பிரேம்சந்த் 
ஞாயிறு கொண்டாட்டம்

இலக்கிய வானில் ஒரு நட்சத்திரம்...

வாரணாசி என்று அழைக்கப்படும் காசி மாநகருக்கு அருகேயுள்ள ஒரு குக்கிராமத்தில் 1880 ஜூலை 31-இல் பிறந்தவர் பிரேம்சந்த்.

டி.எம். இரத்தினவேல்

வாரணாசி என்று அழைக்கப்படும் காசி மாநகருக்கு அருகேயுள்ள ஒரு குக்கிராமத்தில் 1880 ஜூலை 31-இல் பிறந்தவர் பிரேம்சந்த். அந்தக் காலத்தில் பிகார், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் கல்வி என்பது பாரசீகம்- உருது போன்ற மொழிகளைக் கற்கவே இருந்தது.

அதுபோல், பிரேம்சந்தும் ஒரு மௌல்வியிடம் பாடம் கற்றார். பிரேம்சந்துக்கு இளமையில் நவாப் என்றும் தன்பத் என்றும் பெயர். பிரேம் சந்த் என்பது அவர் வைத்துகொண்ட புனைப்பெயர். பின்னர், அதுவே நிலைத்துவிட்டது.

பிரேம்சந்தின் தந்தை தபால் தந்தி அலுவலராகப் பணிபுரிந்ததால், பல நகரங்களுக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனால் தந்தையுடன் கான்பூர், கோரக்பூர், லட்சுமணபுரி, அசம்கார் போன்ற பெரிய நகரங்களை பிரேம்சந்தால் காண முடிந்தது.

பெரும்பாலான நேரங்களில் பிரேம்சந்த் தனிமை வசப்பட்டார். இதனால் முரட்டுத்தனம் குடி கொண்டது. தீய பழக்கங்கள் தொற்றிக் கொண்டன. ஆனால், பெரிய சாதனையாளர்களை இயற்கையானது கைவிடாது அல்லவா? அதுபோல கான்பூரில் இருந்தபோது புதிலார் என்கிற புத்தக வியாபாரியின் நட்பு பிரேம்சந்துக்கு கிடைத்தது. பிரேம்சந்துக்கு ஹிந்தி தெரியாது. உருது மொழி மீது அவருக்கு அளப்பரிய காதல். புதிலாரின் புத்தகக் கடையில் உருது நாவல்களை விரும்பிப் படித்தார் பிரேம்சந்த்.

ரெனால்ட்சின் ஆங்கில நாவல்களை உருது மொழிபெயர்ப்புகளில் படித்தார். அதுமட்டுமல்ல; ஹிந்து புராணங்களை உருது மொழிபெயர்ப்பு மூலம் ஒன்றுவிடாமல் படித்தார்.

'திரிசம்மே ஹோஷ்வோ'' என்ற பெயரில் அந்தக் காலத்தில் பிரசித்தி பெற்ற ஒரு கதைத் தொகுதி வந்தது. இது 17 பாகங்களைக் கொண்டது. பெரிய அளவில் ஒரு பாகம் என்பது இரண்டாயிரம் பக்கங்களைக் கொண்டது. "மௌலானா ஃபைசி' என்பவர் அக்பர் பாதுஷாவுக்குச் சொன்ன கதைகள் என்று இந்த நூலைச் சொல்வார்கள். இவ்வளவு பெரிய கதைப் புத்தகம் உலகில் எந்த மொழியிலும் கிடையாது என்று கூறப்படுவது உண்டு. அந்தக் கதைத் தொகுதிகள் அனைத்தையும் பிரேம்சந்த் படித்தார். இந்தக் காலகட்டம் அவருடைய 13-வது வயதுக்கும் 15-வது வயதுக்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் நடைபெற்றது.

பிரேம்சந்தினுடைய உள்ளத்தில் புதைந்திருந்த கதை சொல்லும் ஆற்றல் வெள்ளம் என வெளிப்பட்டது. தனிமைத் துயர் போய்விட்டது. சாகசம் செய்ய வேண்டும் என்ற ஆவலுக்கு ஒரு வடிகால் கிடைத்தது.

முதன்முதலாக பிரேம்சந்த் ஒரு சிறிய நாடகம் ஒன்றை எழுதினார். கெட்ட பழக்கமுடைய பணக்காரனைப் பழிவாங்குவதுதான் அந்த நாடகத்தின் கருத்து. அவரிடம் பொருள் வசதி இல்லாதததால், அந்த நாடகம் அச்சாகவில்லை.

இந்த நிலையில்தான் 15-ஆம் வயதில் பிரேம்சந்துக்கு, விருப்பமே இல்லாமல் திருமணம் நடைபெற்றது. பிற்காலத்தில் பிரேம்சந்த் பிரிந்தே வாழ்ந்தார். தந்தை மறைந்தார். கைவசம் இருந்த தந்தையின் சிறிய சேமிப்பு, அவருடைய இறுதிச் சடங்குக்கு செலவாகிவிட்டது. மனைவி, சிற்றன்னை, அவருடைய இரு குழந்தைகள் என இத்தனை பேரையும் வைத்துகொண்டு சமாளிப்பது பிரேம்சந்துக்கு கஷ்டமாக இருந்தது. குடும்பச் சுமை அவரை அழுத்தியது. வேலை தேடி அலைந்தார்.

வாரணாசியில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் முதல்வராக இருந்த பேகன் என்ற ஆங்கிலேயரின் உதவியால், பிரேம்சந்துக்கு வேலை கிடைத்தது. அந்த வேலைக்காக அவர் பல இடங்களுக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டதால், அவரது உடலுக்கு கேடு விளைந்தது. ஆனால், பிரேம்சந்த் என்கிற இலக்கியவாதிக்குப் பெரிதும் துணை செய்தது.

பிரேம்சந்த் எழுதிய கதைகள், நவீனங்கள் 1900-இல் அச்சில் வெளிவரத் தொடங்கின. "கோயிலின் மர்மங்கள்' என்ற பெயரில் அவர் எழுதிய தொடர்கதை, காசியில் ஒரு சாதாரண பத்திரிகையில் வெளிவந்தது. அடுத்து அவர் எழுதிய பெரிய நாவல் "பிரேமா' என்ற பெயரில், 1907-இல் ஹிந்தியில் வெளியானது. இந்த நாவல் அந்தக் காலத்தில் இளம் விதவைகளாகிவிடும் பெண்களைப் பற்றியது. அதேபோல், சிவராணிதேவி என்கிற இளம்விதவையை 1906-இல் பிரேம்சந்த் மணந்துகொண்டார். அவருடைய முதல் திருமணம் தோல்வியுற்றதால், இந்த நிலை ஏற்பட்டது.

ஆங்கிலேயர் ஆட்சியில் இந்திய தேசிய காங்கிரஸின் தலைமையை ஏற்றிருந்த பாலகங்காதர திலகர் 1908-இல் கைது செய்யப்பட்டு, பர்மாவில் உள்ள மாண்டலே சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நேரத்தில் தேசப் பக்தர்களைப் பற்றி பிரேம்சந்த் சிறுவெளியீடுகளை எழுதி, வெளியிட்டார். வங்கப் பிரிவினையை எதிர்த்தும் குரல் கொடுத்தார். கரிபால்டி, மாஜினி, விவேகானந்தர் போன்றோர்களின் வரலாற்றை எழுதி, அச்சிட்டு வெளியிட்டார். அவருடைய தேசப் பக்தி சிறுகதைகளின் தொகுப்பு ஒன்று வெளிவந்து பிரபலம் அடைந்தது. ஆங்கிலேய அதிகாரிகள் உடனடியாக பிரேம்சந்தை அழைத்து, எச்சரித்தனர்.

'நவாப் ராய் என்ற பெயரில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக எழுதுவது நீயா?'' என்று ஆங்கிலேய அதிகாரிகள் கேள்வி கேட்டபோது, 'ஆம்'' என்று பதில் சொன்னார் பிரேம்சந்த். அப்போது, பள்ளிகளுக்கான தணிக்கை அலுவலராக இருந்தவர் பிரேம்சந்த். பகலில் அரசுப் பணி. மாலை வந்துவிட்டால் மறுநாள் காலை வரை தேசப் பணி. எழுத்தின் மூலம் வீரம் ஊட்டுகின்ற தொண்டு. நல்ல வருவாய் தரும் வேலையையும் உதறித் தள்ளினார் பிரேம்சந்த்.

குதிராம் போஸ் என்கிற சுதந்திரப் போராட்டத் தியாகியை தூக்கில் போட்டது ஆங்கிலேய அரசு. அந்தத் தியாகியின் படத்தைப் பெரியதாகத் தனது வீட்டில் மாட்டி வைத்ததோடு அவரது தியாகத்தையும் பாராட்டி எழதி அச்சிட்டுப் பரப்பினார். அவருடைய சிறுகதைகள், நாவல்கள் இந்தக் காலகட்டத்தில் ஏராளமாக வெளிவந்தன. பல கட்டுரைகளை எழுதினார். அவற்றில் முழு சுதந்திரம் என்ற லட்சியத்தை வலியுறுத்தினார்.

தேசப் பக்தி மிக்கத் துறவியைக் கதாநாயகனாகக் கொண்ட ஒரு நாவலையும், "விபசாரம்' என்கிற சமூகக் கொடுமையைக் கண்டித்து "பஜாரே ஹூசும்' என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்தது. அந்தப் படத்தில்தான் எம்.எஸ்.சுப்புலட்சுமி நடித்திருந்தார்.

லட்சுமணபுரியில் "மாதுரி' என்ற ஹிந்தி மாத இதழுக்கு ஆசிரியரானார். அந்த வேலையும் சரிபட்டு வராததால், உதறி எறிந்துவிட்டு காசிக்குத் திரும்பினார். அங்கே "அன்னம்' என்ற பெயரில் "விழிப்பு' எனும் பெயரிலும் இரு பத்திரிகைகளைத் தொடங்கினார். கடன் பிரச்னைகளுக்கு மத்தியிலும் ஏராளமாக எழுதிவந்தார். "சபதம்', "நிர்மலா' என்ற இரு சிறு நாவல்கள், "சுருட்டல்' , "ரங்கபூமி', "காயகல்பம்' என்ற பெரும் நாவல்கள், இரு நாடகங்களை எழுதினார்.

1931-32ஆம் ஆண்டுகளில் இருந்த தேசிய இயக்க நிகழ்ச்சிகளை மையமாகக் கொண்டு "கர்ம பூமி' என்ற மகத்தான நாவலையும் எழுதினார். "கர்மபூமி'யை அடுத்த "கோதான்' என்ற நாவலை அவர் எழுதினார். இந்தியக் கிராமங்களில் ஏழை விவசாயிகள் என்ற நாவல் அப்பட்டமாகச் சித்திரித்தது. சுரண்டல் என்கிற மோசமான சமூக முறைக்கு எதிராக, பிரேம்சந்த் தொடுத்த யுத்தம்தான் "கோதான்' (பசுதானம்) என்ற நாவல் பரிணமித்தது. பிற்காலத்தில் யுனெஸ்கோ நிறுவனமும் இந்த நாவலை உலக அளவில் வெளியிட்டது.

அடுத்து உருது, ஹிந்தி மொழிகளை எளிமையாக்கி இணைத்துவிட வேண்டும் என்று பிரேம்சந்த் வலியுறுத்தினார். ஆனால், நாளடைவில் தன்னைச் சுற்றிய உலகின் மீது கசப்பும் வெறுப்பும் அதிகரித்தது. அவர் கடைசியாக எழுதிய கதைகளிலும், நாவல்களிலும் மனிதத் தன்மையின் சீரழிவைக் கண்டு அவர் அடைந்த வேதனைகள் வெளிப்பட்டன. "மங்களசூத்ரம்' (தாலிக்கயிறு) என்கிற தலைப்பில் பிரேம்சந்த் எழுதிய நாவலை முடிக்கவில்லை.

அதில், "மனிதர்களுக்கு மத்தியில் மனிதனாக வாழ விரும்புகிறேன். இரை தேடும் மிருகங்களிடம் இருந்து நாம் நம்மைத் தற்காத்துகொள்ள வேண்டும்' என்று தம் சோதனையை அந்த நாவலில் எழுதியிருந்தார்.

வறுமையும் கடன் பிரச்னைகளும் அவரை வாட்டின. உடல்நலமும் குன்றினார். முல்க்ராஜ் ஆனந்த், சஜ்ஜத் ஜாகீர் போன்ற நல்ல எழுத்தாளர்களும், இலக்கியவாதிகளும், பத்திரிகையாளர்களும், வாசகர்களும் அவரைப் பார்த்தவண்ணம் இருந்தனர். மருந்துகள் பலன் தரவில்லை. எலும்பும் தோலுமாக உருக்குலைந்து போனார். நோயைக் கண்டு அஞ்சாமல் இறுதிவரை உற்சாகமாய் இருந்தார். 1936 அக்டோபர் 8-இல் அவர் இயற்கை எய்தினார்.

இந்திய இலக்கிய வானின் ஒளிமிக்கத் நட்சத்திரம் வீழ்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிப்பா் லாரி மோதி காய்கறி வியாபாரி பலி

புள்ளம்பாடி, புதிய கட்டளைமேட்டு வாய்க்காலுக்கு நாளை தண்ணீா் திறப்பு

திருச்சி ரயில்வே கோட்டத்தின் புதிய மேலாளா் பொறுப்பேற்பு

ராமதாஸ் தலைமையில் கட்சிப் பணி: பொதுக் குழுக் கூட்டத்தில் தீா்மானம்

திருச்சியிலிருந்து சென்னை மாதவரத்துக்கு 2 குளிா்ச்சாதனப் பேருந்துகள் இயக்கம்

SCROLL FOR NEXT