முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

ரோஜா மலரே! - 90: வறுமையின் பிடியில் நாடகக்குழு - குமாரி சச்சு

வி.கே.ஆர் அப்படி என்ன தான் சொன்னார் தெரியுமா? ""அந்த ஊரிலேயே உள்ள பெரிய மனிதர்களை, அதாவது மிராசுதார், ஜமீன்தார் போன்ற பணக்காரர்கள், அதிக நிலம் வைத்துள்ளவர்களை, நாங்கள் போய் நாடகம் பார்க்க அழைப்போம்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:17 PM
பகிர்:


வி.கே.ஆர் அப்படி என்ன தான் சொன்னார் தெரியுமா? ""அந்த ஊரிலேயே உள்ள பெரிய மனிதர்களை, அதாவது மிராசுதார், ஜமீன்தார் போன்ற பணக்காரர்கள், அதிக நிலம் வைத்துள்ளவர்களை, நாங்கள் போய் நாடகம் பார்க்க அழைப்போம். அவர்களும் எங்கள் அழைப்பை ஏற்று நாடகம் பார்க்க வருவார்கள். அவர்களுக்கு  விலை உயர்ந்த நாற்காலிகளை முதல் வரிசையில், நடுநாயகமாகப் போட்டு, அவர்களை அதில் உட்கார வைப்பார்களாம். மற்றவர்களுக்கு  பெஞ்ச் அல்லது தரை டிக்கெட். 

அந்தப் பெரிய மனிதர்களும் வந்து நாடகம் பார்த்து விட்டு, இவர்களுக்கு ஏதாவது சன்மானம் கொடுத்துவிட்டுச் செல்வார்களாம். அதை வைத்து இரண்டு நாளைக்கு நல்ல சாப்பாடு கிடைக்கும். இந்த நிலையில், அந்த ஊரில் உள்ள பெரிய மனிதரை கூப்பிடலாம் என்று முடிவு செய்தார்களாம். அதற்குள் அந்த ஊரை சேர்ந்த ஒருவர், ""அந்த பெரிய மனிதர், நாடகம் அல்லது சினிமா எல்லாம் பார்க்க வரமாட்டார். கூப்பிட வேண்டும் என்றால் அவர் மனைவி இருக்கும் போது செல்லுங்கள். அந்த அம்மா இருந்தால், அவர்கள் அரிசி, பருப்பு என ஏதாவது  உங்கள் தேவைக்கு ஏற்றாற் போல் கொடுத்து உதவுவார்கள்,'' என்றாராம். 

அதுவும் சரி என்று அந்த அம்மா இருக்கும் போது போகலாம் என்று முடிவு செய்தனர்.  அம்மா, ஐயா இருவரும் இருக்கும் காலை பொழுதில் போகலாம் என்று காலையில் சென்றார்களாம். இவர்கள் போன நேரம் அந்தப் பெரிய மனிதர் இல்லை. அவர் வயல்காட்டுக்கு போய் இருந்தார். வீட்டில் அந்தப் பெரிய மனிதரின் மனைவி மட்டும் இருந்தார். இவர்களை யார் என்று கேட்ட போது, "" நாங்கள் இந்த ஊருக்கு வந்த நாடக கோஷ்டி. எங்கள் நாடகத்தில் கடந்த நான்கு நாள்களாக வசூல் இல்லை. அதனால் சாப்பாட்டுக்கே வழி இல்லை. உங்கள் வீட்டுக்காரர் இந்த ஊரின் பெரிய மனிதர். அவரை அழைத்து இந்த நாடகத்தைப் பார்க்க வைத்தால், அவர் இந்த நாடகத்தைப் பற்றி நன்றாக நாலு வார்த்தை சொன்னால் கூட்டம் வரும். எங்கள் எல்லோருக்கும் சாப்பாடு கிடைக்கும்''என்று உண்மையைக் கூறினார்களாம். 

அந்த வீட்டு அம்மா, "இருங்கள்' என்று கூறி விட்டு உள்ளே போன நேரம் அந்த பெரிய மனிதரும் வந்து விட்டாராம். இந்த வீட்டுக்கார அம்மா இரு பை நிறைய அரிசி, பருப்பு, காய்கறிகளை எல்லாம் கொண்டு வந்து இவர்களிடம் கொடுக்கும் போது, அந்தப் பெரிய மனிதர் வந்து அதைத் தடுத்து நிறுத்தினாராம். அந்த இரு பைகளையும் பார்த்த நாங்கள், இன்று வயிறார சாப்பிடலாம் என்று நினைத்தார்கள்.  அந்தப் பெரிய மனிதர் தடுத்து நிறுத்தியதும், மிகவும் சோர்ந்து போய் விட்டார்கள். "யார் இவர்கள், இவர்களுக்கு இதை எல்லாம் நீ ஏன் கொடுக்கிறாய்?' என்று கேட்டார். அந்தப் பெரிய மனிதரின் வீட்டுக்கார அம்மா, "'இவர்கள் எல்லாம் நம்ம ஊருக்கு வந்த நாடகக் குழு. இந்தக் குழுவின் நாடகம் வசூல் ஆகவில்லை. நாடகத்தில் நடித்தவர்கள் எல்லோரும் பட்டினியாக இருக்கிறார்களாம். அது தான் உங்களைப் பார்த்து, உங்கள் தலைமையில் நாடகம் நடத்த, உங்களை அழைக்க வந்திருக்கிறார்கள்'' என்று கூறினார்கள். 

அந்தப் பெரிய மனிதர், "அப்படியே அதை எல்லாம் வை', என்று கூறி விட்டு, எங்களை எல்லாம் பார்த்து , விசாரிக்க  ஆரம்பித்தார். நாங்கள் என்ன நாடகம் போட்டு இருக்கிறோம். எங்கள் நாடகக் குழுவில் எவ்வளவு பேர் என்று விசாரித்தார். அவருக்காக அங்கேயே ஒரு காமெடி காட்சியை, நடித்துக் காட்ட சொன்னார். நான்கு நாள்களாக பசி, சோகம். இதன் நடுவில் காமெடி காட்சி எப்படி நடிக்க முடியும்? ஆனாலும் நடித்துக் காட்டினோம். அப்புறம் தான் எங்களுக்கு, அரிசி பருப்பு அடங்கிய பைகளைத் தந்து அனுப்பினார் அந்தப் பெரிய மனிதர். இப்படியெல்லாம் நாங்கள் அன்று கஷ்டப்பட்டு நாடகம் போட்டோம். 

இன்று உயர்ந்த மேக்கப் சாதனங்கள் உள்ளன. அதை எல்லாம் நாம் எல்லோரும் உபயோகப்படுத்துகிறோம். அந்தக் காலத்தில் ஜிங்க் ஒய்ட் என்ற பொருளில் கேசரி பெளடர் கலந்து, முகத்தில் பூசிக் கொள்வார்களாம். அது மட்டுமல்ல, நாடகம் என்பதால் கண்கள் பெரிதாகத் தெரிய வேண்டும் அல்லவா? அதனால் மை இட்டுக் கொள்வதற்காக, தீக்குச்சியை எரித்து விட்டு, அந்த கறுப்புப் பொடியை எண்ணெயில் கலந்து, கண்களுக்கு மையாக இட்டு கொள்வார்கள். இப்படியெல்லாம் நாங்கள் கஷ்டபட்டு, அந்தக் காலத்தில் நாடகம் போட்டோம், நாடகத்திற்காக உழைத்தோம்,'' என்று கூறினார் வி.கே.ஆர். . இதை எல்லாம் அவர் சொல்லச் சொல்ல, எனக்குக் கண்ணீரே வந்து விட்டது.

இன்னொன்றையும் சொன்னார் வி.கே.ஆர். "ஒற்றைவாடை' நாடக அரங்கில் நாடகம் நடக்கும் போதெல்லாம், நாடகம் முடித்தவுடன், அவர் வீடு உள்ள போரூர் செல்ல, கையில் காசு இருக்காதாம். 

அன்று "ஒற்றைவாடை' நாடக அரங்கம் இருந்தது எங்கே தெரியுமா? இப்போழுது சென்டரல் ரயில் நிலையம் இருக்கும் இடத்திற்கு அடுத்து உள்ள வால் டாக்ஸ் சாலையில். கையில் இருக்கும் காசுக்கு வேர்க்கடலை வாங்கிக் கொண்டு, அதைக் கொறித்துக் கொண்டே, நாலைந்து பேர் ஒன்றாகச் சேர்ந்து, கோடம்பாக்கம் வழியாக நடந்தே வீட்டுக்குச் செல்வார்களாம். 

வி.கே.ஆர். யதார்த்தமான மனிதர் . அவருக்கே உரிய வசனம் பேசும் முறை உண்டு. கலகலப்பானவர். சொந்தப் படங்கள் நிறைய எடுத்திருக்கிறார். இயக்குநர் ஏ.பி. நாகராஜனுடன் இணைந்தும், தனியாகவும் படங்கள் தயாரித்துள்ளார். "நல்ல இடத்து சம்பந்தம்' என்ற படத்தில் எங்க அக்கா "மாடி' லக்ஷ்மி நடித்தார். நானும் இந்தப் படத்தில் ஒரு நடனம் ஆடி இருக்கிறேன். அப்புறம் "டெல்லி மாப்பிள்ளை' என்று ஒரு படம் எடுத்தார். அதில் நான் இரண்டாவது கதாநாயகியாக நடித்தேன். அதில் எனக்கு ஜோடியாக சோ சார் நடித்தார். 


வி.கே.ஆருடனும் ஜோடியாக நடித்திருக்கிறேன். 

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.