ஒரு காட்சியை சினிமாவாக்க நிறைய வழிகள் இருக்கும். ஆனால், அது எல்லாவற்றையும் செய்து பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அப்படி செய்தால் எந்த சுவாரசிய புள்ளியையும் தரிசிக்க முடியாது. காட்சிப்படுத்த எது சிறந்த வழி என்பதை பார்த்து ஆராய்ந்து எடுக்க வேண்டும்.
அது ஒரு நுட்பமான பயிற்சி. ஒரு நல்ல திரைக்கதைதான் சினிமாவின் தன்மையைத் தீர்மானிக்கிறது. அதன் பின் இயக்குநருக்கும், ரசிகர்ளுக்கும் மத்தியில் இருக்கிற புரிதல். அது மட்டும் இருந்தால், உங்கள் முகத்தைக் கண்ணாடியில் பார்ப்பது போல எளிமையானது அது.
அழுத்தமாக பேசத் தொடங்குகிறார் இயக்குநர் எஸ்.பி.சக்திவேல். "உறுமீன்', "பயணிகள் கவனிக்கவும்' படங்களின் இயக்குநர். இப்போது "அலங்கு' படத்தின் மூலம் மீண்டும் கதை சொல்ல வருகிறார்.
அலங்கு .... தலைப்பு தருகிற பொருள் எப்படி....
அலங்கு என்பது ஒரு வகை நாய் இனம். ராஜராஜ சோழன் காலத்தில் போர் முகாம்களில், போர் தந்திரங்களில் பயன்படுத்தப்பட்ட நாய் வகை. இன்று பெரியளவில் இது இல்லை. அழிந்து விட்டது... என்று கூட சொல்லலாம். இந்தக் கதையில் அந்த நாய் வகையை கொண்டு வந்து நடிக்க வைத்திருக்கிறோம். அதன் தாக்கம்தான் தலைப்பு. மற்றபடி இது முழுக்க முழுக்க மக்கள் நலன் பேசும் கதை. நிச்சயமாக சூழ்நிலை ஒருவனை மாற்றும். அப்படி சிலரை மாற்றி எங்கெங்கோ கொண்டு போய் வைக்கிற கதைதான் இது.
இங்கே கதைக்காகவோ களத்துக்காகவோ அலைய வேண்டிய அவசியமே இல்லை. ஒருவனை, அவன் வாழ்க்கையை ஆழமாகப் பார்த்தாலே கதை. அவனோடு ஊர் வரைக்கும் தேடிப் போனால் அது களம். அப்படி நான் படித்த பத்திரிகை செய்தி, அதன் பின் தொடர்ந்து சென்று பார்த்தல் இப்படித்தான் கதை. தமிழக - கேரள எல்லையில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள் குறித்த செய்திதான் அது. அதன் பின்னால் போய் பார்த்தால் அதனுள் அவ்வளவு அரசியல்.
அதையெல்லாம் சினிமாவுக்கான சமரசங்களுடன் புனைந்து வந்திருக்கிறேன். அதிகாரம் என்ற ஒன்று நம்மை எப்படி எல்லாம் துரத்துக்கு அடிக்கிறது... நாம் ஒவ்வொருவரும் இந்த அதிகாரத்துக்கு முன்பாக, ஒன்றும் செய்ய இயலாதவர்களாக வாழ்க்கை முழுக்க நமக்கே தெரியாமல் போராடித் தவிக்கிறோம். வாழ்க்கை நம்மை புரட்டிப் போட்டால் எல்லாமே மாறும். அப்போது மனிதர்களைத் தெரிந்துக் கொள்கிற விந்தையும் நடக்கும். அப்போது நிகழ்கிற அற்புதங்களும் அபத்தங்களும்தான் இந்தக் கதை.
கதையின் உள்ளடக்கமாக என்ன இருக்கும்...
வாலை ஆட்டும் ஒரு நாய்க்குள், பெயர் சிணுங்கும் கிளிக்குள் கூட உறங்கும் முயலுக்குள்... ஒரு காதலை, பிரிவை மீட்டெடுக்கிறான் மனிதன். காலம் முழுக்க ஜல்லிக்கட்டு காளைகளைத் தயார் செய்வதிலேயே வாழ்க்கையைத் தொலைத்தவர்கள், பறவைகளுக்கான ஆராய்ச்சிக்காவே தன்னை அர்பணித்தவர்கள், பாம்புகளின் புதிர்களைத் தெரிந்துக் கொள்வதையே பயணமாக்கி கொண்டவர்கள்... இப்படி ஏக மனிதர்கள் ஒரு அதிசயம் போல் நம்மைக் கடந்து கொண்டே இருக்கிறார்கள்.
எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்தான் மனிதர்களின் பெரும் பிரச்னை. நம்பிக்கை, அன்பு எல்லாம் பொய்யாகும் போதுதான், எல்லாம் கசந்து போகிறது. விலங்குகளிடம் அது எதுவும் இல்லை. அதன் அன்பில் அப்பழுக்கு இல்லை. இந்த மன நிலையை விலங்குகளோடு வாழும் பலரிடம் நான் பார்த்திருக்கிறேன்.
நம்பிக்கை இன்மை நிறைந்த மனித உறவுகளை மனதளவில் துரத்தியவர்கள், பிராணிகளின் பேசா அன்பை நிழலாக்கி கொள்கிறார்கள். இங்கே நிகழ்வதும் அப்படித்தான். இந்த பூமியோடும், மனித வாழ்க்கையோடும் பிற உயிர்களுக்கு இருக்கும் தொடர்பு என்பது மிக முக்கியமானது.
நமக்கு தெரிந்ததெல்லாம் நேரடியாக, அதுவும் உயிரினங்களை அழித்து அடையும் நன்மைகள்தான். ஆனால் மறைமுகமாக நாம் உயிர் வாழவே இந்த உயிரினங்கள் மிகவும் அவசியமாக இருப்பதை நாம் அறிந்திருக்கிறோமா? எறும்பிலிருந்து யானை வரை நாம் வாழும் இந்த பூமியின் சுற்றுச்சூழலுக்கும், நம் உயிருக்கும் பல வகையில் அதன் வழக்கமான நடவடிக்கைகள் மூலம் உதவுகின்றன. இங்கே ஒரு மனிதனுக்கும், நாய்க்குமான உறவு பிணைப்பை ஒரு விதமாக சொல்லியிருக்கிறேன்.
ஆய்வு அனுபவம், படமாக்கிய பக்குவம் எப்படி இருக்கும் படம்...?
இப்போது கூட பார்க்கலாம், நமக்கு ஆகாத, பிடிக்காத ஒரு விஷயத்தை எங்கேயும், எந்த நிமிஷமும் நாம் எதிர்கொள்ள வேண்டி வரும். மொத்தமாகவே, சகலத்திலும் ஊழல் என்கிற இடத்தில் வந்து இப்போது நின்றுக் கொண்டு இருக்கிறோம். சகித்துக் கொண்டால் வாழ்வு வசப்படும்.
பொறுமை இழந்தால், வாயைத் திறந்து, கண்கள் சிவந்து கேள்வி கேட்டால் அங்கேதான் பிரச்னை ஆரம்பம். அப்படி ஒரு கட்டம் இந்தக் கதையில் இருக்கிறது. குடும்பம், சமூகம் என சகல மட்டங்களிலும் கேள்வியை முன் வைக்கிற கதை. அதுதான் மொத்த படமும். எனக்கான, நமக்கான உணர்வாக, மனிதனாக காட்சிப்படுத்தியதுதான் புதிது. வசதி மட்டுமே சந்தோஷம் இல்லை.
அதுக்குப்பிறகு கூட சித்தார்த்தன் துறவுக்குப் போனது நடந்திருக்கிறது. கழுத்தில இருக்கிற வரைக்கும்தான் தங்கம். திருடன் கழுத்தில் கத்தி வைத்து விட்டால் இரும்பு குண்டு மாதிரி அதுவே கனக்கும். எங்கே நிம்மதி, எப்போது சந்தோஷம் என்று எதையும் எளிதாக அர்த்தப்படுத்திட முடியாது.
அன்புமணி ராமதாஸ் மகள் சங்கமித்ராதான் தயாரிப்பாளர் என்று சொல்லுகிறார்கள்...
சௌமியா அன்புமணிக்கு ஆதரவாக மகள் சங்கமித்ரா தருமபுரி தொகுதியில் பிரசாரங்களை மேற்கொண்டது பலருக்கும் நினைவிருக்கலாம். அன்புமணி ராமதாஸýக்கு சங்கமித்ரா, சம்யுக்தா, சஞ்சுத்ரா என மூன்று மகள்கள் இருக்கிறார்கள்.
இவர்களில் சங்கமித்ரா திரைப்படத் தயாரிப்பாளராக களமிறங்கியிருக்கிறார். குணாநிதி, காளிவெங்கட், செம்பன் வினோத், சரத் அப்பானி, ஸ்ரீரேகா, கொற்றவை, ரெஜின் ரோஸ், சண்முகம் முத்துசாமி, மாஸ்டர் அஜய், இதயகுமார் இப்படி நடிகர்கள்.
படத்தின் 95 சதவீத காட்சிகள் அடர் வனப்பகுதிகளில் படமாக்கி இருக்கிறோம். அதுவே படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.