ஞாயிறு கொண்டாட்டம்

தடம் பதிக்கும் தண்ணீர் விளையாட்டு

விடாது மழை. வடியாத வெள்ளம் என சென்னையின் பல பகுதிகளைத் தண்ணீர் சூழ்ந்துள்ள நிலையில் அலை சறுக்கு வீரர் சதீஷ்குமாருக்கு போன் செய்த போது , தான்  திருவல்லிக்கேணி மற்றும் மெரினா பகுதியில் வெள்ளம் பாதித்த

வனராஜன்

விடாது மழை. வடியாத வெள்ளம் என சென்னையின் பல பகுதிகளைத் தண்ணீர் சூழ்ந்துள்ள நிலையில் அலை சறுக்கு வீரர் சதீஷ்குமாருக்கு போன் செய்த போது , தான்  திருவல்லிக்கேணி மற்றும் மெரினா பகுதியில் வெள்ளம் பாதித்த பகுதியிலுள்ள மக்களுக்குத் தன்னுடைய நண்பர்கள் குழுவுடன் உதவி செய்து வருகிறேன் அங்கு வாருங்கள் சந்திப்போம் என்றார். சதீஷ்குமார் எம்.ஏ பட்டதாரி. தனது திறமையால் உலகம் முழுவதும் உள்ள ஆழ்கடல் அலை சறுக்குப் போட்டிகளில் பங்கேற்று இந்தியாவுக்குப் பெருமை தேடி தந்திருப்பவர்.

பட்டதாரியான உங்களுக்குக் கடல் சார்ந்த விளையாட்டில் ஆர்வம் எப்படி ஏற்பட்டது?

என்னுடைய அப்பா அய்யாறு. வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அம்மா இல்லத்தரசி. சிறுவயது முதல் பள்ளி நண்பர்களுடன் கடற்கரை சென்று விளையாடுவது வழக்கம். புதுச்சேரியில் கல்லூரியில் படிக்கும்போது என்.சி.சியில் (கப்பல் படை) தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளேன். அப்போது தான் கடல் மீது ஆர்வம் ஏற்பட்டது. என்னுடன் படித்த வெளிநாட்டை சேர்ந்தவர்களின்  உதவியுடன் தான் இந்த சர்பிங் என்னும் அலைசறுக்கு பற்றி கற்றுக்கொண்டேன். தொடர்ந்து கடல் சார்ந்த மீன்பிடி தொழிலிலும் ஈடுபட்டு வருகிறேன். என்னிடம் 40 பேர் பணியாற்றுகிறார்கள். 2015-ஆம் ஆண்டு அமெரிக்கா சென்ற போது அங்கு தான் எஸ்.யூ.பி எனும் (ஸ்டாண்ட் அப் பெடலிங்) என்ற இந்த அலை சறுக்கு விளையாட்டைக் கற்றுக்கொண்டேன். பலகை போன்ற படகு அமைப்பு கொண்ட சாதனத்தில் துடுப்பின் உதவியுடன் பயணம் செய்வது தான் இந்த விளையாட்டு. 20 நாள்கள் இந்தப் பயிற்சியை மேற்கொண்டேன். இந்த விளையாட்டைக் கற்றுக்கொள்ளக் கட்டணம் குறைவு. ஆனால் இந்தச் சாதனங்கள் விலை உயர்ந்தவை.

உலகிலேயே நார்வே கடல்தான் மிக ஆழமானது.  குளிர் நிறைந்த பகுதியாகும். 2018- ஆம் ஆண்டு நார்வே 5 நாள் பயணம் செய்து 200 கி.மீ கடந்தேன். இது சாதனை முயற்சியாகும். அப்போது உலகிலிலுள்ள பல பகுதிகளைச் சேர்ந்த 10 பேர் என்னுடன் பயணித்தார்கள்.

தொடர்ந்து 2018-ஆம் ஆண்டு "டிராகன் வோல்டு சாம்பியன்ஷிப்' போட்டி ஆஸ்திரியாவில் நடைபெற்றது. இதில் 33 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்த கொண்டார்கள். அதில் இந்தியா சார்பில் முதல் வீரராகக் கலந்து கொண்டு 9-ஆவது இடத்தைப் பிடித்தேன். சென்னையில் மெரினா பகுதியிலுள்ள மீனவர்களை ஒருங்கிணைத்து கடல் சார்ந்த இந்த விளையாட்டை அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்து வருகிறேன். எஸ்.யூ.பி மெரினா என்ற பெயரில் கிளப் ஒன்றை ஆரம்பித்து அதன் மூலம் 40 பேருக்கு பயிற்சி அளித்துள்ளேன். என்னுடைய முயற்சியின் பலனாக கர்நாடகாவில் நடைபெற்ற  தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொண்ட என்னுடைய மாணவர் முதல் பரிசை வென்றார். இதே போன்று கடந்த ஜனவரி சேத்துப்பட்டுப் பகுதியில் நடைபெற்ற எஸ்.யூ.பி போட்டியில் கலந்து கொண்டு இரண்டாவது பரிசு வென்றார் மற்றொரு மாணவர். 2019-ஆம் ஆண்டு "டிராகன் வோல்டு சாம்பியன்ஷிப்' பிரான்ஸில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு 6-ஆவது இடத்தைப் பிடித்தோம். 2021-ஆம் ஆண்டு எஸ்.யூ.பி வோல்டு சாம்பியன்ஷிப்  ஹங்கேரியில் சமீபத்தில் நடைபெற்றது. போட்டியில் 51 நாடுகளைச் சேர்ந்த 141 பேர் கலந்து கொண்டனர்.  அதில் கலந்து கொண்டு 60- ஆவது இடத்தை பிடித்தேன். இதற்கு இந்திய குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு எனக்கு வாழ்த்து தெரிவித்தார்.  உலகளவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் கலந்து கொண்ட போது பல மேம்படுத்தப்பட்ட உபகரணங்களை இயக்கவும், என்னுடைய பயிற்சி முறைகளை மேம்படுத்திக் கொள்ளவும் வாய்ப்புக் கிடைத்தது.

பல சமூகப் பணிகளையும் செய்து வருகிறீர்களாமே?

நான் அதிகாலையில் எழுந்துவிடுவேன். உடற்பயிற்சியை முடித்தபிறகு மெரினாவுக்கு வந்துவிடுவேன். அங்கு தான் தொடர்ந்து நண்பர்களுடன் இயங்குவேன். கடந்த 15 ஆண்டுகளாக போலீசாருடன் இணைந்து கடலில் குளிக்கும் போது காணாமல் போனவர்கள், நடுக்கடலில் சிக்கிக் கொண்டவர்கள், மற்றும் உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டுக் கொண்டு வருவது போன்ற பணிகளைச் செய்து வருகிறேன். கடலோர பாதுகாப்பு குழுமத்தில் தன்னார்வலராக பணியாற்றி வருகிறேன்.தீயணைப்பு துறையைச் சேர்ந்த அதிரடிப்படை வீரர்கள், கடலோர பாதுகாப்பு குழுமத்தை சேர்ந்தவர்களுக்கு கடலில் விழுந்தவர்களை காப்பாற்றுவது எப்படி  என்பது பற்றியும்,  எஸ்.யூ.பி விளையாட்டு பற்றி பயிற்சியை எடுத்து வருகிறேன். கடலில் பிளாஸ்டிக் கழிவுகளைக் கொட்டுவதால் ஏற்படும் தீமைகளை விளக்கும் வகையில் விழிப்புணர்வை பயணத்தை கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் மேற்கொண்டு வருகிறேன்.


இதற்காக 2016-ஆம் ஆண்டு பழவேற்காட்டிலிருந்து சென்னை வரை தனி நபராக கடலில் பயணித்தேன். 2017-ஆம் ஆண்டு மெரினாவிலிருந்து எண்ணூர் வரையிலும், 2018-ஆம் ஆண்டு பெசன்ட் நகரிலிருந்து மெரினா வரையிலும் 2019 -ஆம் ஆண்டு பாண்டிச்சேரியிலிருந்து கோவளம் வரையும் பயணம் மேற்கொண்டேன். பிளாஸ்டிக் கழிவுகளைக் கொட்டும் முயற்சியை தடுக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் 2020 -ஆம் ஆண்டு முதல் பக்கிங்காம் கால்வாயில் பயணித்து வருகிறேன்.

அலை சறுக்கு என்பது அனைவரும் விளையாடும் விளையாட்டா?

ஆமாம். இது கடல் சார்ந்து உள்ளவர்களுக்கான விளையாட்டு அல்ல. அனைத்து தரப்பினரும் விளையாடலாம்.என்னிடம் 6 வயது முதல் 50 வயதுள்ளவர்கள் வரை பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கு லைப் ஜாக்கெட் அணிந்தால் போதும். உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாது. நீச்சல் தெரியாமலேயே ஆழ்கடலில் பயணம் செய்யலாம்.

உங்களது லட்சியம் தான் என்ன?

இந்தியா கடல் சார்ந்த பகுதி. இங்கு நதி, ஆறு, குளம் என நீர்நிலைகள் அதிகம் எனவே இந்த விளையாட்டை இங்குப் பிரபலப்படுத்த வேண்டும் என்பதே ஆசை. 2021-ஆம் அண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் சர்பிங் விளையாட்டை சேர்க்க இருக்கிறார்கள்.

 2024-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் "ஸ்டாண்ட் அப் பெடலிங்' விளையாட்டை சேர்க்க இருக்கிறார்கள். இதற்கு என்னுடைய மாணவர்களுக்குப் பயிற்சியளித்துப் பங்குபெறச் செய்து பரிசு பெற வேண்டும் இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம்'' என்கிறார் சதீஷ்குமார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஃபர்ஹான் அதிரடி: இங்கிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

கடன் பத்திரங்கள் வாயிலாக ரூ. 5,000 கோடி திரட்டும் கனரா வங்கி!

சுபேதார் டிரைலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

போஸ் பாண்டி பாணியில் படம் பார்க்க அழைத்த ராதிகா!

SCROLL FOR NEXT