புதுச்சேரி கம்பன் மணிமண்டபம் உள்ள சாலையில் அண்மையில் சென்றவர்களை வசீகரித்து ஈர்த்தது அந்தக் காந்தக் குரல். "தத்தனத்தோம் என்று சொல்லியே வில்லினைப் பாட...!' என்ற வரிகள் காற்றில் பறந்து காதுகளில் கேட்டதும் கடந்து போக முடியவில்லை. "அட!
வில்லிசை மன்னர்' என முகத்தில் முறுவல் பூத்தபடியே ஏராளமானோர் மண்டபத்துக்குள் சென்றனர்.
அந்த இசை வெள்ளத்தில் அவர்கள் தங்களின் மெய் மறந்தனர். கதை, கருத்து, கேலி, கிண்டல்... என போகிறது அந்த வில்லுப்பாட்டு. வில்லுப்பாட்டைவிட அதில் நடுநாயகமாக இருந்து பாடுபவரைக்
கண்டதும் வியக்காமல் இருக்கமுடியவில்லை. தமிழின் பெருமையையும், தமிழர்களின் பாரம்பரிய மரபுக் கதைகளையும் வில்லுப்பாட்டு மூலம் சொல்லி வரும் இசைக்கலைஞர் இ.பட்டாபிராமனுக்கோ வயது 92 என்பதுதான் வியப்புக்கு காரணம்.
வில்லிசையை இலக்கு பிசகாமல் எடுத்துச் சொல்கிறார். தாளம் தப்பாமல் பாடுகிறார். கைகள் வில்லின் நாணில் கோலாட்டமாடுகின்றன. அவரது வில்லிசையை பார்க்கப் பார்க்க பரவசமாகிறது.
57 ஆண்டுகளுக்கும் மேலாக வில்லுப்பாட்டு கலையை வீதி வீதியாகக் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர். பத்து விருதுகளைப் பெற்றவர்.
புதுச்சேரி பாகூரைப் பூர்வீகமாகக் கொண்ட இ.பட்டாபிராமன், குயவர்பாளையம் வள்ளலார் வீதியில் வசிக்கிறார். அவருடன் ஓர் சந்திப்பு:
எத்தனை வயதிலிருந்து கலைப் பயணம் தொடங்கியது?
எனது சொந்த ஊர் பாகூர். அரசுப் பள்ளியில்தான் படித்தேன். அப்பா இரிசப்பன், காவலராகப் பணிபுரிந்தவர். நான் ஆசிரியர் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளேன். படிக்கும் காலத்தில் திருவிழா கலை நிகழ்ச்சிகளைப் பார்க்கச் செல்வேன். அப்படி ஒரு முறை வில்லுப்பாட்டைப் பார்க்கச் சென்றபோது, கடலூரில் லட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன் வில்லுப்பாட்டு பாடிக் கொண்டிருந்தார். அதைப் பார்த்து பிரமித்த நான், அவரையே எனது மானசீகக் குருவாகக் கருதி பயிற்சியை எடுக்க ஆரம்பித்தேன்.
நண்பர்களையும் சேர்த்து வில்லிசைக் குழுவைத் தொடங்கி, 57 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறேன்.
வில்லியனூர் திருவிழாவில் அப்போதைய புதுச்சேரி முதல்வரான வெங்கடாசுப்பா ரெட்டியார் முன்னிலையில்தான் எனது முதல் வில்லிசை அரங்கேறியது. அதன்பின்னர், சமீபத்தில் மறைந்த வில்லிசை மகாகலைஞர்
சுப்புஆறுமுகத்தின் நட்பும் கிடைத்தது.
இதுவரை எத்தனை வில்லிசை நிகழ்ச்சி நடத்தியுள்ளீர்கள்?
இதுவரை 2 ஆயிரத்துக்கும் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளேன். நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், மலேசியா சிங்கப்பூருக்கும் சென்று கலை நிகழ்ச்சிகளை பல வாரங்கள் தொடர்ச்சியாககேரள மாநிலத்துக்கு உள்பட்ட திருவனந்தபுரத்தில் எனது வில்லிசையை அம்மாநில அமைச்சராக இருந்த கோவிந்தன்குட்டி விரும்பி கேட்டது மறக்க முடியாதது.
திருவள்ளுவர் சரித்திரத்தை, 1330 குறள்களையும் ராகத்துடன் பாடிவில்லிசை நடத்துவது எனக்கு தனிப்பட்ட பெருமையாகும்.
கோயில்கள், இலக்கிய மேடைகள், அரசு நிகழ்ச்சிகளில் ஆன்மிகக் கதைகள் முதல், சரித்திரக்கதைகள், அரசுத் துறை சாதனைகள் வரையில் மக்களுக்கு கருத்துகளைக் கூறியுள்ளேன்.
பாரதியின் பாஞ்சாலி சபதத்தை உணர்ச்சிப் பெருக்குடன் பாடி நடத்துவதே மனதுக்கு நிறைவாக இருக்கும்.
வில்லிசைக் கலையுடன் நாட்டிய நாடகம், கவிதை, கட்டுரை எழுதுதல் மற்றும் முகர்சிங் எனும் இசை கருவியை வாசிப்பதிலும் எனக்கு ஈடுபாடு உண்டு.
காரைக்கால் அம்மையார், ராமாயணம், நந்தனார் சரித்திரம், மீனாட்சி கல்யாணம், ஆண்டாள் திருக்கல்யாணம், நள தமயந்தி சரிதம் ஆகியன எனது நாட்டிய நாடகங்களில் குறிப்பிடத்தக்கவையாகும்.
எனது வில்லிசையும், நாட்டிய நாடகங்களும் அனைத்து வானொலி நிலையங்களிலும், அரசு தொலைக்காட்சியிலும் பலமுறை ஒலி, ஒளிபரப்பாகியுள்ளன. காதல் பறவை எனும் குறுங்காவிய நூலை எழுதி அது புதுவை அரசின் பரிசையும் பெற்றுள்ளது.
வில்லிசை, கலை நிகழ்ச்சிகள் நடத்திவரும் உங்களுக்கு அதில் சலிப்பு ஏற்படவில்லையா?
விவசாயக் குடும்பத்தில் பிறந்த நான் இடைநிலை ஆசிரியராகப் பணியைத் தொடங்கி, முதல் நிலைத் தமிழாசிரியராக உயர்ந்து, முதுகலைப் பட்டதாரி விரிவுரையாளராகி பணி நிறைவு பெற்றேன். ஒரு மேடையில் ஏறிவில்லிசைத்தால் ஆரம்பத்தில் ரூ.500 ஊதியம் கிடைத்தது. தற்போது ரூ.15 ஆயிரம் தருகிறார்கள்.
கலைஞனுக்கு கைதட்டலும், பாராட்டும் இருக்கும் வரை எந்தக் கவலையும் இல்லை. பார்வையாளர்களின் கரகோசத்திலும், கைதட்டலிலும் மயங்கிய கலைஞன் காசு பணத்தை எப்போதும் பெரிதாக நினைக்கமாட்டான். அதனால் எனக்கு வில்லிசை செய்யவே ஆர்வமாக உள்ளது.
உடல்தான் ஒத்துழைக்க மறுக்கிறது. மேடை ஏறாமலிருப்பதையே பெரும் ஏமாற்றமாக நினைக்கிறேன். உயிர் உள்ளவரை என் உடல் ஆதரவு வரை வில்லில் இருந்து எனது கைகளை பிரிக்கமுடியாது.வில்லிசைப் பாடல்களே எனது மூச்சுக்காற்றாகவும் இருக்கிறது.
எனது பெயரன் முத்தமிழ்வாணனை அக்கலையில் ஈடுபடுத்தியுள்ளேன். படித்து பட்டம் பெற்ற அவர், வில்லிசையை நவீன காலத்துக்கு ஏற்ப எடுத்துச் செல்வதில் எனக்கு மனநிறைவுதான் என்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.