'புனிதமுற்று மக்கள் புது வாழ்வு வேண்டில் புத்தக சாலை வேண்டும் நாட்டில் யாண்டும் - என்றார் பாவேந்தர் பாரதிதாசன். ' வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம் புத்தகச் சாலைக்குத் தரப்பட வேண்டும்- என்றார் பேரறிஞர் அண்ணா.
இந்தக் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி, அண்ணாவின் பிறந்த நூற்றாண்டு நினைவாக சென்னையில் பிரமாண்ட நூலகத்தை அமைத்து, தன்னுடைய தலைவரின் கனவை நிறைவேற்றினார்.
'தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு- என்ற திருக்குறளுக்கு, 'தோண்டத் தோண்ட ஊற்றுநீர் கிடைப்பதுபோல, தொடர்ந்து படிக்கப் படிக்க அறிவு பெருகிக் கொண்டே இருக்கும்- என உரை எழுதியவர் மு. கருணாநிதி.
புத்தகப் பிரியரான அவரது பிறந்த நூற்றாண்டில், சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்த மதுரை மாநகரில், உலகத் தரத்திலான வசதிகளுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை அமைத்து, தன் தலைவரின், தந்தையின் கனவை நனவாக்கியுள்ளார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
திருக்குறள் பொறிக்கப்பட்ட பீடத்தின் மீது அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டு, வருவோரை இன்முகத்துடன் வரவேற்கும் கருணாநிதியின் உருவச் சிலையை முகப்பாகக் கொண்டு, மதுரையில் பிரமாண்டமாக அமைந்திருக்கிறது கலைஞர் நூற்றாண்டு நூலகம். இந்தியாவில் இந்த நூற்றாண்டில் அமையப் பெற்ற உலகத் தரத்திலான நூலகங்களில் ஒன்று.
2,13,338 சதுர அடி பரப்பில், தரைத்தளம் உள்பட 7 தளங்களையும், ஏறத்தாழ 3.5 லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்களையும், வளர்ந்த நாடுகளின் நூலகங்களில் உள்ள நவீன தொழில்நுட்ப வசதிகளுக்கு இணையான அல்லது அதனை விஞ்சும் வகையிலான கட்டமைப்புகளுடன் அமைந்துள்ளது.
அரை வட்ட வடிவத்தில் அழகுற அமைந்துள்ளது நூலகத்தின் முகப்புத் தோற்றம். பெங்களூரிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சிவப்பு நிற செங்கல், கேரளத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஓடுகள் போன்றவற்றுடன், ஜெர்மன் கண்ணாடி சுவர் பூச்சு என ஒவ்வொரு பகுதியும் கலைநயத்துடன் அமைக்கப்பட்டுள்ளன.
நூலகத்தின் தரைத்தளத்தில் 700 பேர் அமரும் வசதிகள் கொண்ட பிரமாண்ட அளவிலான மாநாட்டு அரங்கம், மாற்றுத் திறனாளிகள் பிரிவு, கலைக்கூடம் ஆகியன அமைந்துள்ளன. மதுரையின் பழங்காலப் புகைப்படங்கள், வைகை ஆற்று நாகரிகத்தின் தொன்மையை உலகுக்குப் பறைசாற்றிய கீழடி அகழாய்வில் கிடைக்கப் பெற்ற தொல்லியல் சான்றுகளின் படங்கள், தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலைகளை விளக்கும் படங்கள், தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு சிற்பம், மதுரையின் பன்முகங்களை வெளிப்படுத்தும் படங்கள் இந்தக் கலைக் கூடத்துக்குக் கூடுதல் அழகு சேர்க்கின்றன.
மாற்றுத் திறனாளிகள் பிரிவில், கண் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்காக பல வகைப்பட்ட ப்ரெய்லி புத்தகங்கள் உள்ளன. 1- ஆம் வகுப்பு முதல் 12- ஆம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்கள், அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகள், ஆசிரியர் பயிற்சி தேர்வு, வங்கிப் பணியாளர் தேர்வு உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள், பொது அறிவு புத்தகங்கள், திருக்குறள், பகவத் கீதை, திருக்குரான், நாவல்கள், சிறுகதைகள் என பல்வேறு வகையான புத்தகங்கள், ப்ரெய்லி புத்தகங்களாக இங்கு உள்ளன.
பார்வையற்ற, மூளை வளர்ச்சிக் குன்றிய குழந்தைகள் தொடு உணர்ச்சி மூலம் பொருள்களைக் கண்டறியும் வகையில், பல்வேறு மாதிரிப் பொருள்கள் இங்குக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாற்றுத் திறனாளிகளுக்குத் தேவையான வினா, விடைகள் சுமார் 2 டி.பி (டெர்ரா பைட்) அளவில் இங்கு உள்ளன. தேவைப்படுவோருக்கு அந்தத் தரவுகள் இலவசமாக பதிவேற்றம் செய்து தரப்படுகின்றன.
முதல் தளத்தில், மு. கருணாநிதியின் படைப்புகள், அவர் குறித்து பிற அறிஞர்கள் எழுதிய நூல்கள் உள்ளன. இவைத் தவிர, குழந்தைகளுக்கான அரங்கம், அறிவியல் உபகரணங்கள், செய்தித் தாள்கள், மாத, வார இதழ்களும் இத்தளத்தில் உள்ளன. கருணாநிதியின் படைப்புகள் அடங்கிய பிரிவில், குறிப்பிட்ட ஒரு இருக்கையில் அமரும் பார்வையாளர்கள் அவருக்கு எதிரே அமர்ந்து அவருடன் பேசுவதைப் போன்ற தோற்றம் திரையில் காட்சியாகிறது. இந்தத் தொழில்நுட்பம் காண்போரின் கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது.
குழந்தைகளுக்கான அறிவியல் அரங்கத்தில், ஒவ்வொரு கோள்களிலும் ஏற்படும் எடை மாறுபாட்டை அறியும் கருவி, ஆற்றல் பாதுகாப்பை உணர்த்தும் சாதனங்கள், மனித உடற்கூறியல் மேசை, கிரக இயக்கம், கோண உந்து கூண்டு, விமான மாதிரி பயிற்சிக் கருவி போன்ற உபகரணங்கள் சிறார்களுக்கு அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிப்பதாக உள்ளன.
சிறார் நூல்கள் பிரிவில், அறிவியல் செய்திகள், பொன்மொழிகள், வரலாற்றுக் கதைகள், தன்னம்பிக்கை நூல்கள் என பல வகையான நூல்கள் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் ஏராளமாக உள்ளன. மேலும், செய்முறைக் கல்வி உபகரணங்களும் உள்ளன. இங்குள்ள, தமிழ், ஆங்கில எழுத்துகள் வடிவிலான இருக்கைகள் குழந்தைகளின் கவனத்தை ஈர்ப்பதாக உள்ளன.
இரண்டாவது தளம் தமிழ் இலக்கிய நூல்களின் மொத்தத் தொகுப்பாக உள்ளது. நவீன இலக்கியங்கள், சங்க இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், மொழியியல் இலக்கணங்கள், பக்தி இலக்கியங்கள், கவிதைத் தொகுப்புகள், நாடக நூல்கள், அயல்நாட்டு அறிஞர்களின் நூல்கள், தமிறிஞர்களின் படைப்புகள், தேசிய இயக்கத் தலைவர்களின் சிந்தனைகள் என எண்ணற்ற நூல்கள் இங்கு உள்ளன.
மூன்றாவது தளம் முழுவதிலும் ஆங்கில நூல்கள் உள்ளன. இந்தியா, மேலைநாட்டு இலக்கியங்கள், ஆய்வுக் கட்டுரைகள், மேல்நாட்டு அறிஞர்களின் கட்டுரைகள், பொன்மொழிகள், அறிவியல் கண்டுபிடிப்புகள் குறித்த கட்டுரைகள், தலைசிறந்த தமிழ் நூல்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் என பலதரப்பட்ட ஆங்கில நூல்கள் இங்கு உள்ளன.
4- ஆவது தளமோ போட்டித் தேர்வர்களின் பொக்கிஷமாக உள்ளது. மத்தியப் பணியாளர் தேர்வாணையத் தேர்வு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வு, வங்கிப் பணியாளர் தேர்வு, ஆசிரியர் பயிற்சித் தேர்வு, வனக்காவலர் தேர்வு, பன்முக அலுவலர் தேர்வு, இசை சிறப்பாசிரியர் தேர்வு, உதவி சிறைச் சாலை அலுவலர் தேர்வு உள்பட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்களின் தொகுப்பாக உள்ளது. மேலும், சட்ட புத்தகங்கள், பொது அறிவு புத்தகங்களும் இங்கு ஏராளமாக உள்ளன.
5-ஆவது தளமோ எண்ம நூலகமாக உள்ளது. வாசகர்கள் தாங்கள் விரும்பும் புத்தகங்களை நொடிப் பொழுதில் கண்டறிந்து, படிக்க இங்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 6- ஆவது தளத்தில் நிர்வாக அலுவலகம் அமைந்துள்ளது.
நூலகம் முழுவதும் குளிர்சாதன வசதி, 6 மின்தூக்கிகள் (லிப்ட்), 4 தானியங்கு படிகள் (எஸ்க்லேட்டர்), தொடுதிரை மூலம் நூல்களைக் கண்டறியும் வசதி என ஏராளமான சிறப்பு அம்சங்களைக் கொண்டதாக, குறையில்லை என்ற குறையைத் தவிர வேறு எந்தக் குறையும் காண இயலாததாக உள்ளது கலைஞர் நூற்றாண்டு நூலகம்.
இந்த நூலகம் குறித்து பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா கூறியதாவது: ''படித்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் கொண்ட, பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கும், இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி உள்ளிட்ட குடிமைப் பணிகளை அடைய வேண்டும், அரசுப் பணி வாய்ப்புகளைப் பெற வேண்டும் என்ற வேட்கைகளைக் கொண்ட தென் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு இந்த நூலகம் ஒரு கலங்கரைவிளக்கமாக இருக்கும்.
குழந்தைகள் விரும்பும் புத்தகங்களை வாங்கித் தர முடியாத பொருளாதார சூழல் கொண்ட பெற்றோரின் இயலாமையையும், குழந்தைகளின் ஏக்கத்தையும் போக்கும் வகையில் அமைந்துள்ள இந்த நூலகம். ஏழைகளின் இடம்.
மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள், சிறார்கள், பழமையான ஆராய்ச்சி நூல்களை படிக்க விரும்புவோர் என அனைத்துத் தரப்பினருக்குமான தேவையைப் பூர்த்தி செய்வதாக உள்ளது இந்த நூலகம். இது, முதியவர்களுக்கு மிகப் பெரிய ஆற்றுப்படுத்தல் மையமாகவும் இருக்கும்.
தெரு விளக்கின் வெளிச்சத்திலும், நகரப் பூங்காக்களிலும், கோயில் வளாகங்களிலும் பல்வேறு இடையூறுகளுக்கு இடையே அமர்ந்து போட்டித் தேர்வுக்குப் படிக்கும் இளைஞர்களுக்கு, குளிர்சாதன வசதியுடன், சிறந்த இருக்கைகளில் அமர்ந்து தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ள வாய்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த நூலகம் என்றார்.
படங்கள் : வே. பேச்சிக்குமார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.