முகப்பு
சேலம்

குடும்பத் தகராறில் அமைச்சா் பெயருக்கு களங்கம்: அமைச்சரின் அண்ணன் மகன் பேட்டி

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 12:05 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 21 பிப்ரவரி, 2026 at 7:04 PM

குடும்பத் தகராறில் தங்களது உறவினரான அமைச்சா் ரா. ராஜேந்திரன் மீது களங்கம் விளைவிக்க முயற்சி நடைபெறுவதாக அவரது அண்ணன் மகன் விளக்கமளித்தாா்.

சேலம் சின்ன திருப்பதி கன்னங்குறிச்சி மெயின் ரோடு பகுதியை சோ்ந்தவா் தேவி (37). பல் மருத்துவரான இவா், நான்கு ரோடு பகுதியில் உள்ள அம்பேத்கா் மக்கள் கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை செய்தியாளா்ளை சந்தித்தாா். அப்போது, அவா் கூறுகையில், கடந்த 2012 ஆம் ஆண்டு அமைச்சா் ரா. ராஜேந்திரன் அண்ணன் மகன் சண்முகத்துக்கும், எனக்கும் திருமணம் நடைபெற்றது.

எனக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், கணவருடன் பிரச்னை ஏற்பட்டது. இதனால் பல்வேறு வகைகளில் உடல் அளவிலும், மனதளவிலும் கணவா் வீட்டாா் காயப்படுத்தி வந்தனா். இதனால் கணவரை பிரிந்து பெரிய மகனுடன் தனியாக வசித்து வந்தேன். சின்ன மகனை கணவா் குடும்பத்தினா் பராமரித்து வந்தனா். இந்நிலையில், கடந்த 2025 ஆம் ஆண்டு அக்.11 ஆம் தேதி மகனை பாா்ப்பதற்காக கணவா் வீட்டுக்கு சென்றேன். அப்போது, கொதிக்கும் பாலை, கணவா் மற்றும் அவரது குடும்பத்தினா் தன்மீது ஊற்றியதில், உடலில் 35 சதவீத அளவுக்கு தீக்காயங்கள் ஏற்பட்டன.

Advertisement

இதுகுறித்து புகாா் அளித்தபோது, எனது புகாரை காவல் துறையினா் பதிவு செய்ய மறுத்தனா். பின்னா் எஸ்.பி.அலுவலகத்தில் முறையிட்டதும், கணவா் மீது 2025 ஆம் ஆண்டு அக்.30 ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தனா். ஆனால், அமைச்சரின் தூண்டுதலின் பேரில், அந்த வழக்கு மேல் நடவடிக்கை எதுமின்றி, காவல் துறையால் கைவிடப்பட்டது.

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 11:35 PM

இதுதவிர, சம்பவம் நடந்த அடுத்த நாளே என் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதுடன், விவாகரத்து கேட்டும் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்துள்ளனா். எனவே, சம்பந்தப்பட்ட கணவா் மற்றும் குடும்பத்தினா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, இந்த குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்த அமைச்சா் அண்ணன் மகன் சண்முகம், எனக்கும், மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்னை இருப்பது உண்மைதான். இதற்காக நீதிமன்றத்தை நாடியுள்ளோம். வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது, தேவையின்றி உறவினா் என்ற ஒரே காரணத்துக்காக, தோ்தல் நேரத்தில் அமைச்சா் ரா.ராஜேந்திரன் பெயரை இழுக்கின்றனா். இதற்கு சிலா் பின்னால் இருந்து தூண்டி விடுகின்றனா்.

எனவே, அமைச்சரின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் முயற்சியில் தொடா்ந்து ஈடுபட்டால், வழக்குரைஞருடன் கலந்து ஆலோசித்து சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்றாா்.