முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

படமாய் வேண்டாம்; பாடமாய் இருப்போம்..!

சமூகச் சேவையின் புதிய அத்தியாயம்

Updated On : 18 மே, 2024 at 6:30 PM
பகிர்:

'வாழ்நாளுக்குப் பின்னர் சுவரில் படமாய் தொங்குவதைவிட பலருக்கும் ஒரு பாடமாக இருப்போம்' என்கிறார் திருச்சி அமிர்தம் சமூகச் சேவையின் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் 'யோகா' விஜயகுமார்.

நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டிருக்கும் அவர், தனது மறைவுக்குப் பின்னர் உடலை மருத்துவமனைக்குத் தானமாக வழங்க திருச்சி கி. ஆ. பெ. விசுவநாதன் அரசு மருத்துவக் கல்லூரியில் பதிவு செய்துள்ளார். அவரிடம் பேசியபோது:

''நூல்கள் இல்லாத வீடானது ஜன்னல்கள் இல்லாத அறை போன்றது. 'ஒரு நூலகம் திறக்கப்படும்போது, ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது' என்பார்கள். மனித மனங்களைப் பண்படுத்தும் சக்தி நூல்களுக்கு உண்டு.

திருச்சி புத்தூரில் எனது இல்லத்தின் முகப்பு பகுதியில் இலவச நூலகத்தை இருபத்தைந்து ஆண்டுகளாக நடத்தி வருகிறேன். பத்து நூல்களுடன் நான் துவங்கிய தொடங்கிய நூலகத்தில் இன்று 10 ஆயிரம் நூல்கள் உள்ளன.

சிறுவர்கள், இளைஞர்கள், மகளிர், கல்விசார், சட்டம், மருத்துவம், தன்னம்பிக்கை, சுற்றுச்சூழல், உடல்நலம், மன நலம் உள்ளிட்ட பல தலைப்புகளில் நூல்கள் இடம் பெற்றுள்ளன. நாளிதழ்கள், பருவ இதழ்களும் வாசிக்கக் கிடைக்கும்.

இங்கு நூலகர் கிடையாது. காலை எட்டு மணி முதல் இரவு எட்டு மணி வரை திறந்திருக்கும். யார் வேண்டுமானாலும் நூலகத்துக்கு வருகை தந்து நூல்களை வாசிக்கலாம். குறிப்பு எடுத்துகொள்ளலாம். வீட்டுக்கு எடுத்து செல்ல அனுமதி கிடையாது. நூலகத்தின் செயல்பாடுகளை அறிந்த பலர், இலவசமாக வழங்கத் தொடங்கினர். வாசிப்பவர்களுக்கு குடிநீர், மின்விசிறி, இருக்கைகள் நூலகத்தில் உண்டு.

காட்சியகம்:

இதுதவிர, தமிழர்கள் பாரம்பரியமாகத் தங்கள் வாழ்க்கையில் பயன்படுத்திய பல்வேறு பொருள்களைக் காட்சிப்படுத்தியிருக்கிறோம். மரப்பாச்சி பொம்மை, கல் மர உரல், உலக்கை, அம்மிக்கல், நாட்டுமருந்துகளைத் தயாரிக்க இடிக்கும் சிறு கல் உரல், பிரிமனை, பாக்குவெட்டி, மரச்சட்டத்தை உடைய மூன்று சிறிய சக்கரங்களைக் கொண்ட நடைவண்டி, முறத்தைவிடச் சற்று நீளமான சொளகு, பித்தளை கூஜா, நூல் கொத்து, குஞ்சம் என்ற குஞ்சலம், பலவித தமுக்குகள், உறுமி மேளம் போன்ற பொருள்களைச் சேகரித்து காட்சியகமாக ஒழுங்குப்படுத்தியுள்ளோம்.

அநாதை சடலங்கள் அடக்கம்:

உரிமை கோரப்படாத அநாதை சடலங்களையும், விபத்துகளில் சிக்கி அடையாளம் தெரியாமல் இறந்தவர்களின் சடலங்களையும் பெற்று உரிய ஈமக்கிரிகைகளைச் செய்து அடக்கம் செய்கிறோம். இதற்கு எனது மனைவி வழக்குரைஞர் சித்ரா, மகள் கீர்த்தனா உறுதுணையாக இருந்து, உதவிகளைப் புரிவார்கள்.

புற்றுநோயாளிகளுக்காக முடிதானம்:

திருச்சி தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பு படிக்கும் எனது மகள் கீர்த்தனா. புற்றுநோய் நோயாளிகளுக்காக அவ்வப்போது முடிதானம் செய்துவருகிறார்.

உணவுத் தானம்:

திருச்சியில் ஒருவேளை உணவு கிடைக்காத நலிந்தவர்கள் நூற்றுக்கணக்கானோர் இருக்கின்றனர். இவர்களுக்காக உணவு விடுதிகள், திருமண விழாக்களில் மீதமாகும் உணவுகளை பத்து ஆண்டுகளாகச் சேகரித்து, தினமும் அன்னதானம் வழங்கி வருகிறோம். தினமும் நூறு பேர் வரை உணவு வழங்குகிறோம்'' என்கிறார் விஜயகுமார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.