிவமைப்பிற்கு சான்றாக விளங்குகின்றன. சிறப்பான வடிவமைப்பு, அங்காங்கே மெல்லிய கோடுகள், சிவப்பு நிற செங்கல்கள் வண்ணப் பூச்சு, மிகக்குறைவான பூ வேலைப்பாடுகள் இதன் சிறப்புக் கூறுகளாகும். தொழில்நுட்பத்தின் வளர்ச்சி இதுபோன்ற வரலாற்று சான்றுகள் நம் கண்முன்னே இருந்தும் நாம் அவற்றை பார்க்க மறந்துவிட்டோம்.

படங்கள்: ப. ராதா கிருஷ்ணன்,  உ. ச. சாய் வெங்கடேஷ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஃபர்ஹான் அதிரடி: இங்கிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

கடன் பத்திரங்கள் வாயிலாக ரூ. 5,000 கோடி திரட்டும் கனரா வங்கி!

சுபேதார் டிரைலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

போஸ் பாண்டி பாணியில் படம் பார்க்க அழைத்த ராதிகா!

SCROLL FOR NEXT