முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

நீச்சல் பயிற்சி அளிக்கும் மூதாட்டி

சாதிக்க வயது தடையில்லை என்பதற்கு  நாகையைச் சேர்ந்த எழுபத்து ஏழு வயதான மூதாட்டி  ராமாமிர்தம் ஓர்  உதாரணம்.

Updated On : 11 ஜூன், 2023 at 12:00 AM
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2024 at 6:30 PM

சாதிக்க வயது தடையில்லை என்பதற்கு நாகையைச் சேர்ந்த எழுபத்து ஏழு வயதான மூதாட்டி ராமாமிர்தம் ஓர் உதாரணம். வீட்டில் முடங்கிக் கிடக்காமல் பலவகையான நீச்சல் அடிப்பதுடன் பலருக்கும் பயிற்சியை அளித்துவருகிறார். தனது வயதைப் பொருட்டாகப் பார்ககாமல், "மன உறுதியும், விடாமுயற்சி இருந்தால் எந்த வயதிலும் சாதிக்க முடியும்' என்பதை அவர் நிருபித்துள்ளார்.

நாகை முத்துமாரியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த மறைந்த மாணிக்கம் மாரியம்மாள் தம்பதியரின் மகள் ராமாமிர்தம். ஆழ்குழாய் கிணறு அமைக்கும் தொழில் செய்து வந்த பக்கிரிசாமியை திருமணம் செய்து கொண்ட அவருக்கு, 5 மகள்கள் உள்ளனர்.

ராமாமிர்தத்துக்கு நாற்பத்து இரண்டு வயதாகும்போது, பக்கிரிசாமி உயிரிழந்தார். பல்வேறு இன்னல்களைக் கடந்து, மகள்களை ஆளாக்கி வளர்த்து, பேரன், பேத்திகளுடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்து வருகிறார் ராமாமிர்தம். நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள நீச்சல் குளம், தனியார் விடுதிகளில் உள்ள நீச்சல் குளங்களில் பயிற்சி தரும் மூதாட்டி ராமாமிர்தத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். இதையறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங் வியப்படைந்து, ராமாமிர்த்தத்தின் வீட்டுக்கு நேரில் சென்று பரிசு வழங்கி பாராட்டினார்.

Advertisement

"தனது மகிழ்ச்சிக்கு முக்கிய காரணம், நீச்சலும் ஒன்று' என்கிறார் இந்த மூதாட்டி. அவரிடம் பேசியபோது:

"எனது பத்து வயதில் தந்தை மாணிக்கத்துடன் கிணற்றுக்குச் செல்லும்பொழுது, நீச்சல் கற்றேன். நீச்சல் மீது ஏற்பட்ட அதீத ஆர்வத்தால், உள்நீச்சல், வண்ணத்துப்பூச்சி உள்ளிட்ட பலவகையான நீச்சலை கற்றேன். திருமணத்துக்குப் பிறருக்கு பயிற்சி அளிக்க முடியவில்லை. இருந்தாலும் அவ்வப்போது, குளங்களில் நீச்சலடிப்பேன். மகள்கள், பேரக் குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக் கொடுத்தேன் நான் குளத்தில் நீச்சலடிப்பதைப் பார்க்கும் பலர், தங்களது பிள்ளைகளுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கும்படி கேட்கின்றனர். இதனால், பலருக்கும் நீச்சல் பயிற்சியை அளித்து வருகிறேன். நீச்சல் பயிற்சி உடலை ஆரோக்கியமாக வைக்கிறது. பல்வேறு நோய்கள் வராமலும் தடுக்கிறது. ஆபத்துக் காலங்களில் நீச்சல் பயிற்சி கட்டாயம் உதவும்'' என்றார்.

பேத்தி திவ்யா கூறியதாவது:

"10 ஆண்டுகளாக இதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையை தொடர்ந்து வரும் பாட்டி ராமாமிர்தம், அதை பொருள்படுத்தாமல் நீச்சல் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். ஆர்வத்துடன் நீச்சல் பயிற்சியை மேற்கொள்ளும் பாட்டியை ஊக்குவிக்கும் வகையில் அவருக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து வருகிறோம்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.