முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

ரோஜா மலரே! - 96: மாட்டு வண்டியில் வந்த நடிகை! - குமாரி சச்சு

நான் சொல்லப் போகும் நடிகை உருவத்தில் பிரம்மாண்டமாக இருப்பார். அவர் கதாநாயகியாகவும் நடித்து, பின்னர் நகைச்சுவை வேடத்திலும் தூள் கிளப்பி இருப்பார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:


நான் சொல்லப் போகும் நடிகை உருவத்தில் பிரம்மாண்டமாக இருப்பார். அவர் கதாநாயகியாகவும் நடித்து, பின்னர் நகைச்சுவை வேடத்திலும் தூள் கிளப்பி இருப்பார். வில்லியாகவும் வந்து பயமுறுத்துவார். அந்த நடிகை திரையில் தோன்றினாலே எல்லோரும் சிரித்து விடுவார்கள். அவர் தான் கே. எஸ். அங்கமுத்து.

நான் நடித்த முதல் படம் "ராணி' அதில் அவர் நடித்திருக்கிறார்.பிறகு நடித்த "மருமகள்' படத்திலும் நடித்திருந்தார். "மருமகள்' படத்தில் பத்மினி - என்.டி.ராமாராவ் நடித்தார்கள். அந்தப் படத்தில் ஜூனியர் பத்மினியாக நடித்திருந்தேன். அங்கமுத்துவுக்குப் பெண் குழந்தைகள் என்றால் ரொம்பப் பிடிக்கும். என்னைப் பார்த்ததுமே ஓடி வந்து கட்டிப்பிடித்துக் கொண்டு விடுவார். மெல்லிய தோற்றத்துடன் காட்சி தந்தவர், ஏதோ உடல் உபாதையால் குண்டாகி போய் விட்டார். நடிப்பில் திறமைசாலி. 

அவர் நடித்த பல படங்களில், எனக்குத் தெரிந்தது சில படங்கள் மட்டுமே. நடிகர் சிவாஜி கணேசன் நடித்த முதல் படம் "பராசக்தி'. அந்தப் படத்தில் பழம் விற்பனை செய்பவராக வருவார். சிவாஜியிடம் "கூடையைப் பார்த்துக் கொள், நான் எதிரே உள்ள குழாயில் தண்ணீர் குடித்து விட்டு வருகிறேன்' என்று சொல்வார். தண்ணீர் குடித்து விட்டு, முகத்தைக் கழுவி கொண்டு வருவதற்குள், சிவாஜி பசியினால் கூடையில் இருந்து இரண்டு வாழைப் பழத்தை எடுத்து சாப்பிட்டு விடுவார். "திருடி தின்பது எதற்கு' என்று வசனம் பேசிக் கொண்டு சிவாஜியை பல முறை கையாலேயே அடித்து விடுவார். அதற்குள் புத்தி சரியில்லாத ஒருவர் வந்து, ஒரு சீப்பு வாழைப் பழத்தை எடுத்துக்கொண்டு போய் விடுவார். 

இதைப் பார்த்துக் கொண்டு இருந்த சிவாஜி, "ஒரு பழத்தை சாப்பிட்டதற்கு என்னைத் திட்டி, அடித்தீர்கள். ஆனால் புத்தி சரியில்லாத ஒருவர்  ஒரு சீப்பு வாழைப் பழத்தை எடுத்துக் கொண்டு போனால், நீங்கள் எல்லோரும் பயந்து போய் விடுகிறீர்கள்', என்று வசனம் பேசுவார். இந்தப் படத்தில் அங்கமுத்து, அடிப்பது போன்ற காட்சியில் சிறப்பாக நடித்திருப்பார். "தங்கமலை ரகசியம்'. "மந்திரி குமாரி' படங்களிலும் அவருடைய நகைச்சுவைக்குப் பஞ்சம் இருக்காது. இம்மாதிரி பல படங்களில் அங்கமுத்து சிறப்பாக நடித்திருப்பார். 

இன்றைக்கு சமூக அந்தஸ்து என்றால், கார் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால் அங்கமுத்து ஸ்டூடியோவுக்கு வருவது, கண் கொள்ளா காட்சியாக இருக்கும். அன்று அவர் வீடு இருந்தது தங்கசாலை தெருவில். அன்று இந்த அளவிற்குப் போக்குவரத்து நெரிசல் கிடையாது. அதனால் கோடம்பாக்கத்தில் உள்ள ஸ்டூடியோ வருவது  என்றால், எந்த நேரத்துக்கு வீட்டிலிருந்து புறப்படுவாரோ தெரியாது, ஆனால் சரியான நேரத்துக்குப் படப்பிடிப்புக்கு வந்து விடுவார். அதுவும் மாட்டு வண்டியில். அந்த வண்டிக்கு வர்ணம் பூசி, அலங்காரம் பண்ணி இருப்பார். மாட்டு வண்டியில் வந்த நடிகை என்றால் அவர் ஒருவராகத் தான் இருக்க முடியும்.  

கடைசி வரையில் அங்கமுத்து கார் வாங்கவே இல்லை. அவருடைய பேரன் பிற்காலத்தில் அந்த மாட்டு வண்டியை ஓட்டிக்கொண்டு வருவார். ஒரு கட்டத்தில் தயாரிப்பு நிறுவனங்களின் கார் அவரைப் படப்பிடிப்புக்கு அழைத்து வரும். எல்லோர் இடத்திலும் பாசமாக இருப்பார். சக கலைஞர்களை அங்கமுத்து அம்மா அன்புடன் நடத்துவார். சாப்பிட தின்பண்டங்கள் எடுத்து வருவார். பார்ப்பதற்கு உருவம் பெரியதாக இருந்தாலும் குழந்தை மனசு. ஆனால் வில்லியாக நடிக்கும் போது, வசனம் பேசும் காட்சிகள் இருந்தால் நடிப்பில் பொங்கி எழுந்து விடுவார். சாதாரணமாகவே "அடேய்' என்று கூப்பிட்டால் பலரும் நடுங்கி விடுவார்கள். அவருடைய குரலில் அந்தளவு கம்பீரம் இருக்கும்.  

நாடகத்தில் இருந்து வந்தவர்கள். எம்.ஜி.ஆர் - சிவாஜி கணேசன் இருவரும் அங்கமுத்து அம்மாவுக்கு மிகுந்த மரியாதை கொடுப்பார்கள். நாகேஷ், தேங்காய் சீனிவாசன், போன்ற பிரபல நடிகர்களுடனும் நடித்திருக்கிறார். 

1985-86 காலகட்டம் முக்கியமானது. நகைச்சுவை வேடங்களில் நடித்து வருகிறோம். ஏதாவது வித்தியாசமான வேடங்களைச் செய்யலாம் என்று தோன்றியது. யாரிடமும் வாய்ப்புக் கேட்டதில்லை. வருகிற வாய்ப்புகளில் நினைக்கிற வேடங்களை நடித்தேன். அவை ஒரே மாதிரியாக இருந்தது. என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டு இருந்த போது நல்ல வாய்ப்பு ஒன்று வந்தது. 

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.