ஞாயிறு கொண்டாட்டம்

பால் தேவையை நிறைவு செய்யும் கொடி ஆடுகள்!

""நாட்டின் எதிர்கால பால் தேவையை கொடி ஆடுகளே நிறைவு செய்ய வாய்ப்பு உள்ளது''  என்கிறார் புதுச்சேரி ராஜீவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சி மைய புல முதல்வர் வீராசாமி செழியன்.

ஜெயப்பாண்டி


"நாட்டின் எதிர்கால பால் தேவையை கொடி ஆடுகளே நிறைவு செய்ய வாய்ப்பு உள்ளது''  என்கிறார் புதுச்சேரி ராஜீவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சி மைய புல முதல்வர் வீராசாமி செழியன்.

அமெரிக்க ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் உலகின் தலைசிறந்த ஆராய்ச்சியாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.  அதில்,  2019-ஆம் ஆண்டு முதல் 2022 வரையிலான 3 ஆண்டுகள் தொடர்ச்சியாக, வீராசாமி செழியன் சிறப்பிடம் பெற்றுள்ளார். அதன்படி, இந்திய விஞ்ஞானிகள் பட்டியலில் 167-ஆவது இடத்தையும் அவர் வகிக்கிறார்.

இவருடன் ஓர் சந்திப்பு:

ஆடுகள் குறித்த குறித்த உங்களின் ஆய்வு என்ன?

மனிதர்களால் வளர்க்கப்படும் கால்நடைகள் மாறும் காலச்சூழலை எப்படி எதிர்கொள்கின்றன என்பதை மையமாக வைத்தே ஆய்வுகளை மேற்கொண்டேன்.

குறிப்பாக, தென்னிந்தியாவில் வளர்ப்பு ஆடுகள், மாறி வரும் காலச்சூழலை எதிர்கொண்டு வாழும் தன்மை பெற்றுள்ளது என்பதை  ஆய்வில் அறிந்தமைக்காக, சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளேன்.

இந்தியாவில் 23 வகை ஆட்டு இனங்கள் உள்ளன. தமிழகத்தில் கண்ணி, கொடி, சேலம் கருப்பு ஆகியவையே முக்கிய இனங்களாக உள்ளன. ஆந்திரத்தில் ஒஸ்மணாபாடி, கர்நாடகத்தில் நந்திதுர்கா, கேரளத்தில் மலவாரி, அட்டபாடி என வரையறுக்கப்பட்டுள்ளன.

தென் மாநிலங்களில் வரையறுக்கப்பட்ட இன ஆடுகளில், தமிழக கொடி ஆடுகளே காலச்சூழல் மாற்றத்தை எதிர்கொண்டு வாழும் திறனை அதிகம் பெற்றுள்ளன.

பசுக்களையும், ஆடுகளையும் பால், மாமிச உணவு ஆகியவற்றுக்காகவே மனிதர்கள் வளர்க்கின்றனர்.  அதிகரிக்கும் குடியிருப்புகளால் சுருங்கிவரும் மேய்ச்சல் நிலப் பகுதிகள், பருவநிலை மாற்றத்தால் தாக்கும் பல்வகை நோய்கள், நாகரிக மாற்றத்தால் கால்நடைகளுக்கான இருப்பிட பற்றாக்குறை, செயற்கை உணவு, விலையேற்றத்தால் ஏற்படும் உணவுப் பற்றாக்குறை ஆகிய காரணிகளே வளர்ப்பு மாடு, ஆடுகளுக்கான சவால்களாக உள்ளன.

அவற்றை எதிர்கொள்வதில் கொடி ஆடுகள் மற்றவற்றைவிட முதலிடம் வகித்துள்ளன. இந்த ஆடுகளுக்கு தனியாக தீவனம் தேவையில்லை. நிலத்தில் கிடைக்கும் புல் உள்ளிட்ட தாவரங்களையும், மரத்திலுள்ள இலை, தழைகளையும் உள்கொள்கின்றன. கொட்டகை போன்ற தனி வாழ்விடம் தேவையில்லை. வெயிலிலும், மழையிலும் கூட வெட்டவெளியில் இரவு, பகலில் தாக்குப்பிடிக்கின்றன. நோய் எதிர்ப்பு சக்தியிலும், அவை மற்றவற்றைவிட ஒருபடி முன்னே உள்ளன. ஒரு வாரம் வரையில் குடிநீர் அருந்தாமலே ஆடுகள் இருப்பதும் ஆய்வில் தெரியவருகிறது. குறைந்த உணவுடன், அதிக வளர்ச்சியையும் அவை பெறுகின்றன.

ஆடுகளைப் பற்றி வேறு யாரேனும் ஆய்வுகள் மேற்கொள்கின்றனரா?

உலகச் சூழலியல் மாறுபாடு ஏற்படுத்தும் தாக்கம் குறித்து சிலி நாட்டைச் சேர்ந்த கார்வாஜல் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். அவர்களுடன்  எனது ஆய்வைப் பகிர்ந்துள்ளேன்.
உலகத்தில் 80 நாடுகள் ஆடு வளர்ப்பை பிரதானமாகக் கொண்டுள்ளன. அதில் தென்னிந்திய கொடி ஆடுகளே சூழலியல் மாற்றங்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு வாழும் தன்மையுடன் இருப்பதும் ஆய்வு பரிமாற்றத்தில் உறுதியானது.

ஆய்வின் முக்கிய அம்சங்கள் என்ன?

தென்னிந்திய அளவில் 2050-ஆம் ஆண்டில்  காலச்சூழலை எதிர்கொள்ள முடியாமல் பல பசு இனங்கள் அழியும் அபாயம் உள்ளதாகத் தெரிகிறது. பல்வேறு கோழி, பன்றி இனங்களும் அழிவை நோக்கிச் செல்வதும் தெரிய வந்துள்ளது.

கொடி ஆடுகள் 10 முதல் 12 ஆண்டுகள் ஆயுளைக் கொண்டிருந்தாலும், காலச்சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ளும் திறன் மிகுந்தவையாக உள்ளன. ஆண்டுக்கு இரு முறை இனப்பெருக்கம் செய்கின்றன. பிறக்கும் குட்டிகள் அனைத்துமே ஆயுளை நிறைவு செய்பவையாகவே உள்ளன.

தமிழகத்தில் கொடி ஆடுகள் ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி,  சேலம் மாவட்டப் பகுதிகளில் அதிக அளவில் வளர்க்கப்படுகின்றன. எதிர்காலத்தில் மாடுகளுக்கான இடத்தை கொடி ஆடுகளே நிரப்பும் நிலை ஏற்படும். அதே போன்று பால் தேவையையும் ஆடுகளே ஈடு செய்யும் இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு அறிக்கையாக அளிக்க உள்ளேன்.

ஆடுகளில் இனப்பெருக்கம் எப்படி உள்ளது?

நாட்டில் ஆடுகள் குறித்த ஆய்வுகளில் 2010-ஆம் ஆண்டுக்குப் பிறகே அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அப்போது,30 ஆயிரம்  கொடி ஆடுகளே இருந்தன. தற்போது அவற்றின் எண்ணிக்கை 1.67 லட்சமாக உள்ளது. ஆட்டு இனங்கள் எண்ணிக்கையில் குறைந்துவரும் நிலையில் கொடி ஆடுகள் அதிகரித்து வருவது. அவற்றின் முக்கியத்துவம் அதிகரிக்கும்போது, எதிர்காலத்தில் நாட்டின் பால் தேவையை கொடி ஆடுகள் நிறைவு செய்யும் வாய்ப்புள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT