காவல் துறையில் கருணை உள்ளம்!
சவால்களைத் தகர்த்து சாதனைகள் பல படைக்க உறுதியான மனமும் உயர்வான எண்ணமும் கொண்டிருக்கும் ஆயிரமாயிரம் பெண்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர்தான் ஆமீனா.
சவால்களைத் தகர்த்து சாதனைகள் பல படைக்க உறுதியான மனமும் உயர்வான எண்ணமும் கொண்டிருக்கும் ஆயிரமாயிரம் பெண்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர்தான் ஆமீனா.
தொழில்வளம் மிகுந்த கோவை மாவட்டத்தில் ஒரு சிலர் பல்வேறு காரணங்களால் குடும்பத்தினரை இழந்து ஆதரவற்றவர்களாக, பொதுஇடங்களில் பிச்சை எடுத்து வருகின்றனர். சிலர் ஆதரவற்ற நிலையில் உயிரிழக்கின்றனர். இவர்களை அரசுக்கு சொந்தமான மயானங்களில் அடக்கம் செய்வது வழக்கம். இந்தப் பணியை மேட்டுப்பாளையம் அருகே காரமடை சத்யா நகரைச் சேர்ந்த மைதீன்குட்டி மகள் அமீனா (38) என்பவரும் செய்துவருகிறார்.
மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் இவர், கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சேவை மனப்பான்மையுடன் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்களின் உடல்களைத் தனது சொந்த செலவில் அடக்கம் செய்துள்ளார்.
இவருக்கு 3 சகோதரிகள், ஒரு சகோதரர் உள்ளனர். இவரது கணவர் அன்வர்தீன் (38), தொழிலாளி. இவர்களது மகள் ஜன்னத் பாத்திமா (8), மகன் ஆதீல் (5).
2010-ஆம் ஆண்டு காவலராகப் பணியில் சேர்ந்தார். 2013-ஆம் ஆண்டு வரை கோவைப்புதூர் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையிலும், 2013 முதல் 2016 வரை கோவை மாவட்ட ஆயுதப் படையிலும் பணியாற்றி உள்ளார். பின்னர் 2016 முதல் 2017-ஆம் ஆண்டு வரை மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் துணை எழுத்தாளராகப் பணியாற்றி வந்துள்ளார். 2017-ஆம் ஆண்டு முதல் இதே காவல் நிலையத்தில் பணிபுரிந்துவருகிறார்.
இவர் விபத்தில் காயமடைந்தவர்கள், இறந்தவர்கள், ஆதரவற்ற உடல்கள் தொடர்பாக நீதிமன்றம், அரசு மருத்துவமனைகளில் சான்றிதழ் வாங்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதுபோன்ற நேரத்தில் மருத்துவமனைகளில் பலரது சடலங்கள் ஆதரவற்ற நிலையில் அடக்கம் செய்யப்படாமல் காத்திருப்புப் பட்டியலில் இருக்கும். சில சடலங்கள், இறந்து பல நாள்கள் ஆகியும் அடையாளம் தெரியாமல் ஆதரவற்ற நிலையில் இருப்பதைப் பார்த்துள்ளார்.
அப்போது, ஜீவசாந்தி அறக்கட்டளை சார்பில் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் ஆதரவற்றவர்களின் சடலங்களை போலீஸார் அனுமதியுடன் நல்லடக்கம் செய்து வந்தனர். இவர்களுக்கு அரசு மருத்துவமனை மற்றும் காவல் துறையினரின் தடையில்லா சான்று பெற்று தர அமீனா சென்று வந்துள்ளார். இதனிடையே அவர்களுடன் இணைந்து கடந்த 4 ஆண்டுகளாக சுமார் 100-க்கு மேற்பட்ட ஆதரவற்றவர்களை அடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இதற்காக டி.ஜி.பி. சைலேந்திரபாபுவிடம், அமீனா பாராட்டுச் சான்றிதழ் பெற்றுள்ளார்.
இதுகுறித்து அமீனா கூறியதாவது:
""காவல் துறையில் பணியில் சேர்ந்தபோது, ஆதரவற்றவர்களின் சடலங்களை நல்லடக்கம் செய்ய வாய்ப்பு கிடைத்தது. இறந்தவர்களில் பலர் இளமைக் காலத்தில் வசதி வாய்ப்புடன் வாழ்ந்து இறுதிக் காலத்தில் யாரும் இல்லாமல் ஆதரவற்ற நிலையில் இருந்துள்ளனர். பலர் கொடும்நோய்களுக்கு ஆளாகி இறந்துள்ளனர். இவர்களின் சொந்தங்கள் இறுதி மரியாதை செய்யக்கூட விரும்பவில்லை. அவர்களின் இறுதிச் சடங்கு செய்துள்ளேன்'' என்றார்.
இது குறித்து ஜீவசாந்தி அறக்கட்டளை மேட்டுப்பாளையம் வட்டார நிர்வாகி ரஜாக் கூறுகையில், ""ஒரு பெண்ணாக அல்லாமல் சமூக அக்கறையுடன் அமீனா இச்செயலில் ஈடுபட்டு வருகிறார். ஒருசில சடலங்களை ஆண்களே கைவைத்து தூக்குவதற்கு தயக்கம் காட்டுவர். ஆனால், இவர் எந்தத் தயக்கமும் இல்லாமல் ஆதரவற்றவர்களின் சடலங்களை எடுத்து அடக்கம் செய்வார்''
என்றார்.