ஞாயிறு கொண்டாட்டம்

ரத்தத்தின் ரத்தமே... - 59

உடலுக்குள் ஓடுகின்ற ரத்தத்தை ஒரு நிமிடத்தில் உறைய வைக்கக்கூடிய சக்தியும், உடலுக்குள் ஓடுகின்ற ரத்தக்குழாய்களை ஒரு நிமிடத்தில் உடைத்து, ஓட்டை போட்டு

டாக்டர் எஸ். அமுதகுமார்

உடலுக்குள் ஓடுகின்ற ரத்தத்தை ஒரு நிமிடத்தில் உறைய வைக்கக்கூடிய சக்தியும், உடலுக்குள் ஓடுகின்ற ரத்தக்குழாய்களை ஒரு நிமிடத்தில் உடைத்து, ஓட்டை போட்டு, ரத்தத்தை வெளிவர வைக்கக்கூடிய சக்தியும், ஒரு பொருளுக்கு உண்டு என்றால், அது நச்சுப்பாம்பின் கொடிய விஷமே ஆகும்.

ஒரு காயம், ஒரு ரணம், ஒரு விபத்து ஏற்பட்டால் அதனால் ஏற்படும் ரத்தக்கசிவை நிறுத்த, உடலில் இயற்கையாக உறையும் சக்தி உள்ளது. இந்த உறையும் சக்தி இருப்பதனால் தான், ரத்த இழப்பு அதிகம் ஏற்படாமல், மேற்கொண்டு ரத்தம் அதிகமாக வெளிவராமல் தடுக்கப்படுகிறது. ஆனால், ஒரு விஷப்பாம்பு கடித்தால் ரத்தத்தில் பலப்பல மாற்றங்கள் வெகு சீக்கிரமாக ஏற்பட்டு, உயிருக்கே ஆபத்தை உண்டாக்கி விடுகிறது. பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்று சொல்வதன் காரணமும் இதனால்தான்.

உலகம் முழுவதும் சுமார் 2700 வகையான பாம்புகள் உயிர்வாழ்கின்றன. ஆனால், இதில் மூன்றில் ஒரு பங்கு பாம்புகள் தான் விஷமுள்ளவைகளாகும். உலகிலேயே அதிக வகையான பாம்புகள் பிரேசில் நாட்டில்தான் இருக்கின்றன. அதேபோன்று,  உலகிலேயே அதிக விஷமுள்ள பாம்புகள் ஆஸ்திரேலியாவில் தான் இருக்கின்றன. உள்நாட்டு தைப்பன் என்று அழைக்கக்கூடிய ஒரு வகை விஷப்பாம்பு ஆஸ்திரேலியாவில் வாழ்கின்றது. உலகிலேயே அதிக விஷமுள்ள பாம்பு இது என்று சொல்லப்படுகிறது. இந்தப் பாம்பு கடித்த ஆறாவது நிமிடத்தில், மனிதன் இறப்பதற்குண்டான செயல்கள் அவனது உடலில் தொடங்கிவிடுமாம்.

சைபீரியா, அலாஸ்கா, கிரீன்லாந்து, அன்டார்டிகா பகுதி, மத்திய மற்றும் வடக்கு கனடா,  வடக்கு பின்லாந்து, ஆர்டிக் சுற்றின் வடக்கு,  முதலிய பகுதிகளில் பாம்புகள் வாழ்வதில்லை என்று சொல்லப்படுகிறது. இந்தியாவில் சுமார் 270 வகையான பாம்புகள் இருக்கின்றனவாம். இதில் சுமார் அறுபது வகை பாம்புகள் அதிக விஷமுள்ளவை. ஆனால் நம் மக்களுக்கு அதிகமாகத் தெரிந்தது நல்ல பாம்பு, நாகப்பாம்பு, சாரைப்பாம்பு, தண்ணிப்பாம்பு, பச்சைப்பாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன் பாம்புகளே. எந்தப் பாம்பைப் பார்த்தாலும், நல்ல பாம்பு என்று சொல்லப்படும் பழக்கம் நம்மூரில் அதிகம் உண்டு. ஏனென்றால் படங்களிலும், பாடல்களிலும், பாடங்களிலும் அதிகமாக இடம்பெறுவது நல்ல பாம்பின் பெயர் மட்டுமே.

நம் நாட்டைப் பொறுத்தவரை, நகர்ப்புறப் பகுதிகளை விட, கிராமப்புறப் பகுதிகள் தான் மிக அதிகம். எனவே பாம்புகளின் தொடர்பு அதிகம் இருக்க வாய்ப்பு, கிராமப்புறங்களில் இருப்பவர்களுக்கே மிக அதிகம். நேரடியாகப் பாம்பைப் பார்க்காமல், டிவியிலும், சினிமாவிலும் மட்டுமே பாம்பைப் பார்த்து வாழ்பவர்களும் உலகில் இருக்கத்தான் செய்கிறார்கள். கொடுத்து வைத்தவர்கள். நாகரிகத்தின் உச்சியில், நவீனமயமான விஞ்ஞான உலகில், மனிதர்கள் வாழும் இடங்களில், பெரும்பாலும் பாம்புகள் வாழ்வதில்லை. பாம்புகள் பெரும்பாலும் மனிதர்களைத் தொந்தரவு செய்வதில்லை. மனிதர்கள்தான் பாம்புகளைத் தொந்தரவு செய்கிறார்கள்.

பலவகை எலிகள், பலவகை அணில்கள், பலவகை பல்லிகள் இன்னும் பல ஊர்வனவைகள் தான் பாம்புகளுக்கு இரையாக பெரும்பாலும் கிடைக்கிறது. தன்னுடைய உணவை மடக்கிப் பிடிப்பதற்கும், தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் தான், பாம்புக்கு விஷம் இயற்கையாக கொடுக்கப்பட்டிருக்கிறது. பாம்புகளை நாம் தொந்தரவு செய்தாலொழிய, பாம்புகள் தேவையில்லாமல் வீடு தேடி வந்து கடிப்பதில்லை. தென்னிந்தியாவில் மிக அதிகமாக உபயோகப்படுத்தும் பாம்பின் பெயர் நல்ல பாம்பு. ஆனால் நல்ல பாம்பைக் கூட நாம் தொந்தரவு செய்யாவிட்டால்,  அதன் வேலையை அது பார்த்துக் கொண்டுதான் இருக்கும். நாம் தொந்தரவு பண்ணினால் தான், அது அதன் பெயருக்கு தகுந்தாற்போல் இருப்பதில்லை. வேலையைக் காட்டிவிடும்.

பாம்பின் விஷம், பல என்ஸைம்கள், பல அளவுகளில் புரதங்கள், அமைன்ஸ், பல கொழுப்புகள், பல உலோக அயனிகள், சோடியம், பொட்டாசியம், கால்சியம்,  மக்னீசியம், துத்தநாகம் போன்ற பொருட்கள்,  பாலிபெப்டைட் என்ஸைம் ஆகியவைகளின் கூட்டுக் கலவையே. மேற்கூறிய பொருட்களுடன் வேறு சில பொருட்களும் சேர்ந்துதான் பாம்பின் விஷம் உற்பத்தி ஆகிறது. பாம்பின் விஷம் நரம்பு மண்டலத்தை காலி பண்ணிவிடும். ரத்த செல்களையும், ரத்த மண்டலத்தையும்,  காலி பண்ணிவிடும். 

இருதயத் தசைகளை காலி பண்ணிவிடும். உடலிலுள்ள தசைகளை காலி பண்ணிவிடும். உடலிலுள்ள கோடிக்கணக்கான செல்களை காலி பண்ணிவிடும். பாம்பின் விஷம் மிகச் சாதாரணமானது என்று நினைத்துவிடாதீர்கள். விஷப்பாம்புகளின் விஷமானது முதலில் கடித்த இடத்தைச் சுற்றியுள்ள திசுக்களையும், தோலையும் பாதித்துவிடும். அடுத்தது ரத்தத்திலுள்ள செல்களைப் பாதிக்கும். அடுத்தது ரத்தக்குழாய்களைப் பாதிக்கும். பாம்புக்கடி மிகக் கடுமையாக இருந்தால், பாம்பின் விஷமும் மிக அதிகமாக, மிக வேகமாக, மிகத் தீவிரமாக உடலில் பாயும், பரவும். பெரும்பாலான பாம்புக்கடிகள், கடித்தவுடன் கடித்த இடத்தில் உடனடியாக,  தாங்கமுடியாத மிகக் கடுமையான வலி ஏற்படும். 

சில சமயங்களில் ஏதோ ஒரு பாம்பு கடித்திருக்கும். கடித்தது என்ன வகை பாம்பு என்று பார்ப்பதற்குள், பாம்பு மறைந்திருக்கும். அதனால் கடித்தது விஷமுள்ள பாம்பா அல்லது விஷம் இல்லாத பாம்பா என்று கண்டுபிடிக்க நேரம் ஆகிவிடும். சில நேரங்களில் பாம்பு ஒருவரைக் கடித்திருக்கும். ஆனால் விஷம் பாம்பின் வாயிலிருந்து, மனிதனின் உடலுக்குள் ஏறியிருக்காது. வெறும் கடி மட்டும்தான் ஏற்பட்டிருக்கும். ஆனால் விஷம் ஏறியிருக்காது. விஷம் உடலுக்குள் ஏறாவிட்டாலும், பாம்பு கடித்துவிட்டது என்ற அதிக பயமே, கடும் அதிர்ச்சியை உண்டாக்கி உயிர் இழப்பை ஏற்படுத்திவிடும். விஷம் ஏறாமல், வெறும் கடி மட்டும் தான் என்றால் தப்பித்துவிடலாம். தைரியம் தேவை.

ஆனால், கடித்த இடத்திலிருந்து ரத்தம் வடிந்து கொண்டே இருந்தால், விஷம் உடலில் பாய்ந்திருக்கிறது என்று அர்த்தம். ஏனெனில் பாம்பின் விஷம் முதலில் ரத்தத்தை உறையச் செய்யாது. ரத்தம் உறைவதைத் தடுத்துவிடும். அதனால் பாம்பு கடித்த இடத்திலிருந்து ரத்தம் வழிந்து கொண்டே இருக்கும்.

பாம்பு கடித்த இடம் உடனடியாக சிவந்துவிடும். வீங்கிவிடும். இந்த சிவந்து போவதும், வீங்குவதும் கையில் கடித்தால் கை முழுவதுமோ அல்லது காலில் கடித்தால் கால் முழுவதுமோ ஏற்பட்டுவிடும். கடித்த இடத்தைச் சுற்றியுள்ள தோல் இறுக்கமாகி விடும். தோல் வெளுத்துப்போன மாதிரி ஆகிவிடும். சின்னச் சின்னக் கொப்புளங்கள் நிறைய உண்டாகி, கொப்புளங்கள் முழுவதும் ரத்தம் அடைந்திருக்கும். சிகிச்சையை சீக்கிரம் ஆரம்பிக்காவிட்டால், கடித்த இடத்தைச் சுற்றியுள்ள திசுக்களும், தசைகளும் ரத்தக் குழாய்களும், நரம்புகளும் நாசமாகி, கருப்பாகி, சிதைந்து சின்னாபின்னப்பட்டுப் போய் ஒன்றுக்கும் உதவாமல் போய்விடும். 

சில சமயங்களில் விரல்களையோ, காலையோ கூட வெட்டி எடுத்துவிட நேரிடும். இதுபோக காய்ச்சல், குளிர், உடல் முழுவதும் அதிக சோர்வு, தலைசுற்றல், வாந்தி, பதட்டம், பேதி, நெஞ்சுவலி, தலைவலி, ஆகியவை ஏற்படும். மேற்கூறிய அறிகுறிகளெல்லாம், பாம்பின் விஷத்தினால் மட்டுமல்ல, பாம்பு கடித்துவிட்டதே என்ற அதிக பயத்தினாலும் தான். பாம்புகள் கடித்தால் முதலில் கடித்த இடத்தில் தாங்கமுடியாத வலி, உடனே ரத்தம் வடிதல், வீக்கம் ஆகியவை ஆரம்பிக்கும். அதிகமான பிரச்னைகள் கொஞ்சம் கொஞ்சமாக மெதுவாகத்தான் ஆரம்பிக்கும்.

ரத்தத்தை நஞ்சாக்கும் பாம்பின் விஷம், ரத்த ஓட்டத்தில் கலக்கிறது. விஷம் ரத்தக் குழாய்களில் துளை போடுகிறது. இதனால் ரத்தக்குழாய்களில் ஓட்டை விழுந்து, ரத்தம் அங்கங்கே வெளியே வர ஆரம்பிக்கிறது. ரத்தம் வெளியே வருவது என்பது தோலுக்கு உள்ளேயே நடக்கிறது. தோலுக்கு வெளியே நடந்தால், நமக்குத் தெரியும். தோலுக்கு உள்ளே நடப்பதால், நமக்கு தெரியாது. உடலுக்கு உள்ளேயே பல இடங்களில் ரத்தம் வடிய ஆரம்பிக்கும். ரத்தம் வழிவதை நிறுத்த வழியே கிடையாது. அதனால் உடலின் பல இடங்களிலும் உள்ளுக்குள்ளேயே ரத்தம் வழிந்து,  வழிந்து கடைசியில் அதிக ரத்தக் கசிவினால் உயிர் இழக்க நேரிடும். ரத்தம் உறைந்தால் உடலுக்குள் வடியும் ரத்தம் நின்றுவிடும். ஆனால் பாம்பின் விஷம் ரத்தத்தை உறைய விடாது. ரத்தம் உறைதலுக்கு மிக உபயோகமாக இயற்கையாகவே உடலில் இருக்கும் பிளேட்லெட் என்று சொல்லக்கூடிய ரத்த செல்களின் எண்ணிக்கையை பாம்பின் விஷம் குறைத்துவிடும்.

பல் ஈறுகளில் ரத்தம் கசிய ஆரம்பிக்கும். வாந்தியில் ரத்தம் கலந்து வரும். மலத்தில் ரத்தம் கலந்து வரும். சிறுநீரில் ரத்தம் கலந்துவரும். உடலெங்கும் ரத்த மயம்தான். மூச்சுவிட சிரமம், தலைவலி, நெஞ்சுவலி, கண்பார்வை கொஞ்சம், கொஞ்சமாக மங்குதல், கண் இமைகள் தானாகவே மூடிக்கொள்ளுதல், நாக்கு, வாய் உலர்ந்து போதல், கைவிரல், கால்விரல்களில் கூச்சம், மரத்துப்போன மாதிரி தென்படுதல், வாயில் ஒருவித உலோக சுவை அல்லது ரப்பர் சுவை, அதிகமாக எச்சில் சுரத்தல், பேசவும் விழுங்கவும் முடியாத நிலை, பார்வையில் இரண்டு உருவங்கள் தெரிதல், மனக்குழப்பம், போன்ற அறிகுறிகள் பாம்பின் விஷம் ரத்தத்தின் மூலம் உடலெங்கும் பரவப்பரவ ஏற்பட ஆரம்பிக்கும். 

ரத்தத்துக்குத் தான் நல்ல பொருள் எது, கெட்ட பொருள் எது என்று தெரியாதே அதனால் தன்னிடம் வந்து சேரும் எல்லாப் பொருள்களையும், உடலெங்கும் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும். ரத்தத்திற்கு தெரிந்தது அவ்வளவுதான். அதனால் பாம்பின் கடுமையான விஷத்தையும் ரத்தம் சுமந்து கொண்டு, வேக வேகமாக எல்லா இடத்துக்கும் கொண்டு போய்ச் சேர்த்துவிடுகிறது. 

எனவே ஒன்றன்பின் ஒன்றாக இந்த அறிகுறிகளெல்லாம் ஏற்பட ஆரம்பிக்கும். கடைசியாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட ஆரம்பிக்கும்.பாம்பு கடித்த இடத்திலுள்ள பற்களின் பதிவுகளை வைத்தே,  கடித்தது என்ன வகையான பாம்பு என்று ஓரளவு முடிவு செய்துவிடலாம். இரண்டு துவாரங்கள் தோலில் இருந்தால், கண்டிப்பாக விஷப்பாம்பாகத்தான் இருக்க முடியும். அதே நேரம், இரண்டு வரிசையாக தோலில் அதிக துவாரங்கள் இருந்தால்,  கடித்தது விஷப்பாம்பு அல்ல என்று முடிவு பண்ணலாம். 

பாம்பு கடித்தவுடன் செய்ய வேண்டியவை: 

1) பெரும்பாலும் கை கால்களில் தான் பாம்பு கடிக்கும். இருதயத்துக்கு சமமாக நமது கை அல்லது கால்களை வைத்திருக்க வேண்டும். இருதய லெவலுக்கு மேலே கை அல்லது கால்களை தூக்கக் கூடாது. 

2)கடித்த இடத்தில் ஐஸ் வைப்பது, இலையின் சாறுகளை பிழிந்து உளற்றுவது முதலியவைகளை செய்ய ஆரம்பித்து நேரத்தை வீணடிக்கக்கூடாது. பாம்பு கடித்த சில நொடிகளில் விஷம் ரத்தத்தில் கலந்துவிடும். எனவே விஷமுறிவு மருந்து கொடுக்கும் சிகிச்சையை உடனடியாக ஆரம்பிக்க என்ன செய்ய வேண்டும் என்று யோசித்து வேகவேகமாக செயல்படவேண்டும்.

3) கடிபட்டவர்கள் காடு,மேடு, தோட்டம், வயல் போன்ற இடங்களில்தான் பெரும்பாலும் இருப்பார்கள். உடனடியாக முதலுதவிக்கு ஆள் கிடைக்காவிட்டால், அருகிலுள்ள மருத்துவமனைக்கு எவ்வளவு சீக்கிரம் போக முடியும் என்பதை மட்டுமே யோசித்து செயல்பட வேண்டும்.

4)கடித்த அரை மணி நேரத்திற்குள் சிகிச்சை ஆரம்பிக்கப்பட வேண்டும். கடித்தவுடனே எழுந்து நடக்க, கை கால்களை ஆட்ட, கை கால்களை உதற, ஓட இதெல்லாம் செய்யாமலிருப்பது நல்லது. ஏனெனில் உடலை அசைக்காமல் இருந்தால், ரத்தம் மூலம் விஷம் பரவும் வேகம் குறையும். இதுபோக ரத்தம் உறைதல் தன்மையை உண்டு பண்ணக்கூடிய காரணிகளின் அளவை பாம்பின் விஷம் குறைத்துவிடுகிறது. இதனால் ரத்தக்கசிவு அதிகமாகிறது.

முன்னோர்கள் காலத்தில் அதாவது பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு, பாம்பு விஷத்திற்கு தேவையான எதிர்ப்புச்சக்தி, மனித உடலிலேயே இயற்கையாக இருந்ததாக சொல்லப்படுகிறது. சீன மருத்துவ உலகில் பாம்பின் விஷம் மிக மிக மிக மிகச் சிறிய அளவில் மருந்தாக உபயோகப்படுத்தப்பட்டு வருகிறதாம்.

விஷப்பாம்பு கடித்திருக்கிறது என்று உறுதி செய்யப்பட்டாலும், செய்யப்படாவிட்டாலும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்வது தான் மிகச் சிறந்தது. உடனடியாக சிகிச்சை அதாவது விஷமுறிவு மருந்து கொடுக்கப்பட்டால் நிறையபேர் பிழைத்துக் கொள்வார்கள். சிலர் சரியான சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல், அரைகுறை சிகிச்சைகளை எடுத்துக் கொள்வதினால் தான் உயிர் இழக்க நேரிடுகிறது.

"ஆன்டிபாடி' என்று சொல்லக்கூடிய எதிர்முறிவு சக்திப்பொருள், ரத்தத்திலுள்ள பிளாஸ்மா திரவம்,  ரத்தத்திலுள்ள பிளேட்லெட் செல்கள் முதலியவற்றை உடனடியாக உடலுக்குள் செலுத்த ஆரம்பித்தாலே,  பாம்பு கடி பட்டவரை பிழைக்க வைத்துவிடலாம். 

இந்த முதலுதவி மற்றும் உயிர்காக்கும் பொருட்கள், எல்லா மருத்துவமனைகளிலும் தயார் நிலையில் கிடைப்பதில்லை. இந்தப் பற்றாக்குறை, வசதியின்மை நம் நாட்டில் மட்டுமல்ல உலகெங்குமே இதே நிலை தான். நாம் காடுகளை ஆக்கிரமிக்க ஆரம்பித்தபிறகு, இப்பொழுதெல்லாம் பாம்புகள் நகரங்களுக்குள்ளும் வர ஆரம்பித்துவிட்டது. பாம்பின் கண்ணில் படாமல் இருக்க முடிந்தவரை முயற்சி செய்யுங்கள்.

-தொடரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

SCROLL FOR NEXT