இயந்திரம் 
ஞாயிறு கொண்டாட்டம்

பனஞ்சர்க்கரையில் 'மக்ரோன்'..!

பனைமரங்களில் சுரக்கும் பதநீரிலிருந்து பனஞ்சர்க்கரையைத் தயாரிப்பதுடன் அதற்கு மதிப்பு கூட்டி பல வித்தியாசமான துணைப் பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறார் கணினிப் பொறியாளர் கண்ணன்.

பிஸ்மி பரிணாமன்

பனைமரங்களில் சுரக்கும் பதநீரிலிருந்து பனஞ்சர்க்கரையைத் தயாரிப்பதுடன் அதற்கு மதிப்பு கூட்டி பல வித்தியாசமான துணைப் பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறார் கணினிப் பொறியாளர் கண்ணன்.

தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்பட்ட ஆறுமுகனேரியைச் சேர்ந்த இவரிடம் பேசியபோது:

"வெள்ளை சர்க்கரையில் (சீனி) எலும்புத் தூள்கள், அதிக அளவில் ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. சீனி சர்க்கரையானது ஒவ்வாமை வருவதை விரைவுபடுத்துகிறது என்பதாலும் பெரும்பாலானோர் நாட்டுச் சர்க்கரைக்கு மாறிவருகின்றனர்.

பதநீரிலிருந்து கருப்பட்டி தயாரிப்பது என் தாத்தாவும், அவருக்கு முந்தைய தலைமுறையினரும் செய்து வந்த தொழில். வருமானம் இல்லாததால், எனது தந்தை அதைச் செய்யவில்லை. நானும் அப்படியே இருந்தேன்.

சில ஆண்டுகளுக்கு முன் ஊரில் பனை மரங்களை வெட்டிக் கொண்டிருந்தவர்களிடம் கேட்டபோது, "பனை மரம் உள்ள நிலத்தில் வேர்க்கடலையைப் பயிரிடுகிறோம். பனம்பழத்தை ருசிக்க காட்டுப் பன்றிகள் வருவதால், வேர்க்கடலை செடிகளையும் நாசமாக்குகின்றன. அதனால் பனை மரங்களை வெட்டுகிறோம்' என்றபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

பனை ஏறுவது ஆண்கள் என்றால், கருப்பட்டி தயாரிப்பது பெண்கள். கருப்பட்டி தயாரிப்பது வெகுவாகக் குறைந்துவிட்டதால், பனை ஏறுவதும் குறைந்துவிட்டது. பனை ஏறுவதை ஊக்குவிக்க கிடைக்கும் பதநீரை நேரடியாக வாங்கி, நாமே பனஞ் சர்க்கரை தயாரிக்கலாம் என்று முடிவு செய்தேன்.

தொடக்கத்தில் பாரம்பரிய முறையில் கருப்பட்டி பனஞ்சர்க்கரையைத் தயாரித்தேன். கருப்பட்டி தயாரிப்பின்போது சுற்றுப்புறத் தூசியும், எரியும் விறகு அடுப்பால் சாம்பலும் கருப்பட்டி பாகில் கலந்துவிடுகிறது.

இதைத் தவிர்க்க வேளாண்மைக் கல்லூரியைத் தொடர்பு கொண்டு பனஞ் சர்க்கரை தயாரிப்பை இயந்திரமயமாக்கினேன். ஆரம்பத்தில் பதநீரில் இருக்கும் தூசி தும்புகளை, அதிகபட்ச சுண்ணாம்பைப் பிரித்தேன். பதநீரை கொதிக்க வைக்க நீராவியைப் பயன்படுத்தினேன்.

மூடப்பட்ட மூன்று கொதிகலன்களில் பதநீரைக் கொதிக்க வைத்து, பாகு நிலையில் வெளியே எடுத்து சூடு ஆறியதும் அதை பொடியாக்கி பனஞ்சர்க்கரை செய்கிறோம். கருப்பட்டி என்றால் வாங்குபவர்கள் வீட்டில் அதை பொடியாக்க வேண்டும். அப்போது கருப்பட்டி சிதறும். கிடைக்கும் பொடியும் சீராக இருக்காது. அந்த அசெளகரியத்தைப் போக்கப் பொடி செய்துவிட்டால் பயனாளர்கள் தேவைக்கு ஏற்றது போல சேர்க்க முடியும்.

அலுவலகத்துக்குப் போகிறவர்கள் அங்கு தேநீர் குடிக்க, சர்க்கரைக்குப் பதில் பனஞ்சர்க்கரையைப் பயன்படுத்த சிறு உறைகளில் அடைத்தும் விற்கிறோம். பனஞ்சர்க்கரை முந்திரிப் பருப்பு, முட்டை வெள்ளைக் கரு சேர்த்து "மக்ரோன்' தயாரிக்கிறோம். ரத்த அணுக்கள் பெருக சிவப்பு காய்கறிகளுடன் பனஞ்சர்க்கரை சேர்த்து பௌடர் தயாரிக்கிறோம். இதைப் பாலில் கலந்து குடிக்கலாம்.

பனங்கிழங்கை வேகவைத்து உலர்த்திப் பொடி செய்து பனங்கிழங்கு மாவு தயாரிக்கிறோம். பனங் கிழங்கு மாவு ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்க உதவும். இவை அனைத்தும் "பாம் இரா' என்ற பெயரில் அமேசான் மூலம் விற்கிறோம்.

தரமான பொருளை விற்பனை செய்ய வேண்டும் என்று தீர்மானமாக உள்ளேன். பனை விளைபொருள்களை சிறார்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்ற முனைப்பில் எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்கிறோம்.

எனது ஆலைக்கு 40 பேர் பதநீர் வழங்குகிறார்கள். பிளஸ் 1 படிக்கும் மாணவர் காலை, மாலையும் பனை மரம் ஏறி சுமார் 8 குடம் பதநீர் கொடுத்து 650 ரூபாய் சம்பாதிக்கிறார். ஒருவர் மூன்றுவேளையும் பதநீர் இறக்கி மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார்.

ஒரு ஹெக்டேர் நிலத்தில் கரும்பு பயிரிட்டு கிடைக்கும் வருமானத்தைவிட 8 மடங்கு வருமானத்தை 15-ஆவது ஆண்டிலிருந்து பனைகள் தரும். ஒருமுறை பதநீர் தரத் தொடங்கிவிட்டால் சுமார் 30 ஆண்டுகளுக்கு பராமரிப்பு இல்லை.

நடுதல் இல்லை. பதநீர் சுரப்பது வருடத்தில் நான்கு மாதங்கள் தான். பனை விதைகளை மண்ணில் புதைத்து பனங்கிழங்கை விளைவித்து அதை பொடியாக்கி ஊட்டச்சத்து மாவாக விற்கலாம். பனையில் கிடைக்கும் பொருள்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்தால் நஷ்டம் ஏற்படாது. ஆண்டு முழுவதும் லாபம்தான்' என்கிறார் கண்ணன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூப்பர் 8: இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு!

கோழிக்கோடு: சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் உணவகம் மீது தாக்குதல்

பெர்லின் திரைப்பட விழாவில் அசாம் பெண் இயக்கிய படத்துக்கு விருது!

பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு!

#t20wc | இலங்கை bowling எப்படி இருக்கு? | T20 World Cup Review | #SLvsENG

SCROLL FOR NEXT