முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

மனம் போல் வாழ்வு!

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மன நலக் காப்பக வளாகத்தில் உள்ள பிள்ளையார் கோயிலில் மிக எளிய முறையில்அண்மையில் நடைபெற்ற திருமணம் சமூக வலைதளத்திலும், ஊடகங்களிலும் பெரிய அளவில் வைரலாகியது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:45 AM
பகிர்:

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மன நலக் காப்பக வளாகத்தில் உள்ள பிள்ளையார் கோயிலில் மிக எளிய முறையில் அண்மையில் நடைபெற்ற திருமணம் சமூக வலைதளத்திலும், ஊடகங்களிலும் பெரிய அளவில் வைரலாகியது.

நாற்பத்து இரண்டு வயதான மகேந்திரன், முப்பத்து ஆறு வயதான தீபா ஆகியோர்தான் மணமக்கள். மிக நெருங்கிய குடும்பத்தாரைப் போலவே மனநலக் காப்பக மருத்துவர்கள், செவிலியர்கள், இதர ஊழியர்கள் உள்ளிட்டோர் மனம் நெகிழ்ந்து ஆனந்தக் கண்ணீர் விட்டு வாழ்த்தினர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் சிகிச்சைக்காக, தனித்தனியே வந்தவர்கள் குணமடைந்து, அங்கேயே இருக்கும் பகல் நேரக் காப்பகத்தில் பணியாற்றினர். ஒருவரையொருவர் புரிந்துகொண்டு, காதலிக்க இதற்கு பச்சைக்கொடியும் காட்டப்பட்டது. காப்பகத்தின் 228 ஆண்டுகால வரலாற்றில் இப்படி ஒரு திருமணம் நடப்பது இதுவே முதல் முறை.

இந்தத் திருமணம் எப்படி சாத்தியமானது? என்று மனநலக் காப்பக இயக்குநர் பூர்ண சந்திரிகாவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:

""சென்னையைச் சேர்ந்த மகேந்திரன், வங்கியில் வேலை பார்த்தவர். வேலூரைச் சேர்ந்த தீபா, ஆசிரியையாக வேலை பார்த்தவர். மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர். இங்கே கவனத்துடன் முறையான சிகிச்சை அளிக்கப்பட்டது. நல்ல மாற்றங்கள் ஏற்பட்டதை அடுத்து, விடுதியில் தங்கிக்கொண்டு, மனநலக் காப்பகத்தில் செயல்பட்டுவரும் பகல் நேர மையத்தில் பணியாற்றத் தொடங்கினர்.

இருவருக்கும் ஒருவர் மீது ஒருவருக்கு அக்கறை ஏற்பட்டு, ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்ளத் துவங்கினர். தொடர்ந்து அடிக்கடி சந்தித்து பேசத் துவங்கினர்.

இருவரிடமும் மனம்விட்டு பேசினேன். இருவரும் உறுதியாக இருந்தனர். பின்னர், இருதரப்பு குடும்பத்தினரையும் அழைத்து ஆலோசனை செய்து, அவர்களின் சம்மதத்தைப் பெற்றோம்.

தொடர்ந்து மருந்துகள் எடுத்துக் கொண்டால் போதும் அவர்கள் நலமுடன் மணவாழ்க்கை நடத்தலாம் என்ற நிம்மதியும் இருந்தது.

அதே சமயம், இவர்கள் திருமணத்தை நல்லபடியாக நடத்தி வைத்து, இவர்களின் மணவாழ்க்கையைத் துவக்க எப்படி ஏற்பாடு செய்து கொடுக்கப்போகிறோம் என்ற மலைப்பும் இருந்தது.

திருமண மண்டபம் பார்த்து, ஏற்பாடு செய்தால் செலவு அதிகமாகும். எனவே இருதரப்பு குடும்பத்தினருமாக சுமார் 50 பேர் மட்டும் கலந்துகொள்ளும் வகையில் எளிமையாக திருமணம் நடத்த முடிவு செய்தோம். தன்படி, காப்பக வளாகத்தில் இருக்கும் பிள்ளையார் கோயிலில் திருமணம் நடைபெற்றது.

காப்பகத்தில் பணியாற்றும் சிலர் திருமணத்துக்கும், அதன் பின் அவர்கள் குடும்பம் நடத்துவதற்குத் தேவையான கேஸ் அடுப்பு, பாத்திரங்கள் போன்ற பல்வேறு பொருள்களை அன்புடன் வழங்க முன்வந்தார்கள். மணமகள் அலங்காரத்துக்குக் கூட ஒருவர் ஏற்பாடு செய்தார். நாங்கள் திருமண ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தோம்.

இந்தத் திருமணத்தை அறிந்த வில்லிவாக்கம் எம்.எல்.ஏ. வெற்றியழகன் தானே கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைக்க முன்வந்தார். திருமணத்தன்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், மா.சுப்ரமணியன், அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன் உள்ளிட்டோரும் வாழ்த்தினர்.

மனநலப் பாதிப்பு என்பது மனிதர்களுக்கு ஒரு வாழ்நாள் தண்டனை இல்லை; தக்க நேரத்தில் அதனைக் கண்டறிந்து அவர்களுக்கு, உரிய சிகிச்சை அளித்தால், மன நோய் பாதிப்பில் இருந்து மீள முடியும். அதன்பின்னர், தொடர்ந்து உரிய மருந்துகளை எடுத்துக் கொள்வதன் மூலமாக மனநோய் மறுபடியும் பாதிக்காமல் தடுக்க முடியும்.

அவர்களுக்கும் சாதாரணமான வாழ்க்கை வாழ உரிமை உள்ளது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, அவர்கள் நார்மல் வாழ்க்கை வாழ அவர்களுக்கு மருத்துவர்களாலும், இந்தச் சமூகத்தாலும் உதவ முடியும்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.