ரஜினிக்கு வில்லனாக நடிக்க வேண்டும்
ரஜினிக்கு வில்லனாக நடிக்க ஆசை: நடிகர் வரதராஜன் பழனிசாமி
அண்மையில் வெளியான "புஜ்ஜி அட் அனுப்பட்டி' விமர்சன ரீதியாகப் பெரும் வரவேற்பைப் பெற்று ஊடகங்களால் பாராட்டப்பட்டது. படத்தைப் பாராட்டியதைப் போலவே அந்தப் படத்தில் கதை மையம் கொள்ளும் கசாப்புக் கடைக்காரர் ரஹீம் பாய் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் வரதராஜன் பழனிசாமியையும் ஊடகங்கள் குறிப்பிட்டுப் பாராட்டியிருந்தன.
வரதராஜன் பழனிசாமி பேசும் போது...
"நடிப்பு என்பது எனது பால்ய காலத்தில் இருந்து உடன் வருகிற ஒன்று என்பேன். நான் பள்ளி நாடகங்களில் நடித்து நிறைய பரிசுகள் பெற்றுள்ளேன். தொடர்ந்து மேடை நாடக அனுபவங்கள் கல்லூரி மற்றும் கோயில் திருவிழாக்களில் நண்பர்களுடன் இணைந்து அரங்கேற்றிய நிறைய நாடகங்கள் எனது திறமையை வளர்த்துக் கொள்ள உதவியது.
அதில் குறிப்பாகப் பெண் வேடமிட்டு நடிக்கும்போது எனக்கு மிகவும் நல்ல பெயர் கிடைக்கும். அது மட்டுமல்ல தமிழ்நாடு அரசின் சார்பாக மாவட்டந்தோறும் நிகழ்த்திய மது விலக்கு, சேமிப்பு, சுகாதாரம் போன்ற விழிப்புணர்வு பிரசார நாடகங்கள் என்னைப் பட்டை தீட்டி கொள்ள அற்புதமான சாதனமாக இருந்தது மட்டுமன்றி என் மக்களுக்கு நல்லதாக பல விஷயங்கள் கற்றுத் தருகிறோம் என்னும் திருப்தியும் தந்தன.
எனக்கு வில்லன் நடிகர்களில் புகழ்பெற்ற நம்பியார் அவர்களை மிகவும் பிடிக்கும். அவரது இடம் இன்னும் கூட காலியாகத்தான் இருக்கிறது. எனக்கு அந்த இடத்தை நோக்கி செல்ல ஆசை. வில்லனாகவும் நடிப்பேன். அதே நேரம் எந்தப் பாத்திரம் இருந்தாலும் ஏற்று நடிக்கவும் எனக்கு ஆசை உண்டு. ரஜினிக்கு வில்லனாக நடிக்க ஆசை இருக்கிறது'' என்றார்.