முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

கலக்கும் நகைச்சுவை மன்றங்கள்..!

மதுரை தியாகராஜர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் கு. ஞானசம்பந்தன். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:08 PM
பகிர்:

மதுரை தியாகராஜர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் கு. ஞானசம்பந்தன். நகைச்சுவை பேச்சாளர், பட்டிமன்ற நடுவர், எழுத்தாளர், நடிகர், யூடியூபர்.. என்று பல்வேறு துறைகளிலும் புகழ் பெற்றவர். இவரது வழிகாட்டுதலில் சுமார் 50 பேர் ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளனர்.

"வாங்க சிரிக்கலாம்', "வாழ்வியல் நகைச்சுவை',
"கல்லூரி அதிசயங்கள்', "இலக்கியச் சாரல்',
"சிரித்துக் கொண்டேஜெயிப்போம்' உள்ளிட்ட பல நூல் களை எழுதியவர்.

25 ஆண்டுகளாக மதுரை நகைச்சுவை மன்றத் தலைவராக இருந்துவரும் கு. ஞானசம்பந்தன் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மட்டுமின்றி, அமெரிக்காவின் டெல்லாஸ் வரை 20 நகைச்சுவை மன்றங்களைத் தொடங்கி, வழிநடத்திவருகிறார்.

அவருடன் ஓர் பேட்டி:

பட்டிமன்றப் பேச்சாளரான நீங்கள் நகைச்சுவையை உங்கள் பாணியாகக் கைக்கொண்டது எப்படி?

1982ஆம் ஆண்டு முதல் நான் பட்டிமன்றங்களில் பங்கேற்கத் தொடங்கினேன். குன்றக்குடி அடிகளார் தொடங்கி நமச்சிவாயம், காரைக்கால் சாரங்கபாணி, சாலமன் பாப்பையா, இளம்பிறை மணிமாறன், சொல்விளங்கும் பெருமாள், சத்தியசீலன், அறிவொளி உள்பட பலர் நடுவர்களாக இருந்து நடத்திய பட்டிமன்றங்களில் பேசி இருக்கிறேன்.

அடிகளாரது பேச்சில் பக்தியும், இலக்கியமும் இருக்கும். சாலமன் பாப்பையா குடும்பப் பாங்காகப் பேசுவார். காரைக்கால் சாரங்கபாணி பாடலும் இலக்கியமும் கலந்து நன்றாகப் பாடுவார். சத்திய சீலன், அறிவொளி போன்றவர்கள் பேசினால் இலக்கிய மணம் கமழும். இவர்கள் மத்தியில் ஒரு பேச்சாளராக முத்திரை பதிக்க வேண்டும் என்று கருதி, நான் தேர்ந்தெடுத்ததுதான் நகைச்சுவை.

என்னுடன் பணிபுரிந்த பேராசிரியர் தொ. பரமசிவனும், " நீ பட்டிமன்றங்களில் நகைச்சுவையாகப் பேசுகிறாய்! உனது தனிச் சொற்பொழிவுகள் சீரியஸாக இருக்கின்றன. அவற்றிலும் நீ நகைச்சுவையைக் கையாண்டால், தனித்துவம் மிக்க பேச்சாளராகப் பிரகாசிக்க முடியும்' என்றார்.

உங்கள் நகைச்சுவைகளில் தனித்துவம் என்ன?

சிறுவயதில் நான் எனது சொந்த ஊரான சோழவந்தானில் இருந்து மதுரைக்கு பயணிப்பேன். வழிநெடுக மக்களை கூர்ந்து கவனிப்பேன். பட்டிமன்றம்.

சொற்பொழிவுகளுக்காக செல்லும்போது பேருந்து, ரயில் பயணங்கள் எனக்கு ஏராளமான அனுபவங்களைக் கொடுத்தன. எல்லாவற்றையும் நான் நகைச்சுவை என்ற கோணத்திலேயே பார்த்து, ரசிக்கத் தொடங்கினேன். அதுவே நான் புகழ் பெற வழிவகுத்தது.

மதுரையில் நவீன ஒலிப்பதிவுக் கூட வசதி இல்லாதபோது, ஒரு சாதாரண ஒலிப்பதிவு அரங்கில் சிலரை ஆடியன்ஸாக வைத்து ஒலிப்பதிவு செய்தேன். "வாங்க சிரிக்கலாம்' என்று நான் வெளியிட்ட ஒலிப்பேழைக்கு நல்ல வரவேற்பு.

நகைச்சுவை மன்றம் உருவானது எப்படி?

1991இல் மதுரையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்கு, "மீனாட்சி மிஷன்' மருத்துவர் சேதுராமன் வந்திருந்தார். நான் பேசத் தொடங்குவதற்கு முன்னர் என்னிடம், "தவறா நினைச்சுக்காதீங்க! முக்கியமான வேலை ஒண்ணுஇருக்கு. பத்து நிமிஷம் உட்கார்ந்து உங்கப் பேச்சைக் கேட்டுட்டு, நான் புறப்படறேன்!' என்றார்.

ஆனால், மூன்றரை மணி நேரம் இருந்து நிகழ்ச்சியை முழுமையாகக் கேட்டு ரசித்தார். புறப்படும்போது, "ஒரு முக்கியமான விஷயம் பேசணும்! நாளைக்கு என்னை வந்து பாருங்க!' என்று சொல்லிவிட்டு விடைபெற்றார்.

மறுநாள் சென்றபோது, "மதுரையில் ஓர் நகைச்சுவை மன்றம்ஆரம்பிக்கலாம்! இடமும், செலவுகளையும் நான் கவனித்துகொள்கிறேன்' என்றார். இப்படித்தான் மதுரை நகைச்சுவை மன்றம் பிறந்தது. தற்போது ஆண்டிப்பட்டி, சென்னை, திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை உள்பட பல்வேறு ஊர்களிலும் நகைச்சுவை மன்றங்களைத் துவக்கிவைத்து, இரண்டு மாதங்கள் வழிகாட்டிவிட்டு, பின்னர் அவர்கள் பொறுப்பிலேயே விட்டுவிடுகிறேன். அவ்வப்போது ஆலோசனைகள் சொல்வதுண்டு. எல்லா மன்றங்களும் சிறப்பாக, கலகலப்பாக நடைபெற்றுவருகின்றன.

நகைச்சுவை மன்ற நிகழ்ச்சிகளைப் பற்றி... ?

மன்ற நிகழ்ச்சிகளில் எல்லோரும் நகைச்சுவை சொல்ல அனுமதி உண்டு. ஆபாசமாகவோ, அமங்கலமாகவோ, பிறர் மனதைப் புண்படுத்தும் வகையிலோ இருக்கக் கூடாது. "சிரிப்பு' என்ற இதழை நடத்தியபோது, அதில் இடம்பெற்ற நகைச்சுவைகளை பிரபல இதழ்களும் வெளியிட்டு, பாராட்டின.

ஆண்டு விழாக்களில், நகைச்சுவை நடிகர்கள், நடிகைகளை அழைத்து, பாராட்டி, கெளரவிக்கிறோம். வசதி இல்லாத முதிய நாடகக் கலைஞர்களுக்கு நிதி, மருத்துவ உதவிகளைச் செய்கிறோம்.

மறக்க முடியாத அனுபவம்?

எங்கள்ஆண்டு விழாவுக்கு வந்த ஆச்சி மனோரமா சிறிது நேரம் பேசிவிட்டு, தொடர்ந்து பேசத் தயங்கினார். நான் அவரை உட்காரச் சொல்லிவிட்டு, கூடவே அமர்ந்துகொண்டு அவரிடம் கேள்விகளைக் கேட்கத்துவங்கினேன்.

"கொஞ்சும் சலங்கை' எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமான உங்களை "மாலையிட்டமங்கை' எனும் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகையாக கவியரசர் கண்ணதாசன் நடிக்கச் சொன்னபோது வருத்தமாகஇருந்ததா? என்று முதல் கேள்வியைக் கேட்டேன்.

"கதாநாயகிகளுக்கு நடிப்புக்கான ஆயுள்காலம் அதிகபட்சம் 10 ஆண்டுகள்தான். நகைச்சுவையில் பல ஆண்டு காலம் சாதிக்கலாம்' என்று கவியரசர் கண்ணதாசன் சொல்லித்தான் நடிக்க வைத்தார், அவர் வாக்கு பலித்ததில் எனக்குப் பெருமைதான்! அடுத்தடுத்து தொடர் கேள்விகளால், மூன்று மணி நேரத்துக்கு நிகழ்ச்சி நடைபெற்றது.

நகைச்சுவையில் கலக்கிக் கொண்டிருக்கும் ஈரோடு மகேஷ், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலரும் எங்களது மன்றங்களால் உருவாக்கப்பட்டவர்கள்தான்.

20 ஆண்டுகளில் நகைச்சுவையில் நீங்கள் காணும் மாற்றம் என்ன?

முன்பெல்லாம் சிறுவர்களுக்குக்கூட நிறைய ஆற்றல் இருந்ததால், சுயமாகச் சிந்தித்து சிரிக்க வைக்கும் நிறைய சிரிப்புகளைச் சொந்தமாகச் சொல்லுவார்கள். இன்று சமூக ஊடகங்களில் பகிரப்படும் நகைச்சுவைகளைத்தான் சொல்கிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →