ஞாயிறு கொண்டாட்டம்

நாடுகள்: தேசிய விளையாட்டுகள்...

நாடுகளின் தேசிய விளையாட்டுகள்: கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தின் பிரதிபலிப்பு

கோட்டாறு கோலப்பன்

ஒரு நாட்டின் சட்டபூர்வமான, அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டே அந்த நாட்டின் "தேசிய விளையாட்டு' என்று கருதப்படுகிறது. இவை அந்த நாட்டின் கலாசாரம், பாரம்பரிய நம்பிக்கையை பிரதிபலிப்பதோடு அந்த நாட்டு மக்களை அடையாளப்படுத்தவும் செய்கின்றன.

கால்பந்து:

உலகில் மிக அதிக ரசிகர்களைக் கொண்ட விளையாட்டு இது. 11 பேர் அடங்கிய இரு அணிகள் மோதுகின்றன. "சாக்கர்' என்ற பெயரிலும் கால்பந்து போட்டிகள் அழைக்கப்படுகின்றன. சர்வதேச அளவில் கால்பந்து போட்டிகளை நடத்தும் அமைப்பு ஃபிஃபா.

பிரான்ஸ், ஜெர்மனி, இஸ்ரேல், இத்தாலி, போலந்து, மொரீஷியஸ், மங்கோலியா போன்ற நாடுகளின் தேசிய விளையாட்டு.

ஃபீல்டு ஹாக்கி :

ஹாக்கி மட்டையால் ஆடும் இந்த விளையாட்டில் அணிக்கு 11 பேர் இடம்பெறுகின்றனர். ஒலிம்பிக் ஹாக்கியில் மிக அதிகம் தங்கம் வென்ற நாடு இந்தியா. 1975-இல் நடைபெற்ற ஹாக்கி உலகக் கோப்பையில் இந்தியா மகுடம் சூடியது. இந்தியாவின் தேசிய விளையாட்டாக ஹாக்கி கருதப்படுகிறது.

புஸ்காஷி:

ஆப்கானிஸ்தானின் தேசிய விளையாட்டு. குதிரை மீது சவாரி செய்தபடியே ஆட்டின் சடலத்தை "கோல்கம்பு' வரை இழுத்துச் செல்வதே இந்தப் போட்டி. மத்திய ஆசியாவை மையமிட்டு நடக்கும் விநோதமான விளையாட்டாகும்.

பாட்டோ:

அர்ஜென்டினாவின் தேசிய விளையாட்டு. கூடைப்பந்து, போலோ ஆகிய இரண்டு விளையாட்டுகள் இணைந்த ஒரு விளையாட்டு இது. குதிரை மீது அமர்ந்தபடியே இதை விளையாடுகின்றனர். "வாத்து' எனப் பொருள் தரும் ஸ்பானிஷ் சொல்லே "பாட்டே' . தொடக்கத்தில் இந்த விளையாட்டின்போது, உயிருள்ள வாத்துகள் பயன்படுத்தப்பட்டன.

கபடி:

வங்கதேசத்தின் தேசிய விளையாட்டு இது. இந்தியாவில் உருவானது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கபடியில் மிக அதிகம் தங்கம் வென்ற நாடு இந்தியா. அணிக்கு 12 ஆட்டக்காரர்கள் இருந்தபோதிலும், ஆட்டக்களத்தில் ஏழு பேர் மட்டுமே களமாடுகின்றனர். போட்டியின் கால அளவு நாற்பது நிமிடங்கள்.

அம்பெய்தல்:

புராதன காலந்தொட்டே பல்வேறு நாடுகளில் புழங்கி வந்த ஆயுதக் கலை, விளையாட்டாகும். பூடான் நாட்டின் தேசிய விளையாட்டாகும். 1900 முதல் அம்பெய்தல் ஒலிம்பிக்ஸில் உள்படுத்தப்பட்டது.

டேபிள் டென்னிஸ்:

சீனாவின் தேசிய விளையாட்டு. "பிங்டோஸ்' என்றும் இது அழைக்கப்படுகிறது. இதற்காகவே வடிவமைக்கப்பட்ட ஒரு மேஜையின் இரு புறங்களிலும் ஆட்டக்காரர்கள் சிறிய மட்டையில் கனம் குறைந்த பந்தை அடித்து ஆடும் விளையாட்டு ஆகும்.

ஐஸ் ஹாக்கி:

கனடாவின் ஒரு குளிர்கால தேசிய விளையாட்டு. பனி மூடிய ஆட்டக் களத்தில் விளையாடப்படுகிறது. செக்கோஸ்லேவிய நாட்டின் தேசிய விளையாட்டும் இதுதான்.

வாலிபால்:

ஆறு ஆட்டக்காரர்கள் அடங்கிய இரண்டு அணிகள் மோதும் விளையாட்டு. நேபாளம், இலங்கை போன்ற நாடுகளின் தேசிய விளையாட்டு. 2017 வரையில் "தண்டிபியோ' என்பதே நேபாளத்தின் அதிகாரப்பூர்வமற்ற தேசிய விளையாட்டாகும்.

கப்யூயிரா:

பிரேசில் நாட்டின் தேசிய விளையாட்டு. பயிற்சி வெளிப்படுத்துதல்கள், நடனம், இசை ஆகியவற்றின் பல்வேறு கூறுகள் ஒன்றிணைந்த ஆயுதக் கலையின் ஒரு வடிவம்.

பேஸ் பால்:

அமெரிக்கா, கியூபா, வெனிசுலேலா போன்ற நாடுகளின் தேசிய விளையாட்டு. அமெரிக்காவில் உருவானது. அணிக்கு ஒன்பது ஆட்டக்காரர்கள்.

கூடைபந்து:

லுதுவேனிய நாட்டின் தேசிய விளையாட்டு. அணிக்கு ஐந்து ஆட்டக்காரர்கள்.

கிரிக்கெட்:

இந்தியாவில் பெரும்பான்மையான மக்களால் விரும்பப்படும் விளையாட்டு. பிரிட்டன் நாட்டின் தேசிய விளையாட்டு ஆகும். 11 ஆட்டக்காரர்கள் அடங்கிய இரண்டு அணிகள் களத்தில் மோதுகின்றன. டெஸ்ட், ஒருநாள், ட்வென்டி - 20 என்று பல்வேறு முறைகளில் போட்டிகள் நடைபெறுகின்றன.

சுமோ மல்யுத்தம்:

ஜப்பான் நாட்டின் தேசிய விளையாட்டு. மல்யுத்த வீரர்கள் "ரிகிஷி' என்றும் வட்டவடிவமான மல்யுத்தப் போட்டிக் களம் "தோஹ்யோ' என்று அழைக்கப்படுகிறது. சுமா மல்யுத்தத்தை ஒரு தனி சிறப்புப் பிரிவாகக் கருதி பயிற்சி வழங்கும் ஒரே நாடு ஜப்பான்.

மல்யுத்தம்:

இரான் நாட்டின் தேசிய விளையாட்டு. உலகின் மிகப் பழமையான விளையாட்டுப் பிரிவுகளில் ஒன்று. போலோ, கால்பந்து ஆகியவையும் இரானின் பிற முக்கிய விளையாட்டுகள்.

கோல்ஃப்:

1456-இல் ஸ்காட்லாந்தின் எடின்பார்க்கில் இந்தப் போட்டி முதன்முதலாக நடைபெற்றது. ஸ்காட்லாந்தின் தேசிய விளையாட்டும் இதுதான். இதில் பயன்படுத்தப்படும் கம்பு கிளப் எனும் ஆட்டக்களம் "கோல்ஃப் கௌஸ்' என்றும் அழைக்கப்படுகிறது.

ரக்பி யூனியன்:

பிரிட்டனின் ரக்பி அரங்கிலிருந்து உருவான ஒரு வகை கால்பந்து விளையாட்டு ஆகும். நியூஸிலாந்து, வேல்ஸ் நாடுகளில் தேசிய விளையாட்டு. ஒரு ரக்பி அணியில் 15 ஆட்டக்காரர்கள் இடம்பெறுகின்றனர். "ஒவல்' வடிவிலான பந்து ஆட்டத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது.

வாட்டர் போலோ:

ஹாங்கேரியின் தேசிய விளையாட்டு. கைப்பந்து போலவே ஆடப்படுகிறது. தண்ணீரில் விளையாடப்படும். தொடக்கக் காலம் முதலே இது ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இடம்பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என் வகுப்புத் தோழன்..! மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்!

எங்கள் தோல்விக்குக் காரணம் ஹார்திக் பாண்டியா..! தெ.ஆ. பயிற்சியாளர் புகழாரம்!

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

SCROLL FOR NEXT