ஷெர்லக் ஹோம்ஸ்...
துப்பறிபவர், சி.ஐ.டி. மாவீரர், தீரர், சர்வகலா வல்லவர்... என்றெல்லாம் பாராட்டிச் சொல்லப்படுகிற வார்த்தைக்கு இலக்கணமாக விளங்கிய கதாபாத்திரம்தான் 'ஷெர்லக் ஹோம்ஸ்'.
துப்பறிபவர், சி.ஐ.டி. மாவீரர், தீரர், சர்வகலா வல்லவர்... என்றெல்லாம் பாராட்டிச் சொல்லப்படுகிற வார்த்தைக்கு இலக்கணமாக விளங்கிய கதாபாத்திரம்தான் 'ஷெர்லக் ஹோம்ஸ்'.
ஒடிசலான உயரமான உருவம், நீண்ட மூக்கு, வாயில் புகையும் பைப், ஷெர்லக்குக்கே உரிய தொப்பி, எதையும் எவரையும் துளைக்கும் பார்வை, நிமிர்ந்த நடை- இதுதான் துப்பறியும் சிங்கமான விளங்கிய ஷெர்லக் ஹோம்ஸின் தோற்றம். இப்படி ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி, இலக்கிய உலகில் உலவ விட்டவர் 'சர் ஆர்தர் கானன் டாயல்' என்ற பிரசித்தி பெற்ற எழுத்தாளர்.
மருத்துவரான இவர், கிளீனிக்கை தொடங்கினார். நோயாளிகள் வரவில்லை. வருமானத்துக்கு வழி தேடியபோது, எழுத்தாளராகும் எண்ணம் அவருக்குத் தோன்றியது. 'ஷெர்லக் ஹோம்ஸ்' என்ற கதாபாத்திரத்தை உருவாக்கி, எழுதத் தொடங்கினார்.
'எ ஸ்டடி இன் ஸ்கார்லெட்' என்ற முதல் கதையானது 1887-இல் வெளியானது. பல மர்மமான கொலைகள், கொள்ளைகளை ஷெர்லக் ஹோம்ஸூம், அவரது நண்பர் மருத்துவர் வாட்சனும் சேர்ந்து துப்புத் துலக்கி உண்மையான குற்றவாளிகளை வெளியே கொண்டு வரும் அந்தச் சாகசம் மக்களுக்கு வெகுவாகப் பிடித்தது. நிறைய எழுதினார். வாசகர்கள் பெருகினர். லட்சக்கணக்கில் புத்தகங்கள் விற்பனையானது. காவல் துறையின் பல பிரச்னைகளுக்கும் கானன் டாயில் தனது கதைகள் வாயிலாக உதவியிருக்கிறார்.
துப்பறியும் புலியான ஷெர்லக் ஹோம்ஸ் தன்னுடன் இணைபிரியாமல் உடனிருக்கும் வாட்சனிடம் தனது எண்ணங்கள், செயல்களைஅடிக்கடி விவரிப்பார். ஓயாமல் எதையாவது சொல்லிக் கொண்டிருப்பது வாட்சனுக்கு வெறுத்து
விடுவதோடு, பொறுமை இழந்துவிடுவார். ஹோம்ஸின் எதிரி பேராசிரியர் மாரியார்ட்டி என்பவரே கொலை, கொள்ளைகளுக்குப் பின்னணியில் இருப்பவர். கதாநாயகனும், வில்லனும் அடிக்கடி மோதிக் கொள்ளும் சம்பவங்கள் மிகவும் சுவாரசியமாக இருக்கும்.
'தி ஃபைனல் பிராப்ளம்' என்ற மர்மக் கதையில், ஹோம்ஸூம், மாரியார்ட்டியும் கடுமையாகச் சண்டையிடுவதாகவும், அதில் ஷெர்லக் இறந்துவிடுவதாகவும் கானன் டாயல் எழுதியிருந்தார். இதைப் படித்த லட்சக்கணக்கான வாசகர்கள் துடித்துப் போயினர் . ஷெர்லக்கின் மரணத்தை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
ஷெர்லக் ஹோம்ஸை கற்பனை பாத்திரமாகக் கருதாமல், உண்மையான மனிதராகவே நினைத்தார்கள் வாசகர்கள். அந்த அளவுக்கு ஒன்றிப்போய்விட்டனர். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கானன் டாயலின் இல்லம் நோக்கிப் படையெடுத்து, 'ஷெர்லக் ஹோம்லை சாகடிக்காதே!' என்று பெரும் போராட்டமே நடத்தினர்.
அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் இருந்த வாசகர்களும் தந்தி, தபால்கள், தொலைபேசி வாயிலாக, கானன் டாயனுக்கு தங்களது கண்டனத்தைப் பதிவு செய்தனர். வேறு வழியின்றி, ஷெர்லக் ஹோம்ஸை மீண்டும் சாகச வீரராகத் துப்புத் துலக்கும்படி, கானன் டாயல் எழுத வேண்டியதாயிற்று. இதன் பின்னரே ரசிகர்கள் அமைதியாயினர்.
இதில் வேடிக்கை என்னவென்றால், ஷெர்லக் ஹோம்ஸை லண்டன்வாசி என்றும் அங்குள்ள புகழ்பெற்ற பேக்கர் தெருவில் 221 என்ற எண்ணுள்ள பெரிய மாளிகையில் குடியிருப்பதாக கானன் டாயல் தனது கதைகளில் குறிப்பிட்டிருந்தார். அதை உண்மை என நம்பி வாசகர்கள் தேடி சென்றதும் உண்டு.
இவர் தனது சரித்திர நவீனங்களை 'ஸர்நிகல்', 'தி வொயிட் கம்பெனி', 'மிகா கிளார்க் கே', 'ரோட்னி ஸ்டோன்' போன்ற படைப்புகளின் வாயிலாக, பெரும் புகழ் பெறுவோம் என நினைத்தார். ஆனால், அது நடக்கவில்லை அவரை புகழின் உச்சிக்கு அழைத்துச் சென்றதோ துப்பறியும் கதைகள்தான்! இவற்றிலும் அவரது சிறந்த படைப்பு- 'தி ஹவுண்ட் ஆஃப் தி பாஸ்கர்வில்லி' (பாஸ்கர் விலியின் பயங்கர வேட்டைநாய்) என்பதுதான்.