ஒரு பெரியவரிடம் கேட்டேன். "உங்கள் வயது என்ன?' அதற்கு அவர் "எப்போது என்று' என்னிடம் திரும்ப கேட்டார். இன்று காலை எனக்கு என்ன வயதோ, அது தான் இன்று முழுவதும் இருக்க முடியும். இந்தப் பிறந்த நாளில் என்ன வயதோ, அது தான் இந்த ஆண்டு முழுவதும் இருக்க முடியும். வயதென்பது எப்பொழுதும் எல்லோருக்கும் ஒன்றாகத்தான் இருக்க முடியும். ஆனால் அவர் ஒரு விளக்கம் சொன்னார்;
"என் பேரப்பிள்ளையுடன் விளையாடும் பொழுது எனக்கு வயது ஒன்று. ஏனெனில் என் பேரப்பிள்ளை எந்த அறிவுநிலையில் இருக்கிறானோ அந்த அறிவு நிலையில் நான் இருந்தால் தான் சந்தோஷமாக இருக்க முடியும். என் பேத்தி இருக்கிறாள். அவளுடன் சேர்ந்து டி.வி பார்க்கிற போது என் வயது ஐந்து. மியூசிக் போட்டு நான் டான்ஸ் ஆடினால் என் வயது பதினெட்டு.
என்னிடம் சிலர் வந்து வாழ்க்கையில் பிரச்னையென்று அறிவுரை கேட்கும் பொழுது நான் அவர்களுடன் உரையாடுவேன். அப்போது என் வயது 60. சில நேரம் தியானம் செய்யும் போது யோசிப்பேன். உடலுக்குத்தான் வயது. ஆன்மாவிற்கு வயது இல்லை' என்றவர்,
புத்தரிடம் ஒரு கேள்வி யார் நல்லவன்? யார் கெட்டவன்? பிறர் மீது அக்கறை கொண்டவன் நல்லவன். பிறர் மீது அக்கறை இல்லாதவன் கெட்டவன் என்று இரண்டே வரிகளில் புத்தர் பதில் கூறியுள்ளார்.
ஒரு நாட்டில், முதியவர்கள் யாரும் நமக்கு தேவையில்லை. அவர்களை நாடு கடத்த வேண்டும் என உத்தரவு போடுகிறார் அரசர். அதன்பின் நாட்டில் ஒரு பிரச்னை வருகிறது. அப்போது சரியான ஆலோசனை சொல்ல, நல்ல அமைச்சரை தேர்வு செய்ய முடிவு செய்கிறார் அரசர். ஒரு புதுவிதமான சோதனை வைக்கிறார். சாம்பலில் திரிக்கப்பட்ட கயிறு வேண்டும் என்று கேட்கிறார். யாராலும் முடியவில்லை. அப்போது ஒரு பையன் தன் தந்தையிடம் வந்தான். அப்பா அரசர் இது மாதிரி ஓர் உத்தரவு போட்டிருக்கிறார் என்று சொன்னான்.
அப்பா உடனே ""ஒன்றுமில்லை. ஒரு கயிறை தாம்பாளத்தில் சுற்றி வைத்து அப்படியே எரிய விடு. அதை அப்படியே எடுத்துச் சென்று அரசனிடம் கொடு. ""பகிர்ந்து கொள்ளுங்கள் என்று சொல்'' என்றார். அப்படியே மகன் செய்தான். அரசன் அதை வாங்கிப் பார்த்து விட்டு அதிசயித்தார்.
அடுத்து ஒரு சோதனை வைத்தார். ""யாரும் வாசிக்காத மேளத்தில் சத்தம் வர வேண்டும்'' என்றார். மகன் மீண்டும் அப்பாவிடம் போனான்.
""அவ்வளவுதானே! ஒரு சின்ன மேளத்தை எடுத்துக்கொள். அதன் தோலை எடுத்துவிட்டு ஒரு தேனடையை அந்த மேளத்துக்குள் அசையாமல் போட்டுவிட்டு தோலை மீண்டும் வைத்துவிடு'' என்றார். பையன் அப்படியே செய்து மேளத்தை எடுத்துப் போனான்.
அரசன் மேளத்தை வாங்கிப் பார்த்தார். மேலும் கீழுமாக அசைத்தார். உள்ளிருந்த தேனீக்கள் பறக்கும் சத்தம் வந்தது. யாரும் வாசிக்கவில்லை. ஆனால் சத்தம் வருகிறது. இதைப் பார்த்து அரசர் வியந்து போய் கேட்டார். நீ எப்படி இவ்வள அறிவாக இருக்கிறாய்? என்றார். அதற்கு பையன் ""என் தந்தை முதியவர் என்பதால் வேண்டாம் என இந்த அரசு அனுப்பியது. ஆனால் நான் ரகசியமாக பாதுகாத்து வைத்திருக்கிறேன். அவர்தான் இதற்கெல்லம் காரணம்'' என்றான். அரசன் தன் தவறை உணர்ந்தான்.
நம் தாய், தந்தையைப் பாதுகாக்க வேண்டும். அதுவே நம் கடமையாகும்.
(பட்டிமன்ற பேச்சாளர் சுகி சிவத்தின் உரையிலிருந்து)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.