"நகரத்தார்' என்று சிறப்பித்து அழைக்கப்பெறும் "நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள்' என்று சொன்ன மாத்திரத்திலேயே திரைகடலோடியும் திரவியம் தேடியவர்கள் என்ற செய்திதான் நம் நினைவுக்கு வரும்.
பாடுபட்டுத் தேடிய திரவியத்தைக் கொண்டு நகரத்தார் கோயில்களைக் கட்டினார்கள்; அன்னதான சத்திரங்களையும், விருந்தினர் விடுதிகளையும் நிறுவினார்கள்; பள்ளிக் கூடங்களையும் கலாசாலைகளையும் ஏற்படுத்தினார்கள். "லேவாதேவி' தொழிலிலும் ஈடுபாடு கொண்டு சிறந்து விளங்கினர்.
இந்த மாதிரியான சமூக - சமயத் திருப்பணிகளைச் செய்து வந்த நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள், கால, தேச, வர்த்தமானங்களைக் கருத்தில் கொண்டு தேசியத் திருப்பணிகளிலும் தம்மைப் பிணைத்துக் கொண்டார்கள்.
புராதனப் பெருமையும் சமய - கலாசாரத்தின் தலை நகரமாகவும் விளங்கும் காசி வாசத்தின்போது, பாரதி ஓரளவு நாட்டுக்கோட்டைச் செட்டியார்களைப் பற்றி அறிந்திருந்தார். அவர்கள் செய்த அறப்பணிகளையும், திருப்பணிகளையும் நேரிலேயே கண்டு பாரதி மகிழ்ந்தார். தமக்குச் சந்தர்ப்பம் வாய்த்தபோதெல்லாம் பாராட்டியும் எழுதியுள்ளார். பத்திரிகை உலகில் பாரதி காலடி பதித்த நாள் முதற்கொண்டே அவர் நாட்டுக்கோட்டைச் செட்டியார்களைப் பற்றி எழுதியுள்ளார்.
நாட்டுக்கோட்டைச் செட்டியார்களின் திருமணத்தைப் பற்றி மிக விரிவாக "இந்தியா' பத்திரிகைக்கு "சுதேசி' என்பதாகப் புனைபெயரில் ஒருவர் கட்டுரை எழுதி இருந்தார்.
கட்டுரையிலே பல ரசமான செய்திகள் சொல்லப்பட்டு இருந்தன. அந்தக் கட்டுரைச் செய்திகளைப் பிறரும் அறிந்துகொள்ள வேண்டும் என்று பாரதி எண்ணம் கொண்டார்.
1906-ஆம் ஆண்டு அக்டோபர் 13, 20, 27 ஆகிய தேதிகளிட்ட "இந்தியா' பத்திரிகையிலே கட்டுரைகளாகப் பிரசுரம் செய்தார் பாரதி. ஆங்கிலேய முதலாளிகள் பலரும் சேர்ந்து தொடங்கிய, மிகப் பிரபலமாக விளங்கிய "அர்பத்நாட் கம்பெனி' 1906 அக்டோபர் 22-ஆம் தேதி திவால் ஆகிவிட்டதாக அறிவித்தது. குறிப்பாக, கம்பெனியார் தங்கள் வணிகத் தொடர்பைப் பரப்பிக் கொள்ள சென்னை நகரிலும் தங்கள் கிளையை நிறுவி இருந்தனர்.
சென்னைக் கிளையில் பணம் கட்டியவர்கள் தங்கள் முதலீடுகளை இழந்து கஷ்ட நஷ்டங்களுக்கு உள்ளானார்கள். அர்பத்நாட் கம்பெனியுடன் லேவாதேவி தொடர்பு கொண்டிருந்தவர்கள் தங்கள் தலையில் இடி விழுந்துவிட்டது என்று அலறினர்.
தனிப்பட்ட நபர்கள் கஷ்ட-நஷ்டத்துக்கு ஆளானார்கள் என்பது ஒருபுறமிருக்க, குறிப்பாகப் பத்திரிகை உலகின் "தந்தை' என்று போற்றப்பட்ட ஜி. சுப்பிரமணிய ஐயர் முயற்சியால் சிரத்தையுடன் திரட்டப்பட்ட "சுதேசிய நிதி'யின் பெரும்பகுதியை இழக்க நேரிட்டது. அப்போது பாரதி தமது "இந்தியா' பத்திரிகையில் இப்படிப் பதிவு செய்தார்: ""நடந்து போனதைப் பற்றி வருந்திப் பயனில்லை. சுதேசிய முயற்சியின் பலத்தைப் பரிசோதனை பண்ண வேண்டியே ஈசன் இந்த விபத்தை அனுப்பி இருக்கிறார் என்று நம்புகிறோம். மேலும், சுதேசிய நிதிப் பணத்தை அந்நிய தேசத்தாரின் கம்பெனியிலே போட்டு வைத்ததற்கு இதை ஒரு தண்டனையாகப் பாவித்துக் கொள்ளலாம். தக்க நாட்டுக்கோட்டைச் செட்டிமாரிடம் ஏன் ஒப்புவித்திருக்கக் கூடாது?' என்று எழுதிய அதே நேரத்தில், "சுதேசிய பாங்க் ஒன்று ஸ்தாபிப்பதற்கு இதுவே சரியான சமயம்.' (இந்தியா: 27.10.1906 - பக்கம் 6)'' என்று பாரதி தம் மனதில் பட்டதைப் பதிவு செய்தார் என்பது கவனிக்கத்தக்கது.
நாட்டுக்கோட்டைச் செட்டியார்களிடம் சுதேசியப் பணத்தை ஒப்படைத்திருந்தால், தொகை பாதுகாப்பாக இருந்திருக்கும் என்று பதிவு செய்த அதே போதில் "இந்தியர்களுக்கு என்று "சுதேசிய பாங்க்' ஒன்று ஏற்படுத்த வேண்டும்' என்றும் குரல் கொடுத்தார்.
பாரதி குரல் கொடுத்ததைப் போன்றே வேறு பல சென்னைப் பிரமுகர்களும் இநதியர்களுக்கு என்று "சுதேசி பாங்க்' ஸ்தாபனம் செய்யப்பட வேண்டும் என்பதான அவசியத்தை உணர்ந்தனர். இந்த விஷயத்தில் அக்கறை கொண்டு வற்புறுத்திய சிறப்பு, தேசிய சிந்தனைகள் நிரம்பிய லாட் கோவிந்ததாஸ் என்பவரையே சேரும். அவர் "இந்தியன் பேட்ரியட்' பத்திரிகையில் சென்னையில் ஓர் இந்தியன் பாங்க் ஸ்தாபிக்க வேண்டியதன் அவசியத் தன்மை குறித்து வற்புறுத்தி எழுதினார். அவருடைய யோசனையின் பேரில் 1906-ஆம் ஆண்டு டிச.2-ஆம் தேதியன்று சென்னை மகாஜன சபையிலே "இந்திய பாங்க்' ஸ்தாபனம் செய்வதற்கான கூட்டமும் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் அண்ணாமலை செட்டியார், எம்.ஏ.எம்.முத்தையா செட்டியார், எம்.கே.ஆர்.வெங்கடாசலம் செட்டியார் ஆகியோர் கலந்துகொண்டனர். இவர்களுடன் திவான்பகதூர் பி.ராஜரத்தின முதலியார், திவான் பகதூர் ஆதிநாராயண அய்யா, சீதாராம் செட்டியார், பி.ஆர்.சுந்தரம் ஐயர், நடேச ஐயர், முரளிதாஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
வ.உ.சிதம்பரம் பிள்ளையின் முயற்சியால் தக்கவர்கள் கூடி, சுதேசிக் கப்பல் கம்பெனி தொடங்குவதற்கு முன்னரே நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் சிலர் சுதேசிக் கப்பல் கம்பெனி தொடங்கிய செய்தியையும் பாரதி பதிவு செய்துள்ளார்:
"நம்முடைய தேசத்தில் இருக்கும் வர்த்தகர்களான நாட்டுக்கோட்டைச் செட்டிகள் சிலர் சேர்ந்து ஏற்றுமதி - இறக்குமதிகளுக்குச் சுலபமாய் இருக்கும் பொருட்டும், வியாபாரம் நன்றாக நடக்கும் பொருட்டும் ஓர் சுதேசிக் கப்பல் வைத்திருக்கிறார்கள். இதனால், நம்முடைய தேச ஜனங்கள் எவ்வளவோ நன்மையை அடைகிறார்கள். ஜனங்கள் அந்நிய தேசம் செல்வதற்கும் சார்ஜ் ரொம்பவும் இல்லாமல் செளகரியமாய் இருக்கிறது.' (இந்தியா: 3.11.1906).
இந்திய நாட்டு மக்களின் நலன் கருதி "இந்தியன் பாங்க்' தொடங்கிய காலப்பகுதியில், நாட்டு நலனில் - சுதேசிய இயக்கத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர் வ.உ.சிதம்பரனார். விதேசிக் கப்பல் கம்பெனிக்கு எதிராகச் "சுதேசிக் கப்பல் கம்பெனி' என்பதாக ஓர் அமைப்பைத் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டார் வ.உ.சிதம்பரனார். தாம் எண்ணியபடி அதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.
முதற் கட்டமாக தூத்துக்குடிக்கும் கொழும்புக்குமிடையே கப்பல் போக்குவரத்தைத் தொடங்கத் திட்டமிடப்பட்டது. "சுதேசி ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனி லிமிடெட், தூத்துக்குடி' என்கிற பெயரில் கம்பெனி தொடங்கப்பட்டது; 16.10.1906-ஆம் தேதி பதிவும் செய்யப்பட்டது.
இப்படி ஏற்பாடு செய்த காலத்தில் நடைபெற்ற கூட்டத்திற்குத் தலைமை தாங்கியவர் பாண்டித்துரைத்த தேவர் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநர்கள் குழுவில் அந்தக் காலத்திலேயே செல்வமும், செல்வாக்கும் படைத்த தன வணிகர்களான வ.அ.ஆ.ஆதிநாராயணன் செட்டியார், அ.வெ.ச.வெங்கடாசலம் செட்டியார் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். சிதம்பரனார் துணைச் செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தச் செய்திகளையெல்லாம் பாரதி "இந்தியா' பத்திரிகையில் பதிவு செய்தார். எல்லாவற்றிற்கும் மேலாகப் பாரதியும் "சுதேசிக் கம்பெனி'க்குப் பொதுமக்கள் ஆதரவு அளிக்கும்படி வேண்டுகோள் ஒன்றையும் "இந்தியா' பத்திரிகையில் விடுத்தார்.
சுதேசிக் கப்பல் கம்பெனி: "தரும நிதி' என்ற பெயரிட்டு, தம் "இந்தியா' பத்திரிகை மூலம் நிதி திரட்டும் பணியிலும் பாரதி ஈடுபட்டார். தம் பங்களிப்பாக ஐந்து ரூபாயும் வழங்கினார். தம் முயற்சியால் பலரிடமிருந்து பெற்ற தொகையான ரூ.180-ஐ தூத்துக்குடியில் இயங்கிய கப்பல் கம்பெனிக்கு அனுப்பியும் வைத்தார்.
நாட்டுக்கோட்டைச் செட்டியார்களிடம் பாரதி எந்த அளவுக்கு நேசம் பாராட்டினாரோ - அதே அளவுக்குப் பாரதியிடம் செட்டிநாட்டவரும் மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தனர். பெயர் போட்டுக் கொள்ளாமல் பாரதி ஆசிரியராகப் பணிபுரிந்த "இந்தியா' பத்திரிகை செட்டிநாட்டுப் பகுதியிலும் செல்வாக்குப் பெற்றது. செட்டிநாடு வட்டாரத்தில் ஒருசிலருக்கே அறிமுகமாகி இருந்த பாரதியின் பெருமையையும் மகிமையையும் பலர் அறியச் செய்த பெருமை கானாடுகாத்தான் வை.சு.சண்முகம் செட்டியாரையே சாரும்.
1919 அக்டோபர் 28-ஆம் தேதி வை.சு.சண்முகம் செட்டியாரின் அழைப்பை ஏற்று அப்போது கடையவாசியாக இருந்த பாரதி கானாடுகாத்தான் சென்றார். அவருடைய விருந்தாளியாகவும் சில நாள்கள் தங்கினார். இந்தச் சமயத்தில் பாரதியைச் சந்தித்து உரையாடும் பாக்கியத்தைத் "தமிழ்க் கடல்' ராய சொக்கலிங்கம், சா.கணேசன், சொ.முருகப்பா போன்ற தமிழ் சான்றோர்கள் பெற்றனர்.
வை.சு.சண்முகம் செட்டியாரை நேரில் கண்டு உரையாடி மகிழ்ந்த பாரதி அவருடைய குணாதிசயங்களைக் கண்டு போற்றி மகிழ்ந்தார். அவரின் அன்பும் பண்பும் அரவணைப்பும் பாரதியைப் பெரிதும் கவர்ந்தன. பரவசப்பட்ட பாரதி உடனேயே 31.10.1010-ஆம் தேதி "செட்டி மக்கள் குலத்தினுக்கோர் சுடர் விளக்கு' என்று போற்றிப் பாடல் ஒன்றை இயற்றினார். பாரதியின் கையெழுத்து வடிவிலேயே இருந்த பாடலை 1958-ஆம் ஆண்டு காரைக்குடியிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ""எழில்'' பத்திரிகையில் பிரசுரமானது. அதில்தான் ""செட்டி மக்கள் குலவிளக்கு'' என்பதாகப் பாடலுக்கான தலைப்பும் இடம் பெற்றது.
தமிழறிஞர் திரு. சொ.முருகப்ப செட்டியார் காரைக்குடியில் "ஹிந்து மதாபிமான சங்கம்' என்ற பெயரில் ஓர் அமைப்பை 10.9.1917-இல் தோற்றுவித்தார்.
பாரதி தம்முடைய காரைக்குடி விஜயத்தின்போது "காரைக்குடி ஹிந்து மதாபினமான சங்கத்தார்மீது வாழ்த்துப் பாட்டுக்கள்' என்ற தலைப்பில் 9.11.1919-ஆம் தேதியன்று தம் கைப்பட எழுதி வழங்கினார். ஹிந்து மதாபிமான சங்கப் பாடலைத் தம்முடைய அச்சகத்தில் அச்சிட்டுப் பலருக்கும் வழங்கினார். தாம் ஆசிரியர் பொறுப்பு வகித்த ""தனவைசிய ஊழியன்'' பத்திரிகையிலே பாரதியின் படைப்புகள் சிலவற்றைப் பதிப்பித்தார்.
பாரதி மரணமெய்திய பின்னரும் "குமரன்' பத்திரிகையில் பாரதி தொடர்பான செய்திகளை வெளியிட்டார். பாரதியின் சில பாடல்களுக்கு விளக்கவுரையையும் சொ.முருகப்ப செட்டியார் எழுதினார். இவை எல்லாவற்றுக்கும் சிகரமாக ""மகாகவி பாரதி'' என்னும் தலைப்பில் சிறு நூல் ஒன்றையும் எழுதிப் பிரசுரமும் செய்தார். மற்றும், பாரதி எழுதிய "தென்னிந்திய வியாபாரம்' என்னும் தலைப்பில் இரண்டு கட்டுரைகளையும் பிரசுரம் செய்த பெருமைக்கும் சொ.முருகப்பா உரியவராகிறார். "புராணங்கள்' என்னும் தலைப்பில் பாரதியின் கட்டுரையையும் தம் பத்திரிகையில் பிரசுரம் செய்ததாகவும் தெரிகிறது; ஆனால், கட்டுரை பார்வைக்குக் கிடைக்கவில்லை.
"உலகம் சுற்றிய தமிழர்' என்று அழைக்கப்பட்ட ஏ.கே.செட்டியார் தம்முடைய "குமரி மலர்' பத்திரிகையிலே பாரதி பற்றிய செய்திகளையும் கட்டுரைகள் பலவற்றையும் பிரசுரம் செய்வதைத் தமது கடமையாகக் கொண்டிருந்தார்.
ஏ.கே.செட்டியார் பர்மாவில் வாழ்ந்த காலத்தில் அதாவது, 1933-ஆம் ஆண்டு வாக்கில் "தன வணிகன்' பத்திரிகையிலே பாரதியின் புகைப்படத்தை வெளியிட்டார். பாரதியின் புகழ் பரவு வேண்டும் என்பதில் ஏ.கே.செட்டியார் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். பாரதியின் நூல்களின் விற்பனை என்பது அந்தக் காலத்தில் செட்டி நாட்டில்தான் என்று மிகுந்த பெருமையுடன் பாரதியின் இளவல் சி.விசுவநாதன் சொல்லிக் கொள்வார்.
சக்தி வாய்ந்த திரைப்படச் சாதனத்தின் வழியாகப் பாரதியின் பாடல்களைச் சாமானிய பாமர மக்களிடமும் சென்றடைய - புதிய விழிப்பை ஏற்படுத்தியவர் திரு. ஏ.வி.மெய்யப்ப செட்டியார் ஆவார். 1947-ஆம் ஆண்டு நாடு விடுதலை பெற்ற தருணத்திலிருந்தே "நாம் இருவர்', "வேதாள உலகம்', "ஓர் இரவு', "பெண்', "வாழ்க்கை' - போன்ற திரைப்படங்களில் எல்லாம் பாரதியின் பாடல்களை ஒலிக்கச் செய்தவர் ஏ.வி.மெய்யப்ப செட்டியார் என்றால் மிகையாகாது.
ஏ.வி.எம்.செட்டியாரின் அடியொற்றி, அவருடைய மகன் சரவணன் அவர்களும் செய்த பணி பாராட்டுதலுக்கு உரியது. திரு.சரவணன் அவர்கள் பாரதியார் பாடல்கள் என்றுமே மக்கள் நெஞ்சில் நிலைத்து நிற்க வேண்டும் என்று கருதினார். அதன் விளைவாகப் பாரதியின் பாடல்களைக் கொண்ட "காùஸட்டு'களை வெளியிட்டார்.
1949-ஆம் ஆண்டு அன்றைய முதல்வராகப் பதவி வகித்த ஓ.பி.இராமசாமி ரெட்டியார் எடுத்துக்கொண்ட முயற்சியின் பலனாக பாரதி பாடல்கள் நாட்டுடைமை ஆனது. அதுபோது பாரதி பாடல்களுக்கு இசைத்தட்டு வெளியீட்டு உரிமையை ரூ.10,000/- கொடுத்துப் பெற்றிருந்த ஏ.வி.எம்.செட்டியார் நயாபைசா கூடப் பெற்றுக் கொள்ளாமல் - கல்கி அவர்களின் பாஷையில் சொல்வதானால், "அரசுக்குத் தான சாசனம்' கொடுத்துவிட்டார்.
பாரதி பிறந்த எட்டயபுரத்தில் அவருக்கு ஓர் மணி மண்டபம் கட்ட வேண்டும் என்று கருதி, அம் முயற்சியில் ஈடுபட்ட கல்கி அவர்களுடன் இணைந்து செயல்புரிந்தவர் "தமிழ்ப் பண்ணை' சின்ன அண்ணாமலை ஆவார். கல்கி எழுதிய "பாரதியார் பிறந்தார்' என்னும் நூலை 1946-ஆம் ஆண்டில் அழகிய முறையில் வெளியிட்டார்.
சின்ன அண்ணாமலை தாமே தம் சொந்தப் பொறுப்பில் பாரதி விழாக்களை நடத்தினார்; பாரதி விழாப் போட்டிகளை நடத்திப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பாரதி நூல்களைப் பரிசாக வழங்கினார். பாரதி விழாக்கள் பலவற்றிலும் கலந்து கொண்டு சொற்பொழிவுகள் பலவும் ஆற்றியுள்ளார்.
"சக்தி காரியாலய' வை.கோவிந்தன் செட்டியார் அவர்கள் 1941-ஆம் ஆண்டிலேயே, பாரதியின் மனைவி செல்லம்மாள் எழுதிய ""தவப்புதல்வர் பாரதியார் சரித்திரம்'' என்னும் நூலையும், 1944-ஆம் ஆண்டில் வ.ரா. என்ற சுருக்கப் பெயரால் அழைக்கப்பட்ட வ.ராமசாமி எழுதிய ""மகாகவி பாரதியார்'' என்னும் நூலையும், 1947-ஆம் ஆண்டு ரா.கனகலிங்கம் என்பார் எழுதிய "என் குருநாதர் பாரதியார்' என்னும் நூலையும் வெளியிட்டார்.
சக்தி வை.கோவிந்தன் செட்டியாரைப் போன்றே பாரதி நூல்களை வெளியிட்ட பெருமையில் "முல்லை முத்தையா' அவர்களின் பங்களிப்பு கணிசமானது .
1949-ஆம் ஆண்டில் "பாரதியார் பாமணிகள்' என்ற தலைப்பில் பாரதி பாடல்களினின்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட செய்யுள் மணிகளைக் கொண்ட நூலை வெளியிட்டார். 1956-ஆம் ஆண்டில் முன்மாதிரி நூலாகப் "பாரதியார் பெருமை' என்பதாக அற்புதமான நூலை - பல அறிஞர் பெருமக்கள் - பல்வேறு காலகட்டங்களில் எழுதிய கட்டுரைகள் கொண்ட நூலை வெளியிட்டார் மற்றும் 1947-ஆம் ஆண்டிலே "மகாகவி பாரதியார் கதைகள்', "பகவத் கீதை' ஆகிய நூல்களையும் வெளியிட்டார்.
அரசியலில் மிகத் தீவிரமாக ஈடுபட்டிருந்த காலப்பகுதியிலும் தமக்குச் சந்தர்ப்பம் வாய்ந்த போதெல்லாம் பாரதியின் மகிமைகளைப் பாராட்டி மகிழ்ந்தவர் கவியரசர் கண்ணதாசன் ஆவார். அவர் தம்முடைய ""தென்றல்'' பத்திரிகையில் தாகூரையும் பாரதியையும் இணைத்து எழுதிய ""இரு குயில்கள்'' கவிதை பலருடைய கவனத்தை ஈர்த்தது.
1963-ஆம் ஆண்டு வெளியான மகாகவி பாரதி சிறப்பு மலரில் கண்ணதாசன், மகாகவி பாரதிக்கு அஞ்சலி செலுத்தி அருமையான கவிதை ஒன்றையும் எழுதி இருந்தார். அதில் அவர் தம்மைப் பாரதி வெறியன் என்றும் குறிப்பிட்டுக் கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.