ஜி 20 மாநாட்டில் பங்கேற்ற பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது 'பாரத் - ஜனநாயகத்தின் தாய்' என்ற கண்காட்சி.
இந்தியாவில் ஜனநாயகம் என்பது நல்லிணக்கம், தேர்வு செய்யும் சுதந்திரம், ஏற்கும் தன்மை, சமத்துவம், மக்கள் நலனுக்கான நிர்வாகம் உள்ளிட்ட பல மதிப்புகளை உள்ளடக்கியது. இவை அனைத்துமே நாட்டு குடிமக்களின் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்கிறது என்று கூறும் கண்காட்சியில் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து - சரஸ்வதி நாகரிகத்தில் வெண்கலத்தால் செய்யப்பட்ட ஒரு பெண்ணின் சிலை, ஆபரணங்கள் அணிந்தவாறு தன்னம்பிக்கையுடன் அவள் உலகைப் பார்ப்பதைக் காட்டுகிறது.
ராமாயணம்: ராமாயணத்தில், அரசர் தசரதன் தனக்கு பின்னர் அயோத்தி ராஜ்ஜியத்துக்கு புதிய அரசரை நியமிக்க, தனது அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகளின் சபையை நாடினார். சமூகத்தின் அனைத்துப் பிரிவினருடனும் விரிவான ஆலோசனைக்குப் பிறகு ராமர்தான் மக்களின் தேர்வாக இருப்பதை ஒருமனதாக உறுதி செய்தனர்.
கி.மு. 7, 8-ஆகிய நூற்றாண்டுகளில் நிர்வாகத்திலும், முடிவெடுப்பதிலும் மக்களைத் தொடர்ந்து ஈடுபடுத்தியது இந்திய ஆட்சிமுறையின் தனிச் சிறப்பாகும்.
இந்தியாவில் கி.மு. 650-இல் உருவாகிய சமணம் உலகின் பழைமையான மத நம்பிக்கை அமைப்புகளில் ஒன்றாகும். இது பன்மைத்துவம், சகிப்புத்தன்மை, சக வாழ்வைப் போதிக்கும் ஜனநாயகத்தின் பண்புகளைக் கொண்டுள்ளது. இன்றளவும் இந்த வாழ்க்கை முறை நடைமுறையில் இருக்கிறது. அதேபோல் இரக்கம், சமத்துவத்தைப் போதிக்கும் பெளத்தம் கி.மு. 5-ஆம் நூற்றாண்டில் புத்தரால் நிறுவப்பட்டது.
பௌத்த ஜனநாயகம்: பெளத்தக் கோட்பாடுகள் ஜனநாயக மரபுகளின் பாதுகாவலராக இருந்து வருகிறது. பெளத்த துறவிகள் தங்கள் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கவும், சட்டங்களை உருவாக்கவும் தேர்தல்களை நடத்தினர். இதுவே ஜனநாயக நடைமுறைகளுக்கு முந்தைய உதாரணம்.
மெளரியப் பேரரசு: மெளரியப் பேரரசர் அசோகர் தனது மக்கள் சார்ந்த ஆட்சியை வெற்றிகரமாக நிறுவிய அரசுகள். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை முறையாக அமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதன் மூலம் இது தொடங்கியது. அசோகரின் அமைதி, நலன், உலகளாவிய சகோதரத்துவம் பற்றிய சித்தாந்தங்கள் இன்றும் பாதுகாக்கப்படுகின்றன. இந்த ஜனநாயகத்தை நினைவூட்டவே தேசியக் கொடியிலும் அவரது சின்னம் இடம் பெற்றுள்ளது. நகரங்களை நிர்வகிக்கும் முறை பல அடுக்கு அமைப்புகளாக வெளிப்படுகிறது. இன்றைய குவாலியரில் உள்ள வைல்லபத்த சுவாமின் கோயில் கல்வெட்டு இம்முறையை விவரிக்கிறது.
சோழர் கால ஆட்சி: தமிழ்நாட்டின் உத்திரமேரூர் என்ற சிறிய நகரத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழர்கால ஆட்சியில் கட்டப்பட்ட கோயிலில் உள்ள கல்வெட்டுகள், கிராம நிர்வாக வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தகுதியை விவரிக்கின்றன. துணியால் வாய் கட்டப்பட்ட மண்பானையில், பனையோலையால் வேட்பாளர் பெயரை எழுதுவது உள்ளிட்ட சான்றுகளை எடுத்துக் கூறுகிறது. கி.பி. 11-ஆம் நூற்றாண்டு ஜனநாயகம், ஆன்மிக, சமூக நெறிமுறைகளையும் உள்ளடக்கியுள்ளது.
'கடவுளின் பார்வையில் அனைவரும் சமம்' என்று சுவாமி ராமானுஜாச்சாரியாரும், 'அகத் தூய்மையையும் புறத் தூய்மையையும் அடைய அனைவரையும் சமமாகக் கருதுங்கள்' என்று புனிதர் பசவண்ணாவும், 'நீரும் அலையும் போல எனக்கும் உங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை' என புனிதர் ரவிதாஸூம், 'பக்தி என்பது ஜாதி, மதம், வேத அறிவுக்கு மேலானது' என்று ஸ்ரீமந்தா சங்கர்தேவும் கூறியுள்ளனர்.
விஜய நகரப் பேரரசு: கி.பி. 14-ஆம் நூற்றாண்டு முதல் 16ஆம் நூற்றாண்டு வரையில் தென்னிந்தியாவின் விஜயநகரப் பேரரசின் ஜனநாயக நெறிமுறைகள் உலகில் உள்ள வர்த்தகத் தொடர்புகளுக்கு சிறந்த உதாரணமாகும்.
மராட்டியப் பேரரசு: ஒரு ஜனநாயகத்தில், பிரதிநிதிகள் தங்கள் கடமைகளை அறியவும், மக்கள் சம உரிமைகளை அனுபவிக்கும் ஆட்சிமுறையை மராட்டியப் பேரரசின் நிறுவனர் சத்திரபதி சிவாஜி ஆதரித்தார். மக்கள் பங்கேற்பு என்பது ஜனநாயகத்தின் அடிப்படை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவில் செழித்தோங்கி வரும் உள்ளூர் சுயராஜ்ஜிய அமைப்புகளைவிட வேறு எதுவும் இதற்கு முன்மாதிரியாக இல்லை. இத்தகைய அமைப்புகள் 19 -ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களால் கவனிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டன.
சுயராஜ்ஜிய பாரம்பரியம்: வடகிழக்கு மாநிலங்களில் பல சமூகங்கள், குழுக்கள் தங்கள் சுயராஜ்ஜிய பாரம்பரியத்தை இன்று வரை பாதுகாத்து வருகின்றன.
செல்வம், கல்வி, பாலினம், மதம் ஆகியவற்றைப் பொருள்படுத்தாமல் அனைவரையும் உள்ளடக்கிய ஜனநாயகம்- அதன் நடைமுறைகள் குறித்து இந்தியாவுக்கு ஒருபோதும் சந்தேகம் இருந்ததில்லை. சுதந்திரத்துக்குப் பிறகு, 17 மக்களவைத் தேர்தல்கள், 400-க்கும் மேற்பட்ட சட்டப் பேரவைத் தேர்தல்கள் மூலம் அமைதியான அதிகார மாற்றங்களைக் கண்டுள்ளது. உள்ளூர் சுயாட்சிகளுக்கு 10 லட்சத்துக்கும் அதிகமான தேர்தல்கள் நடந்துள்ளன. கிராமம் முதல் நாடாளுமன்றம் வரை ஜனநாயகம் செழித்து வளர்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.