முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

பாட்டியம்மா

தைவான் படத்தின் ஆங்கிலத் தலைப்பு- டூ  மை டியர்  கிராமி இயக்குநர் - யூனிங் சூ வெளியான ஆண்டு- 2012 ஓடும் நேரம்- 85 நிமிடங்கள் பேரன் தனது பாட்டியை நினைத்து சொல்வதோ படம். கதை இதோ:

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:17 AM
பகிர்:

தைவான் படத்தின் ஆங்கிலத் தலைப்பு- டூ  மை டியர்  கிராமி இயக்குநர் - யூனிங் சூ வெளியான ஆண்டு- 2012 ஓடும் நேரம்- 85 நிமிடங்கள் பேரன் தனது பாட்டியை நினைத்து சொல்வதோ படம். கதை இதோ:

என் பேரன்பிக்குரிய பாட்டியம்மா இறந்து போனார். இறுதிச் சடங்குகள் முடிந்து,  அடக்கம் எல்லாம் ஆகிவிட்டது. பாட்டியின் நினைவேந்தலுக்காக- நான் ஒரு இரங்கல்பா எழுதிக் கொண்டிருந்தேன்.

""பாட்டி! நீயே என் உலகம்!'' என்று தொடங்குவது அந்தக் கவிதை.  என் பாட்டிதான் என்னை வளர்த்தெடுத்தாள். துணி ஆலைத் தொழிலாளியான என் அம்மா எப்போதும் வீட்டில் கால் பதிக்காமல் வேலை- வேலை என்று அலைந்து கொண்டிருந்தாள். 

தொழிற்சாலை- தொழிற்சாலை சங்கப் பணி- எல்லாம் அவளை ஆக்கிரமித்துவிடும். அப்பாவும் வீட்டில் இல்லை. அவர் ராணுவத்தில் சேர்ந்துவிட்டதால் எங்கோ தொலைதூரத்தில் இருந்தார்.

நான் பள்ளி  நேரம் போக எப்போதும் பாட்டியுடனேயே திரிந்து கொண்டிருப்பேன்.  ஒருநாள் பாட்டி ஒரு சினிமா படப்பிடிப்புக்கு அழைத்து சென்றாள். இருவர் கத்திச் சண்டை போட்டுக் கொள்ளும் காட்சி.  ஒருவன் வெற்றி பெற -இன்னொருவன் இறந்து விழுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. நான் இறந்துப் போனவனுக்காக அழத் தொடங்கினேன்.

""கண்ணே! இதெல்லாம் நிஜமில்லை. அவர் சும்மா இறந்து போனது போல நடிக்கிறார்!'' என்று சொல்லி- என் பாட்டி  என்னைத் தேற்றினார்.

பாட்டி என்னை அடிக்கடி சினிமா படங்களுக்கு அழைத்துச் செல்வார். ""அலிபாபாவும் நாற்பது திருடர்களும்'' - படம் என்னால் மறக்க முடியாத படம்.
சினிமா பற்றியே எப்போதும் சிந்திக்கத் தொடங்கிய நான் பள்ளிப் படிப்பை முடித்ததும்- திரைக் கல்லூரியில் சேர்ந்துவிட்டேன். திரைக்கதைகளை ஆய்வு செய்தேன்.

அப்பா- போர்முனையில் இறந்த செய்தி வந்தது. துக்கம் மேலோங்கி அழுத அம்மாவை, தழுவிக் கொண்டு பாட்டி ஆறுதல் கூறினார். பாட்டியும் கட்டுப்படுத்த முடியாமல் அழுது ஓய்ந்தாள்.

பாட்டியை ஒருமுறை நான் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது. முழு பரிசோதனைக்காக..! 

வரவேற்பறையில் பாட்டியை உட்கார வைத்துவிட்டு, நான் என் பைக்கை எடுத்துக் கொண்டு வெளியே சென்றேன். 

ஒரு உணவு விடுதியில் பாட்டிக்காகச் சில உணவுப் பொருள்களை வாங்கிக் கொண்டேன்.   மருத்துவமனையை நோக்கி நான் பைக்கில் வந்தபோது- ஒரு பஸ் என் பைக் மீது மோதி விபத்து நடந்தபோது, என் காலில் பலத்த அடி.

அவசரச் சிகிச்சை அறையில் என்னைக் கிடத்தி அறுவைச் சிகிச்சை செய்தனர். பாட்டி என் அருகே வந்து பொங்கிப் பொங்கி அழுதாள். தெய்வாதீனமாக நான் எந்தச் சேதாரமும் இன்றி பிழைத்து எழுந்தேன். பாட்டி தினமும் மருத்துவமனையில் ஆஜராகி விடுவாள். 

கல்லூரி நாள்களில் எனக்கு ஒரு தோழி கிடைத்தாள். நெருக்கமாகப் பழகியதில் கருவுற்றாள் என் பாட்டியிடம் கேட்டேன்.

""பாட்டி! அவள் கருவைக் கலைத்து விட சொல்லவா? நான் மாணவப் பருவத்தில் அல்லவா இருக்கிறேன்?''

பாட்டிதான் பரிந்து பேசி கருவைக் காப்பாற்றினாள். ஆண் குழந்தை எங்களுக்குக் கல்யாணமும் செய்துவைத்தாள்.

எங்கள் ஆலயத்தில்- பாட்டியின் நினைவேந்தலுக்காக, நான் படித்த கவிதை வந்திருந்தோரின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. என் அம்மா துக்கம் மோலோங்க அழுதாள். என் அம்மா விதவையானபோது மறுமணம் செய்துகொள் என்றல்லவா பாட்டி கட்டாயப்படுத்தினாள்.

புத்தாண்டு வந்தது. பாட்டி இல்லாத முதல் புத்தாண்டு விழா இதுதான்! குடும்ப உறுப்பினர்களுக்கு காகித உறையில் பணம் போட்டுப் பரிசளித்தேன். எல்லோரும் உணவு மேஜை அருகில் விருந்துணவு அருந்தினோம்.

என் ஐந்து வயது மகன், ""அப்பா! இப்போது பாட்டி எங்கே இருப்பார்?'' என்று கேட்டான்.

""அவர் தேவதை ஆகிவிட்டார். ஜன்னல் வழியாக மேகத்தைப் பார்! அந்த வெண் பஞ்சு மேகத்தின் பின்னே பாட்டி ஒளிந்துக் கொண்டு நம்மை எல்லாம் பார்க்கிறார்!'' 

நமது புத்தாண்டு விருந்தில் ராணுவ வீரரான என் தந்தையும், என் பாட்டியம்மாவும் ஆவி ரூபத்தில் கலந்துகொண்டு நம்மோடு விருந்துணவு சாப்பிடுவதைப் பார்!'' என்று நெகிழ்ந்தேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.