முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

முரளிதரனுக்கு பிறகு விஜயகாந்த்

முரளிதரன் பின் விஜயகாந்த்: யார் இவர்?

Updated On : 26 மே, 2024 at 12:00 AM
பகிர்:

இலங்கை கிரிக்கெட் அணியில் புகழ்பெற்ற வீரர்கள் பட்டியலில் முரளிதரன், ரணதுங்கா, ஜெயசூர்யா, சங்கக்காரா உள்ளிட்ட பெயர்கள் இடம்பெறாமல் முழுமை பெறாது. இதில், சுழல்பந்து வீச்சாளர் முரளிதரன் இலங்கைத் தமிழர். இவருக்குப் பின்னர் ஆச்சரியப் புயலாக நுழைந்திருப்பவர் இன்னொரு இலங்கைத் தமிழரான விஜயகாந்த் வியாஸ்காந்த்.

ஹைதராபாத்தில் அண்மையில் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின் 57-ஆவது லீக் போட்டியில் விஜயகாந்த் வியாஸ்காந்த் அறிமுகமானார். இதில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - லக்னவ் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதியதுதான் முக்கியமான போட்டி. ஹைதராபாத் மைதானத்தின் பிட்ச்சில் போட்டி நடந்ததால், 200 ரன்களை அள்ளலாம் என்று ஆரூடம் கூறப்பட்டது. ஆனால், லக்னவ் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியால் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 165 ரன்களே எடுக்க முடிந்தது.

லக்னவ் ரன்கள் எடுப்பதை அடக்கும் விதமாக, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்த்தின் "நேர்ச்சுழல்' பந்து வீச்சு அமைந்திருந்தது. தொடக்கத்தில் விஜயகாந்த் வியாஸ்காந்த் வீசிய இரண்டு ஓவர்களில் ஒரு பவுண்டரிகூட அடிக்க முடியாமல் லக்னவ் அணியின் வீரர்கள் க்ருனால் பண்டியா, கே. எல். ராகுல் ஆகிய இருவரும் கைகளைப் பிசைந்து கொண்டனர்.

Advertisement

இவருடைய அபார பந்து வீச்சைக் கண்ட பார்வையாளர்கள் இடையே "யார் இவர்' என்ற இணையதளங்களில் தேட தொடங்கிவிட்டனர்.

இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயகாந்த், சுழற்பந்துவீச்சாளர் மட்டுமின்றி, பேட்டிங்கும் செய்யும் ஆல் ரவுண்டர். "டி20' போட்டிகளில் விளையாடி முத்திரை பதித்தவர்.

தொடக்கத்தில், இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் சார்பாக ஒரே ஒரு சர்வதேச "டி20' போட்டியில் மட்டும் ஆடும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

தனது திறமையால் பல "டி20' லீக் தொடர்களில் விளையாடும் வாய்ப்புகள் விஜயகாந்த்தைத் தேடி வந்தன. மும்பை எமிரேட்ஸ் அணி, சட்டோகிராம் அணி, ஜாஃப்னா கிங்ஸ் அணிகளின் சார்பாக விளையாடும் வாய்ப்புகளும் கிடைத்தன. தொடர்ந்து, இந்தியன் பிரிமியர் லீக் போட்டி பெறும் வாய்ப்பும் கிடைத்தது.

ஐ.பி.எல் போட்டிகளுக்காக, சன்ரைசஸ் ஹைதராபாத் அணிக்காக விஜயகாந்த் வியாஸ்காந்த் தேர்ந்தெடுக்கப்பட்டார். சன்ரைசஸ் ஹைதராபாத் அணியைச் சேர்ந்த இன்னொரு இலங்கை வீரர் வனிந்து ஹசரங்க உடல் நலக் குறைவால் பங்கேற்க முடியாமல் போனதால், விஜயகாந்த் வியாஸ்காந்த் களம் இறங்கி சாதித்துவிட்டார்.

தனக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் மிகவும் பிடிக்கும் என்று கூறும் விஜயகாந்த், 'அஸ்வினிடம் பேச வேண்டும். அவரிடம் பந்து வீச்சு குறித்து எனது சந்தேகங்களைத் தீர்த்துகொள்ள வேண்டும்'' என்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.