14 ஆண்டுகள் நாள்தோறும் காலை உணவு...
பதினான்கு ஆண்டுகளாக நாள்தோறும் மாற்றுத்திறனாளிகள், முதியோருக்கு காலை உணவை வழங்கி வருகிறார் சமூகச் சேவகர் எஸ்.அருணோதயம்.
பதினான்கு ஆண்டுகளாக நாள்தோறும் மாற்றுத்திறனாளிகள், முதியோருக்கு காலை உணவை வழங்கி வருகிறார் சமூகச் சேவகர் எஸ்.அருணோதயம்.
2013-ஆம் ஆண்டு முதல் அவரது பெட்ரோல் விற்பனை நிலையம், பேருந்தில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கப்படுகிறது. இவற்றை தனது ஊழியர்கள் வாயிலாகவே வழங்கிவருகிறார். எந்தச் சூழ்நிலையிலும் ஒருநாளும் இதை அவர் தவறவிடவில்லை.
குடியாத்தம் பிச்சனூர் நரி முருகப்ப முதலி தெருவில் வசித்து வரும் அறுபத்து ஏழு வயதானவர் அருணோதயம். பழைய பேருந்து நிலையத்தில் உள்ள யுவராஜா பெட்ரோல் விற்பனை நிலையத்திலும், அருண் பஸ் சர்வீஸ் சார்பில் இயங்கும் பேருந்திலும் வழங்கி வருகிறார். பாக்கம் கிராமத்தில் உள்ள சாய் அக்க்ஷரா பெட்ரோல் விற்பனை நிலையத்தில் சில ஆண்டுகளாகவும் உணவு விநியோகம் தொடர்கிறது.
தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர் சங்கத்தின் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத் தலைவராகவும், சமுதாயப் பொருளாதாரத் தொண்டு மன்றத்தின் உள்ளூர் குழுவில் நிர்வாகியாகவும் இருந்துவரும் அவரிடம் பேசியபோது:
'குடியாத்தத்தில் எனது பள்ளிப்படிப்பை முடித்தேன். சென்னை விவேகானந்தா கல்லூரியில் பி.காம் படிப்பையும், தில்லியில் எம்.பி.ஏ. படிப்பையும் முடித்தேன்.
2013-ஆம் ஆண்டு நாகாலாந்து, அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள சக்திப் பீடங்களைத் தரிசிக்கச் சென்றேன். அப்போது நல்ல மழை பெய்தது. தனியாக நின்றிருந்த மூதாட்டி ஒருவர், பிற்பகல் 1 மணி வரையில் சாப்பிடவில்லை என்று கூறி பசியால் தவிப்பதாகக் கூறினார். இதைப் பார்த்தவுடன் எனது மனம் தவித்தது. சொந்த ஊர் வந்தவுடன் இதையே யோசித்தேன். அப்போது உதித்ததுதான் இது.
முதலில் பெட்ரோல் விற்பனை நிலையத்திலேயே மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கு உணவு வழங்கப்படும் என அட்டையை வைத்தேன். முதலில் சிலர் பெற்றனர். தற்போது 150 பேர் வரை உணவைப் பெற்று அருந்துகின்றனர். தினசரி காலையில் 8.30 மணி முதல் 10 மணி வரையில், எனது ஊழியர்களே தேடி வருவோருக்கு வழங்கி விடுவர்.
மழை, வெள்ளம், என்று எந்தச் சூழ்நிலையிலும் உணவு வழங்குவதை நானும் நிறுத்தியதில்லை. நெல்லூர்பேட்டையைச் சேர்ந்த குமார், அவருடைய குடும்பத்தினர் ஒருநாளும் தவறாமல் உணவைத் தயாரித்து, பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வைத்துவிடுவர். இந்தச் சேவையில் அவர்களுக்கும் பங்குண்டு.
'மருமகள் சரியான நேரத்தில் உணவுத் தர மறுக்கிறார்' என்று கூறி சில முதியோர் உணவைப் பெற்றுச் செல்வது மனக் கஷ்டத்தை ஏற்படுத்துகிறது. உணவைப் பெறுவோர் தங்களுடைய இல்ல நிகழ்ச்சிகளுக்கு எனக்கும் பத்திரிகையை அளிக்கும்போது, மனம் நெகிழ்கிறது. எனது இந்தச் சேவை குறித்து பெட்ரோலியத் துறை சார்பில் வெளியாகும் இதழிலும் கட்டுரை வெளியானது.
இந்தச் சேவையாலே 2024-இல் வேலூருக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகையின்போது, அவரை சந்திக்கக் கூடிய வாய்ப்பை டாக்டர் எம்.ஜி.ஆர். நிகர்நிலைப் பல்கலைக்கழக வேந்தர் ஏ.சி.சண்முகம் வழங்கியது எனது வாழ்க்கையில் மறக்க முடியாததாகும்.
எனது தாத்தா பி.அருணகிரி, சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர். ஆனால், சுதந்திரத்துக்கு முன்னதாகவே அவர் மறைந்துவிட்டார். 1970-களில் அவருக்கு தியாகிக்கான அங்கீகாரத்தையும், பென்ஷன் தொகையும் வழங்க தமிழ்நாடு அரசு முன்வந்தபோது, எனது பாட்டி மறுத்துவிட்டார்.
எனது தந்தை ஏ.சாம்பசிவ முதலியார், சமூகச் சேவையில் ஈடுபட்டவர். நான் பத்து வயதில் தந்தையை இழந்தேன். திருமகள் நூற்பாலையின் ஸ்தாபகர்களில் ஒருவரும், 14 ஆண்டுகள் நிர்வாக இயக்குநராக இருந்தவருமான ஏ.எம்.வாசுதேவன் முதலியாரின் அரவணைப்பில் வளர்ந்தேன். இதனால் எனக்கும் சமூகச் சேவையில் ஈடுபாடு ஏற்பட்டது.
சென்னையில் 2015-இல் பெருமழையின்போது, சைதாப்பேட்டையில் உள்ள ஸ்ரீராம் நகர், ஹபீப் காலனி உள்ளிட்ட இடங்களில் உணவு, மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினேன். கஜா புயல் உள்ளிட்ட புயல்களின்போதும் நிவாரணம் தொடர்ந்தது.
நான் பொறுப்பு வகிக்கும் சமுதாயப் பொருளாதாரத் தொண்டு மன்றத்தின் உள்ளூர் குழு சார்பில், நிர்வாகிகள், தன்னார்வலர்களைக் கொண்டு ஒற்றைப் பெற்றோரை உடைய 6 மாணவ, மாணவிகளின் உயர்கல்விக்கான மொத்தச் செலவையும் ஏற்றுக்கொண்டு, அவர்களைப் படிக்க வைத்து வருகிறோம். ஒருவர் மருத்துவம், இருவர் பி.இ., இருவர் நர்ஸிங், ஒருவர் பாலிடெக்னிக் படித்துவருகின்றனர்.
ஆன்மிகப் பணி:
தொண்டை மண்டலத்தில் முக்கிய ஆன்மிக ஊரான குடியாத்தத்தில் பல்வேறு கோயில்கள் உள்ளன. இங்குள்ள சிவன் கோயில்களில் நால்வரால் பாடல் பெற்றதில்லை. ஆனாலும், இங்கு நால்வருக்கும் மடங்கள் உள்ளன. பிச்சனூரில் மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர், சுந்தரருக்கும், நெல்லூர்பேட்டையில் அப்பருக்கும் மடங்கள் உள்ளன.
இவற்றில் மாணிக்கவாசகர் என்ற மடத்தை எனது குடும்பத்தினர் நிர்வகித்துவந்தனர். அந்த மடம் தற்போது ஆதிமூலசுவாமி மடம் என மாற்றலாகியுள்ளது. இந்த மடத்தின் நிர்வாக அறங்காவலராக நான் பணியாற்றுகிறேன். இந்த மடம் சார்பில் மாதத்தில் 2, 4-ஆம் ஞாயிற்றுக்கிழமைகளில் ஓதுவார்களால் திருவாசகம் சொற்பொழிவு இலவசமாக மாணவ, மாணவியருக்குப் பயிற்றுவிக்கப்படுகிறது'.
எனது பணிகளுக்கு எனது அண்ணன் வழக்குரைஞர் எஸ்.திம்மரசு, எனது மனைவி கலைவாணி, மகள் வினோதினி, மருமகனும் மத்திய அரசு காவல் பணியில் டி.ஐ.ஜி.யாகவும் உள்ள ரகுராமராஜன் உள்ளிட்ட உறவினர்கள் உதவிகரமாக உள்ளனர்'' என்கிறார் எஸ்.அருணோதயம்.