சாமானியர்களின் சந்தோஷம், அன்பு, கோபம், வாழ்க்கை இதுதான் நம்ம "அழகிய கண்ணே' படம். கதையின் உள்ளடக்கமும் ஒன் லைனும் இதுதான்...'' இரண்டே வார்த்தைகலில் திரைக்கதை வடிவம் பேசுகிறார் இயக்குநர் ஆர். விஜயகுமார். சீனுராமசாமியின் முதன்மை சீடர்.
""எந்த ஒரு கதைக்கும் மனித வாழ்க்கையும், அதனுள் புதைந்து கிடக்கும் அன்புதான் அடிப்படை. இதில் நான் சொல்ல வருவதும் அதுதான். இலக்குகள், லட்சியவாதங்கள், அரசியல், பண வேட்கை என எதுவும் இல்லாத எளியவர்களின் வாழ்க்கை எவ்வளவு நிம்மதியானது. வாழ்க்கையை அதன் உண்மையோடும், அன்போடும் கொண்டாடுபவர்கள்தான் கொடுத்து வைத்தவர்கள். அவர்களின் வாழ்க்கை எவ்வளவு அழகானது. மதுரையில் மண் சாலை தொடங்கி சென்னை பெரு நகரத்தின் தார் சாலைகள் வரை நான் பயணித்த ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அனுபவம். அப்போது நான் பார்த்த, ரசித்த, வியந்த, தரித்த உலகங்களின் ஒரு சில காட்சிகள்தான் இந்தப் படம். எல்லாமே எங்கோ நடந்த சம்பவம், யாரோ பேசின வார்த்தைகள், தோள் சாய்ந்து அழுத தோழியின் கண்ணீர்...''
"அழகிய கண்ணே'.... அவ்வளவு அழகான டைட்டில்....
ஒரு காதல் வாழ்க்கைக்கு இதை விட பொருத்தமான தலைப்பு இல்லை. இங்கேயும் ஒரு அழகான காதல்தான். பெண்தான் ஆணுக்கு பெருங்கொடை.
பெண்ணின் ஒரு ஸ்பரிஸம் நமது நாளையே மலர்த்தி விடுகிறது. ஒரு வார்த்தை, உரையாடல் எவ்வளவு நம்பிக்கைகளை அளித்து விடுகின்றன. நட்பும், ப்ரியமும் அது நிகழ்த்தப்படும் கணங்களின் மேல் மகத்தான உண்மையோடு இருக்கின்றன. அந்த உண்மைகளிலேயே வாழும் ஒருவனின் வாழ்க்கைதான் இந்தப் படம். இந்த வரியை இப்போ வாசிக்கிற உங்களை விட, என்னைவிட, நம் எல்லோருக்கும் இப்படி ஒரு தருணம் உண்டு. அப்படி முழுக்க முழுக்க அன்பு, நேசம், பாசம் கொண்டு கட்டப்பட்ட வாழ்க்கையை அவ்வளவு அழகாக, அற்புதமாக வாழ முடியாத நிலை வருகிற போது, சாமானியனாக ஒருவன் எடுக்கும் முடிவுதான் கதை. உறவையும், பிரிவையும் காலம்தான் தீர்மானிக்கிறது. அது செய்யும் மாயங்ள் எதையும் கலைத்து போட்டு விடும். ஆனால், இந்த வாழ்க்கைக்கு நடுவே எப்போது அன்பும், பரிவும் நிரந்தரம்.
இந்த பின்னணிதான் முழு கதையும். இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் படம் பார்க்கிற ஒவ்வொருத்தரும் தன் மனசுக்கு நெருக்கமான பெண்களை நினைத்துக் கொள்வார்கள். ஒவ்வொரு மனிதனுக்குமான அன்பும் வன்மமும் மாறி மாறி கண்ணீரிலும் புன்னகையிலும் போய் முடியும். ஒவ்வொரு மனிதனுக்குமான வாழ்வை, அன்பை, கருணையை, காதலை, அவஸ்தையை, பிரிவை, நினைவை முன் வைக்கிற கதை.
கதையின் உள்ளடக்கம் பற்றி விரிவாக பேசலாம்....
இது ஒரு உதவி இயக்குநரின் கதை. ஆயிரம் கனவுகள் சுமந்தோடுகிறபோது, அவனுக்குள் வருகிற காதல் அவனை எங்கே கொண்டு போனது. இதுதான் இந்தப் படம். ஆயிரமாயிரம் வாய்ப்புகளையும், வசதிகளையும் அள்ளி இறைத்தப்படி மின்னிக் கொண்டு இருக்கும் இந்த சென்னையில் பிழைப்பு தேடி வந்தவர்களின் கொண்டாட்டங்கள் எங்கே இருக்கின்றன. எங்கெங்கு இருந்தோ வந்து பிழைப்புக்காக நிற்கிறோம். சினிமாதான் இலக்கு என வைத்து ஓடுகிறவர்கள்.... எல்லோரும் ஜெயித்து விட்டார்களா.... தோற்றவர்களின் கதறல்கள் எங்கே.. ஜெயித்தவர்களின் மாட மாளிகைகள் எங்கே.. நினைத்துப் பார்த்தால் தலைச் சுற்றுகிறது. இருந்தாலும் வாழ்க்கை எப்போதும் அழகு. அந்த அழகின் உற்சாக தருணங்கள்தான் கதை. இங்கே வருகிற ஒவ்வொரு இளைஞனிடமும் ஒரு வித்தை இருக்கும். பாடல், ஆடல் என தனித்துவம் இருக்கும். அப்படியான ஆள்தான் நம் ஹீரோ லியோ சிவகுமார். திண்டுக்கல் லியோனியின் மகன். ஹீரோயின் சஞ்சிதா ஷெட்டி. இந்த இருவரும்தான் அந்த காதலர்கள்.
இந்த பாணி கதைகள் ரசிகர்களுக்கு ஏற்கெனவே பரிச்சயமானவை....
உலகம் எங்கும் நிறைந்து கிடப்பதும், உலகமே தேடிக் கொண்டிருப்பதும் அன்புதானே. பொருளையும், பணத்தையும் முதன்மைப்படுத்தாமல் வாழ்க்கைக்கு அன்புதான் முக்கியம் என்பதை அடுத்த தலைமுறைக்கு சொல்லிக் கொடுத்தாலே போதும், ஆரோக்கியமான தலைமுறை உருவாகி விடும். இதற்கு தேவையில்லாத தியாகங்கள் அவசியமில்லை. இந்தக் கதையின் அடிநாதமாக அதன் கதாபாத்திரங்களுக்கு மன மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கும். மனதில், புத்தியில் ஏற்படுகிற அதிர்வின் காரணமாக மனமாற்றம் நிகழ்ந்து ஒரு புது வாழ்வு பரிசாகக் கிடைத்து விடும். இலக்குகள், லட்சியவாதங்கள், அரசியல் எதுவும் இல்லாத எளியவர்களின் வாழ்க்கை எவ்வளவு நிம்மதியானது. வாழ்க்கையை அதன் உண்மையோடும், அன்போடும் கொண்டாடுபவர்கள்தான் கொடுத்து வைத்தவர்கள். அந்த போன்ற நம்பிக்கைகள்தான் இந்தப் படம். வாழ்க்கை என்பது இங்கே மிகவும் எளிமையானது. ஆனால், பயங்கரமானது. இதுதான் இந்தப் படம்.
பிரபுசாலமன், விஜய்சேதுபதி என்ன விசேஷம்...
பிரபுசாலமன் இயக்குநராகவே வருகிறார். விஜய்சேதுபதியும் நடிகராகவே வருகிறார். சினிமா பின்னணி கதை என்பதால், அதன் உயிரோட்டத்தை ரசிகர்களுக்கு கடத்தவே இந்த சிறப்பு பங்களிப்பு செய்திருக்கிறார்கள் இருவரும். இதுதான் விஜய்சேதுபதி என எந்த லேபிளையும் அவர் மீது ஒட்டி விட முடியாது. ஏராளமான பாகுபாடுகள் இருந்தாலும், ஒரு கலைஞனாக அவர் அதை கையாளுகிற விதம் புத்தம் புதிது. மனசுக்கு பிடிக்காத எந்த காரியத்தையும் அவர் கடுமையாக எதிர்க்கிறார். அது ஒரு கலைஞனுக்கு முக்கியமான ஒன்று. அதே வேளையில் உதவி என்று வந்தால், அவரால் முடிந்தால் செய்து விட்டுத்தான் மறு வேலைக்கு போகிறார். அப்படி அவர் செய்த உதவிதான் இது. எல்லோருக்கும் நன்றி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.