முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

ரத்தத்தின் ரத்தமே... - 54

"கொஞ்சம் வேகமா நடந்தா மூச்சு வாங்குது,   படிகளில் ஏறினா மூச்சு வாங்குது,  மேலே ஏறினா மூச்சு வாங்குது,  பளுவைத் தூக்கிக் கொண்டு நடந்தா மூச்சு வாங்குது,  சும்மா இருந்தாலே சில நேரம் மூச்சு வாங்குது.....

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:27 AM
பகிர்:


"கொஞ்சம் வேகமா நடந்தா மூச்சு வாங்குது, படிகளில் ஏறினா மூச்சு வாங்குது, மேலே ஏறினா மூச்சு வாங்குது, பளுவைத் தூக்கிக் கொண்டு நடந்தா மூச்சு வாங்குது, சும்மா இருந்தாலே சில நேரம் மூச்சு வாங்குது..... இப்படி மூச்சு வாங்கினா உடம்பு சரியாத்தான் இருக்கு, பயப்பட வேண்டாம் என்று நினைத்துக் கொள்வதா? அல்லது உடம்பு சரியில்லை என்று எடுத்துக் கொள்வதா?'.... இப்படி ஒரு குழப்பம் எல்லோருக்கும் ஏதாவதொரு காலகட்டத்தில் வரத்தான் செய்யும்.
மூச்சு, சுவாசம், சுவாசித்தல் இவை எல்லாமே காற்று, நெஞ்சு, நுரையீரல் இவை
களோடு சம்பந்தப்பட்டவை. மூச்சு இருக்க வேண்டும் என்றால் காற்று இருந்தாக வேண்டும்.
சுவாசம் இருந்தாக வேண்டும் என்றால் நெஞ்சு, நுரையீரல் இருந்தாக வேண்டும். ஆகவே இவை ஒன்றோடொன்று கலந்தவை.
இயற்கையாகவே, நாம் எப்பொழுதும் சுவாசித்துக் கொண்டுதான் இருக்கிறோம் என்பதை நாம் மறந்து விடுகிறோம். பிறந்த நாள் முதல் ஆயுள் முடியும் நாள் வரை இருதயம் எப்படி தன்னிச்சையாக இயங்குகிறதோ அதுபோல நுரையீரல் ஆயுள் முழுக்க சுவாசித்தலை செய்துகொண்டுதான் இருக்கிறது.
காற்று..... சந்தோஷமாக இருப்பவர்களுக்கு அது சங்கீத காற்று. சந்தோஷம் இல்லாமல் இருப்பவர்களுக்கு அது வெப்பக் காற்று. காற்று, உலகெங்கும் வியாபித்திருக்கிறது. காற்று இல்லையெனில், உலகம் இல்லை. கண்ணுக்குத் தெரியாத பல வாயுக்கள் கலந்ததுதான் காற்று. காற்று, நம்மைச் சுற்றி எங்கும், எப்பொழுதும் இருக்கிறது. ஆனால் நம்மால் அதைப் பார்க்க முடியாது. ஆனால் உணர முடியும்.காற்றில் சுமார் 21 சதவீதம் உயிர் வாழத் தேவையான ஆக்ஸிஜன் இருக்கிறது. சுமார் 78 சத
வீதம் நைட்ரஜன் இருக்கிறது. இது போக, கார்பன் டை ஆக்ûஸடு, நியான், ஹைட்ரஜன் வாயுக்களும் கலந்து இருக்கின்றன. இதுபோக, மிக நுண்ணிய கண்ணுக்குத் தெரியாத பலவித துகள்களும், தூசிகளும் காற்றில் கலந்திருக்
கின்றன. இந்தத் துகள்கள் இயற்கையும், செயற்கையும் கலந்ததாகும். இதுபோக, கேடு உண்டாக்கக் கூடிய புகைப் பொருள்களாகிய கரித்தூள் புகை, வாகனப்புகை, அனல் மின்நிலைய புகை போன்றவைகளும் காற்றில் கலந்துவிடுகின்றன. கண்ணில் தூசி விழும்போதுமட்டும்தான். நாம் காற்றில் தூசி இருக்கிறது என்று சொல்கிறோம். உணர்கிறோம். ஆனால் கண்ணுக்குத் தெரியாத மிக நுண்ணிய தூசிகள் காற்றை சுவாசிப்பதன் மூலம் நம் உடலுக்குள் செல்வதை நாம் உணர்வதில்லை. சொல்வதில்லை. ஏனென்றால் அது கண்ணுக்குத் தெரிவதில்லை.
உலகமெங்கும் இம்மாதிரி பலவிதமான மாசுப்பொருட்கள், உடலுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய பொருட்கள் காற்றில் கலந்துகொண்டே இருப்பதனால்தான், மனிதர்களும், விலங்குகளும், தாவரங்களும் சுவாசிக்க, தடுமாற்றம் ஏற்பட்டுக் கொண்டே வருகிறது. இது எங்கு போய் முடியும் என்றுதான் தெரியவில்லை.
மனிதர்கள் சுவாசித்தாக வேண்டும். கண்டிப்பாக சுவாசித்தாக வேண்டும். மனிதர்களைப் போலவே விலங்குகளும், தாவரங்களும் கூட சுவாசித்தாக வேண்டும். ஒவ்வொரு முறை நாம் சுவாசிக்கும்போதும், காற்றை உள்ளிழுக்கும்போதும், சுமார் அரைலிட்டர் காற்று நம் உடலுக்கு உள்ளே நுழைகிறது. இந்த அளவு ஒருவருக்கொருவர் மாறுபடும். நல்ல ஆரோக்கியமும், நல்ல உடற்கட்டும் உள்ளவராக இருந்தால், காற்றை உள்ளிழுக்கும் வேகமும், ஆழமும் அதிகமாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் கொஞ்சம் அதிகமாகவே காற்றை நெஞ்சுக்குள்ளே இழுப்பார்கள்.
வெளிஉலகில் உள்ள காற்றை, மூக்கு, வாய் வழியாக உள்ளே இழுத்து, பின் வெளியே விடுவதை மூச்சு விடுவது என்றுசொல்வோம். வெளிஉலகில் இருக்கும் ஆக்ஸிஜன் நிரம்பிய காற்றை மூக்கு, வாய் வழியாக உள்ளே இழுத்து அதை உடலிலுள்ள மொத்த செல்களுக்கும் ரத்தத்தின் மூலமாக அனுப்புவது. பின் செல்களில் சேர்ந்துள்ள கார்பன் டை ஆக்ûஸடை மறுபடியும் ரத்தத்தின் வழியாக, நுரையீரல்களுக்குக் கொண்டு வந்து உடலைவிட்டு வெளியேற்றவது.இதை சுவாசித்தல் என்று சொல்வதுண்டு.
ஆனால் சுவாசித்தல் என்றால் என்ன? என்று பலபேரைக் கேட்டால், அவங்க சொல்வது என்ன தெரியுமா? "அது ஒன்னும் பெரிய விஷயம் இல்லீங்க. மூச்சை அதாவது வெளிக்காற்றை மூக்கு வழியாக உள்ளே இழுத்து, மறுபடியும் மூக்கு வழியாகவே வெளியே விடுவதுதான் என்று சொல்வாங்க. விஞ்ஞான ரீதியாக சுவாசித்தல் என்பதற்கு அர்த்தம் - மூக்கு வாய் வழியாக உள்ளிழுக்கும் காற்றிலுள்ள ஆக்ஸிஜன், நுரையீரல் மூலமாக ரத்தத்தில் கலந்து உடல் எங்கும் பரவி, உடலில் சேர்ந்திருக்கும் சர்க்கரைச் சத்தை சக்தியாக மாற்றி, அந்த சக்தியை உடல் உபயோகப்படுத்திக் கொள்கிறது.
நமது உடலின் ஒவ்வொரு அசைவுக்கும் சக்தி வேண்டும். அறிவியல் உலகில் சக்தி இல்லையேல் உடல் இல்லை. நிற்க, நடக்க, குதிக்க, தாவ, ஓட ஆட, உட்கார, எழுந்திருக்க, படுக்க, கைகளை அசைக்க, கால்களை அசைக்க, வாயை அசைக்க, மூச்சை இழுத்துவிட, கண்களை மூடித் திறக்க, இப்படி அன்றாடம் நாம் செய்யும் பலவிதமான செயல்களுக்கும், நாம் உயிர் வாழ்வதற்கும், சக்தி உடலில் வேண்டும். ஏற்கெனவே நாம் சாப்பிட்ட உணவின் மூலம் உண்டான சக்தி, உடலில் சேர்ந்து சேமிக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கிறது.
சேமிக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் இந்த சக்தி, கொஞ்சம் கொஞ்சமாக உடலுக்கு உபயோகப்பட, சுவாசித்தல் என்று ஒரு செயல் நடக்க வேண்டும். சுவாசித்தல் என்ற செயல் நமது உடலுக்குள் எப்பொழுதும் நடந்து கொண்டே இருக்கும். இதனால் சக்தி உடலுக்குத் தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருக்கின்றது. இந்த சக்திதான், நமது அன்றாட வாழ்க்கையை நடத்தவும், அடுத்த கட்டத்திற்கு நம்மை நகர்த்திச் செல்லவும் பெரிய உதவியாய் இருக்கின்றது. இந்த செயல் மனிதனுக்கு மட்டுமல்ல, உயிர்வாழும் எல்லா ஜீவராசிகளுக்கும் வாழ்க்கையை ஓட்ட நடந்தாக வேண்டும்.
இந்த வேலையை உயிரி வேதியியல் செயல் என்றும் சொல்லலாம். இந்தச் செயல் மூலமாக, "அடினோஸின் ட்ரை பாஸ்பேட்' என்கிற ரசாயனப் பொருள் சக்தியாக, சர்க்கரைச் சத்திலிருந்து வெளியாகி, உடலிலுள்ள செல்கள் வாழ்வதற்கும், அன்றாட காரியங்களைச் செய்வதற்கும் உபயோகமாய் இருக்கின்றன. சுவாசித்தல் வேலையைச் செய்ய, நமது உடலில் மூக்கு, வாய், மூக்கின் பின்பகுதி, தொண்டை, குரல்வளை, மூச்சுக் குழாய், மார்பின் இரு பக்கமும் இருக்கும் நுரையீரல்கள் ஆகியவை மிகவும் உபயோகப்படுகின்றன.
கல்லீரலைப் போல, நமது உடலில் இருக்கும் மிகப்பெரிய உறுப்பு நுரையீரல் ஆகும். நீங்கள் உள்ளே இழுக்கும் காற்றிலுள்ள ஆக்ஸிஜன் உங்களது நுரையீரலுக்குள் செல்கிறது. நுரையீரலிலிருந்து ரத்த ஓட்டத்தில் போய்ச் சேருகிறது. ரத்த ஓட்டத்தின் மூலமாக உடலின் அனைத்து செல்களுக்கும் போய்ச் சேருகிறது. ஒரு மரத்தைத் தலைகீழாக வைத்துப் பார்த்தால், எப்படி தெரியுமோஅப்படித்தான் நுரையீரல்கள் இருக்கும். பக்கத்திற்கு ஒன்றாக, மார்பின் இரு பக்கமும், நெஞ்சுக் கூட்டுக்குள் இரண்டு நுரையீரல்கள் இருக்கின்றன.
இருதயம் இருக்கும் பக்கமாகிய, இடது பக்க நுரையீரல், வலது பக்க நுரையீரலை விட சற்று சிறியதாக இருக்கும். தொண்டையில் குரல்வளையிலிருந்து ஆரம்பிக்கும் பெரிய மூச்சுக் குழாய், இரண்டு குழாய்களாகப் பிரிந்து, பின் இந்த 2 குழாய்கள் சிறுசிறு மூச்சுக்குழாய்களாகப் பிரிந்து, பிரிந்து, சுமார் முப்பதாயிரம் கிளைக்குழாய்களாக நுரையீரல் முழுக்க பிரிந்து விடுகிறது. ஒரு மரம் எப்படி பெரிய கிளை, சிறிய கிளை, மிகச்சிறிய கிளைகள், மிகமிகச் சிறிய கிளைகள், கடைசியாக இலைகளின் அருகில் வரும்போது ஒரு தீக்குச்சியிலும் பாதியாக மிக நுண்ணிய கிளைகளாக பிரிந்து முடிகிறதல்லவா, அதைப் போலத்தான் தொண்டையில் ஆரம்பிக்கும் மூச்சுக்குழாய், கிளை கிளைகளாகப் பிரிந்து, கடைசியில் தலைமுடியை விட மெல்லியதாக மூச்சுக்குழாய் முடிகிறது. முடியளவு மெல்லிய மூச்சுக்குழாயின் நுனியில் திராட்சைப்பழக் கொத்துக்களைப் போல், கொத்துக் கொத்தாக, காற்று நுண்ணறைகள் இருக்கின்றன.
மொத்த நுரையீரலிலும் சுமார் 38 கோடியிலிருந்து 60 கோடி வரை இந்தக் காற்று நுண்ணறைகள் இருக்கின்றன. பலூன் போன்ற அமைப்பிலுள்ள இந்தக் காற்று நுண்ணறையை, காற்று நுண்ணறைப் பை என்று கூட சொல்லலாம். பெரிய உடம்பு, பெரிய மார்பு பெரிய நுரையீரல்கள் உள்ளவர்களுக்கு இந்தக் "காற்றுப்பைகள்' மிக அதிகமாக இருக்கும்.
வாய்வழியாகவும், மூக்கு வழியாகவும் நுழையும் ஆக்ஸிஜன் காற்று, தொண்டைக்குக் கீழே இருக்கும் பெரிய மூச்சுக் குழாய் வழியாக உள்ளே நுழைந்து, பின்னர் சிறு சிறு குழாய்கள் வழியாக உள்ளே நுழைந்து, பின்னர் தலைமுடியை விட மெல்லியதாக உள்ள மூச்சுக் குழாய்கள் வழியாக உள்ளே நுழைந்து, பின்னர் பலகோடிக் கணக்கில் இருக்கும் காற்று நுண்ணறைப் பைகளுக்குள் வந்து சேருகிறது. கோடிக்கணக்கில் இருக்கும் இந்த காற்று நுண்ணறைப் பையைச் சுற்றி மிக நுண்ணிய ரத்தக் குழாய்கள் இருக்கின்றன.
"காற்று நுண்ணறைப் பைகளின் சுவர்கள்' மூலமாக ஆக்ஸிஜன் வாயு அதைச் சுற்றியிருக்கும் ரத்தக் குழாய்க்குள் நுழைகிறது. பின் ரத்தத்தில் இருக்கும் சிவப்பணுக்களில் நுழைந்து தொடர் ரத்தக்குழாய்கள் வழியாக இருதயத்துக்குள் நுழைகிறது. பின் இருதயம் மூலமாக உடல் முழுவதும் உள்ள செல்களுக்கு ஆக்ஸிஜன் நிறைந்த ரத்தம் சப்ளை செய்யப்படுகிறது. ஆக்ஸிஜனை கொடுத்தபிறகு, உடலிலிருந்து வெளியேற்றவேண்டிய பொருள்களாகிய கார்பன் டை ஆக்ûஸடு, மற்றும் சில கழிவுப் பொருள்களையும் சுமந்துகொண்டு, மறுபடியும் மிக நுண்ணிய ரத்தக்குழாய்கள் வழியாக, காற்றுப் பைகளுக்கு வந்தடைகிறது. இப்பொழுது நாம் மூச்சை வெளியே விடும்போது, இவைகளெல்லாம் வாய் மூக்கு வழியாக வெளியேறிவிடுகிறது. இவ்வளவு பெரிதாக சொல்லப்படும் இந்த சுவாசித்தல் விஷயம், மிகச் சாதாரணமாக எல்லோரது வாழ்விலும், எந்நேரமும் நடந்து கொண்டே இருக்கிறது.
சுவாசிப்பதற்கு மட்டும்தான் நுரையீரல்கள் உதவுகின்றன என்று நினைத்துவிடாதீர்கள். பேசுவதற்கும், பாடுவதற்கும், கத்துவதற்கும் நுரையீரலின் உதவி கண்டிப்பாக வேண்டும். நுரையீரலிலிருந்து நீங்கள் வெளியே தள்ளும் காற்றின் அளவைப் பொறுத்தே உங்களுடைய சத்தத்தின் அளவு அமையும். பேசுவதற்கு குறைவான காற்று போதும். ஆனால் சத்தமாக பேசுவதற்கு, கத்துவதற்கு, மூச்சுப் பிடித்து பாடுவதற்கு நிறைய காற்று நுரையீரலுக்கு வேண்டும்.
நுரையீரல் ஓர் அற்புதமான, அதிசயமான, ஆச்சரியமான, அழகான உறுப்பு. நுரையீரல் உங்களை சுவாசிக்கச் செய்கிறது. பேசச் செய்கிறது, பாடச் செய்கிறது, கத்தச் செய்கிறது, சிரிக்கச் செய்கிறது, அழச் செய்கிறது. இன்னும் எத்தனை எத்தனையோ காரியங்கள்.....
நுரையீரலை எப்பொழுதும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டால், சிகரெட் புகைப்பவராக இருந்தால், முதலில் சிகரெட்டைத் தூக்கிப் போடுங்கள். சிகரெட் பழக்கம் இல்லாதவராக இருந்தால் எந்தப் புகைகளின் கிட்டேயும் போகாதீர்கள். உங்கள் நுரையீரல் அறவே வெறுக்கும் முதல் பொருள்-சிகரெட். அதனால் சிகரெட் புகைப்பவரைப் பார்த்தால், அந்த இடத்தை விட்டு நகருங்கள்.
மண்புழு முதற்கொண்டு மனிதன் வரை சுத்தமான, ஆரோக்கியமான காற்றுக்காக ஏங்குவதைப் போல, இந்த உலகமே மாசில்லாத ஆக்ஸிஜன் நிறைந்த காற்றுக்காக ஏங்கும் நாள் வந்திடுமோ என்ற பெரும் கவலை, எதிர்கால உலகைப் பற்றி அதிகமாக யோசிப்பவர்களிடமும், எதிர்கால சந்ததியினருக்கு ஏதாவது நல்லது செய்துவிட்டுப் போகவேண்டும் என்று ஆசைப்படுபவர்களிடமும், சுற்றுச் சூழல் ஆர்வலர்களிடமும் இருக்கத்தான் செய்கிறது.
இருந்து என்ன பயன்? காற்றுதான் நம்மைக் காப்பாற்ற வேண்டும்.

-தொடரும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.