""வாழ்க்கையின் எந்தப் பக்கத்தைத் திறந்து பார்த்தாலும் அதில் ஆச்சரியங்கள் நிறைந்து கிடக்கிறது. அப்படித்தான் இது. பெரிய திட்டமிடல் இருந்தது. எங்கே கிரிமினல்கள் உருவாகி வருகிறார்கள் என்று தேடினால், உங்களுக்குக் கிடைப்பது எதிர்பாராத திருப்பங்கள். உங்களின் சந்தோஷத்திற்கும், நிறைந்த எதிர்பார்ப்பிற்கும் நிச்சயம் கேரண்டி. முழுப் படத்தையும் கையில் வைத்துக் கொண்டுதான் நம்பிக்கையோடு பேசுறேன். நானே ரசிக மனப்பான்மையால் பார்த்து ரசித்துதான் சொல்கிறேன்.'' ஆர்வமாகப் பேசத் தொடங்குகிறார் டி.எம். ஜெயமுருகன். "ரோஜா மலரே', "அடடா என்ன அழகு' படங்களை இயக்கியவர். இப்போது " தீ இவன்' படத்தின் மூலம் மீண்டும் இயக்குநராகக் களம் இறங்குகிறார்.
கார்த்திக், சுகன்யா என படத்துக்கு வேறு ஒரு கலர் இருக்கே...
எல்லாமே திட்டமிட்ட ஒன்றுதான். இன்றைய சினிமா மிகவும் துணிச்சலாகப் பேச வேண்டிய விஷயம் இது. அதை எடுத்துச் சொல்ல எல்லோருக்கும் தெரிந்த முகங்கள் வேண்டும். அதற்குத் துணையாக வந்தவர்கள்தான் கார்த்திக், சுகன்யா. இருவருக்கும் ஒரு இமேஜ் உண்டு. அது இந்தக் கதைக்காக சரியாகப் பொருந்தி வந்திருக்கிறது. கார்த்திக் யார் என்று விளம்பரப்படுத்தி யாருக்கும் தெரிய வேண்டியதில்லை. பார்த்தாலே தெரிந்து விடும். கார்த்திக் சாருக்கு சினிமா பற்றி நல்ல கனவுகள் உண்டு. சிறு வயதில் இருந்தே சினிமாவில் பயணிக்கிறவர், அது குறித்தே யோசித்துக் கொண்டிருப்பவர்.
அந்த அர்ப்பணிப்புக்கு இன்னும் ஒரு தகுதியை உண்டாக்கி தரும் விதமாக இந்தப் படம் இருக்கும். ஷூட்டிங் சரியாக வர மட்டார். சரியாக ஒத்துழைப்பு கொடுக்க மாட்டார் என்றெல்லாம் அவர் மீது ஒரு முத்திரை உண்டு. படப்பிடிப்புக்கு இடைவெளியில் அது பற்றி ஒரு பேச்சு வந்தது. "" ஜி... நீங்கள் சொல்லுவது மாதிரி நடந்திருந்தால்.. எப்படி 100-க்கும் அதிகமான படங்களில் நான் நடித்திருக்க முடியும்...'' என்றார். அதோடு அந்த பேச்சு முடிந்து விட்டது. எல்லாவற்றுக்கும் அதுவே பதில். சுகன்யா மேடமும் அப்படித்தான். எனக்கு இருவரும்தான் பலம்.
இது என்ன சன்னி லியோன் சீசனா....
ஒரு குடும்ப நிகழ்வில் நடன நிகழ்ச்சி வைப்பது போன்றுதான். சன்னி லியோனை பயன்படுத்தி இருக்கிறோம். சன்னி லியோனை மும்பையில் சந்தித்து இப்படத்தின் கதையை சொன்னபோது, "தமிழ் கலாச்சாரத்தை காப்பது போன்ற கதையுள்ள இப்படத்தில் நான் இடம் பெறுவதை மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன்' என்று சொன்னதே பெரும் பலம். பட்ஜெட் என்ன? நடிகர்கள் யார் என்றெல்லாம் பார்க்காமல் கதைக்காக அவர் ஒப்புக் கொண்டார்.
எந்த ஆடம்பரமும் பந்தாவும் இல்லாமல் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து சன்னிலியோன் நடித்துக்கொடுத்ததற்கு நன்றி சொல்கிறேன்.அவர் அழகாக நடனமாடியுள்ள அந்தப் பாடலில் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்பாகவே முடித்துக் கொடுத்தார்.
கதை என்ன....
ஏதோ ஒரு விதத்தில் எல்லோரும் ஏதோ ஒரு விஷயத்துக்குப் பொறுப்பாகி விடுகிறோம். பெண்மை, கற்பு, ஒழுக்கம் போன்ற கலாசார மதிப்பீடுகள் எல்லாம் வேறு வேறு அர்த்தங்கள் பெற்று உருமாறி விட்டன. சில காலங்களில் பண்பாடு, கலாசாரங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது தெரியாமல் தவிக்கப் போகிறோம். பெண்கள் உடலளவில் பலவீனமானவர்கள் என்பதைத் தெரிந்து கொண்டு எத்தனை பிரச்னைகளை உருவாக்கி விடுகிறது சமூகம்.
இதனால் சொல்ல முடியாத தவிப்பில் இருக்கிறார்கள் பெண்கள். சிக்னலில் கார் துடைத்து விடும் சிறுமிக்குப் பின்னால் எத்தனை ஒரு ரணம் இருக்கும். வறுமை, ஆதிக்க சக்திகளின் பண பலம் என நிறைய விஷயங்கள் இதன் பின்னணியில் உண்டு.
இந்தியாவின் வல்லரசு கனவு... சந்திரனுக்கு விண்கலம் என பெருமைகளைப் பேசிக் கொண்டிருக்கிற நாம், இன்னொரு பக்கம் ரணங்களை உள்நோக்கி பார்ப்பதில்லை. அப்படி ஒரு பார்வை இது முன் வைக்கும். கலாசாரம், பண்பாட்டுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து தீர்க்கமான ஒரு அரசியல் பார்வையும் இருக்கிறது.
பேச வேண்டிய விஷயம்தான்... வேறு என்ன எதிர்பார்க்கலாம்...
தில்லியில் தன் நண்பனோடு கைகோர்த்துப் போன மருத்துவ பெண் அப்படி ஒரு மூர்க்கமான சூறையாடலுக்கு ஆளாவோம் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்.
ரத்தமும் துடிப்புமாக அல்லாடிய அந்தப் பெண் மனதில் எத்தனை கேள்விகள் ஓடியிருக்கும்? தலைநகரில் நடந்த கொடூரம் தடம் தெரியாத குக் கிராமங்களிலும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதைக் கண்டும் காணாமலும் நாம் கடந்து கொண்டுதான் இருக்கிறோம். பெண்களைக் காட்டிலும் ஆண்களை மனதாலும், உடலாலும் வலிமையாய் படைத்தது யாரையும் பலாத்காரப்படுத்த அல்ல... பத்திரமாய் பாதுகாப்பதற்கு. சாகப்போகிற கடைசி நிமிஷத்துல கூட, மனசுக்கு பிடித்தவனின் மடியில தலை சாய்க்க நினைக்கிறவர்கள் பெண்கள். அவர்களுக்கான நம்பிக்கையை ஏற்படுத்தித் தராத இந்த சமூகத்தின் மீதான அதிரடி பாய்ச்சலாக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.