நடிகர் திலகம் சிவாஜி கணேசனை அனைவரும் அறிவார்கள். ஆனால், மலேசியா, சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்களுக்கோ சிவாஜி என்றால், "அசோகன் முனியாண்டி' நினைவுக்கு வருவார். இவருக்கு "சிங்கப்பூர் சிவாஜி' என்றே செல்லப் பெயர்.
சிங்கப்பூரில் இவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பாடகராகப் பங்கேற்று வந்த செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றும் குணசேகரனிடம் பேசியபோது:
'அசோக் முனியாண்டிக்கு அறுபது வயது. அவர் சுமார் நாற்பது ஆண்டுகளாகப் பாடகராக இருந்தாலும், கடந்த இருபது ஆண்டுகளாக சிவாஜி பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தார். அவரது உடல்வாகு, குரல், முகபாவம், உடல் மொழி என அனைத்துமே சிவாஜியைப் போலவே இருக்கும்.
தொடக்கத்தில், சிவாஜி படங்கள், பாடல் காட்சிகளை ஏராளமாகப் பார்த்து, அவரைப் போலவே நடித்து பயிற்சி செய்வார். நாளாக, நாளாக அவர் சிவாஜியைப் போலவே நடிப்பதாக அனைவரும் பாராட்டினர்.
இன்னமும் கடுமையாக பயிற்சி செய்து, தனது திறமையை வளர்த்துக் கொண்டார். அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. எளிமையானவர். தன்னைவிட வயது குறைந்தவர்கள் மட்டுமில்லாமல் சிறுவர்களிடமும் மரியாதையுடன்தான் அவர் குறிப்பிடுவார்.
சிங்கப்பூர், மலேசியாவில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளில் அவருக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்து வந்தன.
ஹோட்டல்களில் நண்பர்களோடு கொண்டாடும்போது, விருந்தினர்களைப் பாட்டுப் பாடி, ஆடி மகிழ்விக்க சிங்கப்பூர் சிவாஜிக்கு அழைப்பார்கள். "முதல் மரியாதை' படத்தில் இடம்பெறும், "பூங்காற்று திரும்புமா?' பாடலுக்கு அவர் நடிக்கும்போது ரசிகர்கள் கைத்தட்டி மகிழ்வார்கள்.
சிவாஜி கணேசன் நடித்த "சிவகாமியின் செல்வன்' படத்தில் இடம்பெற்ற "உள்ளம் இரண்டும் ஒன்றை ஒன்று...' என்ற பாடல். அவர் பங்கேற்ற கடைசி நிகழ்ச்சியில் கூட அவர் அந்தப் பாடலைப் பாடி முடிக்கும் தருணத்தில்தான் அப்படியே சரிந்து விழுந்தார். உடனடியாக அவரை சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். ஆனால் இறந்தார்.
வழக்கமாக, சிங்கப்பூரில் பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் மரணம் அடைந்தால் மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தும் வழக்கம் இல்லை. ஆனால், சிங்கப்பூர் சிவாஜிக்கு ஆயிரத்துக்கும் அதிகமானோர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்'' என்கிறார் குணசேகரன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.