ஞாயிறு கொண்டாட்டம்

மதிப்பீடுகளின் அர்த்தம் மாறி விட்டன!

"எளிமைதான் எல்லா நொடிகளையும் மலர்த்தும்.  மிக எளிமையாக, சந்தோஷமாக இந்த வாழ்க்கையை அணுகும் மன பக்குவம் கொண்டவர்கள், எத்தனை மகத்தானவர்கள்.

ஜி. அசோக்

"எளிமைதான் எல்லா நொடிகளையும் மலர்த்தும்.  மிக எளிமையாக, சந்தோஷமாக இந்த வாழ்க்கையை அணுகும் மன பக்குவம் கொண்டவர்கள், எத்தனை மகத்தானவர்கள். வெள்ளந்தியான, சந்தோஷமான மன அமைப்பு கொண்டவர்களை பார்க்கும் போது, அவர்களைப் போல் நம்மாலும் வாழ முடியாதா என்று தோன்றும். சில விநாடிகளேனும் அந்த வருத்தம் நம்மை தின்று விடும். எல்லாமும் இயந்திரமாகிவிட்ட போதிலும், அன்புக்கான தருணங்கள் இன்னும் உயிர்ப்போடுதான் இருக்கின்றன. செல்லிடப்பேசிகள், இணையம் என வந்து விட்ட போதிலும், சொல்லப்படாத சொற்களும், பகிரப்படாத தனிமையும் இன்னும் ஏராளமாக இருந்துக் கொண்டேதான் இருக்கின்றன. ஆனால் அன்பு மட்டுமே பிரதானமாக இருந்த காலங்கள் எங்கே... அப்படி ஒரு நினைப்பை உள்ளுக்குள் கொண்டு வந்து பார்க்கிற படம்தான் இது.'' பேச்சில் ஈர்க்கிறார் அறிமுக இயக்குநர் பெருமாள் காசி. தமிழ் சினிமாவில் நெடும் பயணம் கொண்டவர். இப்போது "என்ஜாய்' படத்தின் மூலம் இயக்குநராக கால் பதிக்கிறார்.

இணையம், செல்லிடப்பேசிகள் ஆழமாக வேறுரூன்றி விட்டதை விமர்சிக்கும் படமா.....

அப்படித்தான் இருக்கும். இன்றைய சினிமா மிகவும் துணிச்சலாக பேச வேண்டிய விஷயம் இது. முதல் படம் என்பதால், இமேஜூக்குள் நின்று பார்க்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. அதனால்தான் ஒரு கை பார்ப்போம் என இறங்கி வந்து விட்டேன். ஏதோ ஒரு விதத்தில் எல்லோரும் ஏதோ ஒரு விஷயத்துக்கு பொறுப்பாகி விடுகிறோம். பெண்மை, கற்பு, ஒழுக்கம் போன்ற கலாசார மதிப்பீடுகள் எல்லாம் வேறு வேறு அர்த்தங்கள் பெற்று உருமாறி விட்டன. 

இன்னும் சில காலங்களில் பண்பாடு, கலாசாரங்களில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்பது தெரியாமல் தவிக்கப் போகிறோம். பெண்கள் உடலளவில் பலவீனமானவர்கள் என்பதைத் தெரிந்துக் கொண்டு எத்தனை பிரச்னைகளை உருவாக்கி விடுகிறது சமூகம். இதனால் சொல்ல முடியாத தவிப்பில் இருக்கிறார்கள் பெண்கள். சிக்னலில் கார் துடைத்து விடும் சிறுமிக்குப் பின்னால் எத்தனை ஒரு ரணம் இருக்கும். நள்ளிரவில் பைக் மறிக்கும் விலை மாதுவுக்குப் பின் ஒரு ரம்மியமான காதல் இருந்திருக்குமோ. வறுமை, ஆதிக்க சக்திகளின் பண பலம் என நிறைய விஷயங்கள் இதன் பின்னணியில் உண்டு. இந்தியாவின் வல்லரசு கனவு... சந்திரனுக்கு விண்கலம் என பெருமைகளை பேசிக் கொண்டிருக்கிற நாம், இன்னொரு பக்கம் ரணங்களை உள்நோக்கி பார்ப்பதில்லை. அப்படி ஒரு பார்வை இது முன் வைக்கும். பெண் கொடுமைகளுக்கு எதிரான தீர்க்கமான ஒரு பார்வையும் இருக்கிறது.  

காதலை அர்த்தப்படுத்துகிற தலைமுறை பிள்ளைகள் மாறியிருக்கிற காலம் இது....

எல்லாவற்றுக்கும் இங்கே முன் மாதிரிகள் இருப்பதால், உங்களுக்கு அப்படித் தோன்றும். ஆனாலும், இன்னும் உண்மையான அன்புக்கு கிடையாய் கிடப்பவர்கள் இங்கே இருக்கத்தான் செய்கிறார்கள். காதல் என்கிற அற்பமான, அற்புதமான சந்தோஷம் இருப்பதால்தான் சமூகம் வாழ்கிறது. படித்தது, பார்த்தது, கேட்டது, உணர்ந்ததுதான் படைப்பாக வருகிறது. இது கூட சென்டிமென்ட் சினிமாவிற்கான வார்த்தையாக  இருக்கலாம். அப்படிப் பார்த்தால் இது கூட சென்டிமென்ட்தான். இந்த கதை, உறவுகள் கூட பழையதுதான்.ஆனால், அதை எனக்கான உணர்வாக, மனிதனாக காட்சிப்படுத்தியதுதான் புதிது.   என் கடவுள், என் மதம், என் ஜாதி, என் பயம், என் பணம்... இப்படி எத்தனை எத்தனை விஷயங்கள் மனிதனை ஆட்டிப் படைக்கின்றன. இந்த எல்லாவற்றையும் கடந்தவர்கள் மரணத்தை அடைய துடிக்கிறார்கள். ஒரு சிலர்தான் சில நல்ல நிமிடங்களை தவிர வேறு எதையும் விட்டு போக கூடாது என நினைக்கிறார்கள். இந்த மாய மந்திரம் இந்த சினிமாவுக்கும் பொருந்தும். மனித உறவுகளின் மகத்துவத்தை, ஆழத்தை முன் வைக்கிற கதை. காதலை சொல்லலாம். சொல்லாமல் கூட இருக்கலாம். காமமும் அப்படித்தான். காதல், பேசுகிற விஷயமில்லை. தயவு செய்து அதை உணருங்கள் தோழர்களே... 

எப்படி இருக்கும் படத்தின் திரை பாணி வடிவம்....

இந்தப் படத்துக்காக ஒரு காட்சி, ஒரு வசனத்தைக்கூட எங்கேயோ யாருடனோ விவாதிக்கவில்லை. . எல்லாமே எங்கேயோ நடந்த சம்பவம், யாரோ பேசின வார்த்தைகள், நம் உள்ளங்கை உணர்ந்த  கண்ணீர், படித்த பத்திரிகை செய்தி, கண் கூடாக பார்த்த அம்சங்கள்...இது உண்மைக்கு நெருக்கமெல்லாம் இல்லை... இது உண்மையேதான். "ஒரு சினிமா, இரண்டரை மணி நேரம்தான். ஆனா, ஒவ்வொரு நாள் வாழ்க்கையும் 24 மணி நேரம்.' வாழ்க்கைதான் நாம யோசிக்கவே முடியாத சினிமா என்பது டிஸிகாவின் கோட். இது எவ்வளவு உண்மை. நாம் அனுதினமும் கவனிக்காமல் கடந்து போகிற ஒவ்வோர் எளிய மனிதனின் வாழ்க்கைதான் இது. கண்ணுக்குத் தட்டுப்படாத பிரியங்களின், கரிசனங்களின் குவியல்தான் இந்தக் குடிமகன். எங்கோ கோடி பேரில் ஒருவனுக்கு நடக்கிற கதை இல்லை. இது எல்லோருக்குமானது. உங்களை விட, என்னை விட எல்லோரும் சந்திக்கப் போகிற பிரச்னை. இந்தக் கோரத்தின் பிடியில் யாரும் சிக்கிக் கொள்ளலாம்... அதற்கான விழிப்புணர்வு இது.  

இன்னும் பரிச்சயமான நடிகர்கள் இருந்தால், கதை எல்லோரையும் போய் சேர வசதியாக இருக்குமே...

நானே புதுமுகம்தான். சினிமாவில் லேபிளுக்குத்தான் காசு என்பது எனக்கு தெரியும். இருந்தாலும் அந்த லேபிளை உருவாக்க வேண்டுமே.... அதற்காகத்தான் இந்த போராட்டம். ஒரு வகையில் எல்லோருமே புதுமுகங்கள்தான். ஆனால் எல்லோருமே ஒரு இடத்துக்கு ஏங்குபவர்கள். மதன்குமார், டான்ஸர் விக்னேஷ், ஹரீஸ்குமார், நிரஞ்சனா, அபர்ணா, சாய் தன்யா,  ஹாசின்,  சாருமிசா இப்படி எல்லோருமே புதுமுகங்கள்தான்.  அவர்களின் அர்பணிப்புக்கு ஒரு முதல் தகுதியை உண்டாக்கி தரும் விதமாக இந்தப் படம் இருக்கும். முதல் வாய்ப்பு தந்து என்னை தூக்கி விட்ட தயாரிப்பாளர் கே. லெட்சுமி நாராயணன் சாருக்கு ஆயிரம் நன்றிகள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT