நாணயங்கள் 
ஞாயிறு கொண்டாட்டம்

வரலாறு பேசும் பழங்கால நாணயங்கள்

நாட்டின் வணிகத்தை நாணயமும், தகவல் தொடர்பை அஞ்சல் தலையும் பிரதிபலிக்கின்றன.

DIN

எம்.மகராஜன்

நாட்டின் வணிகத்தை நாணயமும், தகவல் தொடர்பை அஞ்சல் தலையும் பிரதிபலிக்கின்றன. இவற்றில் இடம்பெற்றுள்ள தகவல்களின் வாயிலாக, வரலாறு, ஆட்சிமுறையை அறியலாம். தகவல்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதில் வரலாற்று ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்களோடு, நாணயங்கள், தபால் தலை சேகரிப்பாளர்களின் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது.

சென்னை எழும்பூரில் அண்மையில் நடைபெற்ற கண்காட்சியில், பல நூற்றாண்டுக்கு முன்பு வெளிவந்த குப்தர்கள், சோழர்கள், ஆங்கிலேயர்கள் காலத்தைய தங்கம், வெள்ளி, செம்பு நாணயங்களைக் காண முடிந்தது. இவற்றைப் பார்வையிட்டது மட்டுமின்றி, பலர் ஆர்வத்துடன் வாங்கியும் சென்றனர். மேலும், சிலர் தங்கள் வீடுகளில் நீண்ட நாள்களாக இருந்த பழைய நாணயங்கள், நோட்டுகளையும் அங்கு விற்க முயன்றனர்.

நாணயத்தின் பரிணாமம்:

பண்டைய காலத்தில் மக்கள் பண்டமாற்று முறையிலேயே பொருள்களை பரிமாறிக் கொண்டனர். உள்நாட்டு வணிகத்தில் பண்டமாற்று முறை நடைமுறையில் இருந்தாலும், வெளிநாட்டு வணிகத்தில் வணிகர்கள் தங்கக் கட்டிகளைப் பரிமாறிக் கொண்டனர். பொன் காசுகள்

சங்கக் காலத்தில் இருந்ததை "பொன்செய் காசு' என நற்றிணையும், "பொலங்குல ஒரு காசு', "பொலஞ்செய் கிண்கணிக் காசு' என குறுந்தொகையும், "பொலங்காசு', பொலஞ்செய் காசு' என அகநானூறும் விவரிக்கின்றன.

நாணயங்கள்

அதன்பின்னர், மக்களிடையே தோன்றிய பல புதிய சமயக் கோட்பாடுகளும், புதிய வணிக மையங்களும் நாணய வளர்ச்சியை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு சென்றன.

முத்திரை நாணயங்கள்:

ஒரு நாட்டில் உருவாகும் நாணயம் தனக்கென தனி இடத்தைப் பெறும் வகையில் உருவானதுதான் முத்திரை நாணயங்கள். ஆரம்பக் காலத்தில் இயற்கையை கடவுளாக வழிபட்ட நிலையில் சூரியன், மலை, மரம், விலங்குகளை நாணயங்களில் குறியீடுகளாகப் பொறித்தனர்.

நந்தப் பேரரசின் காலத்தில், நாடு முழுவதும் முத்திரை நாணயங்கள் பரவின. அவர்கள் நாணயங்களுக்கு நிலையான வடிவமும் மதிப்பும் வழங்கினர். நாணயங்களில் உள்ள குறியீடுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காரணத்துக்காகவோ அல்லது குறிக்கோளுக்காகப் பொறிக்கப்பட்டிருக்கும். நாணயங்களின் வகை, தயாரிக்கும் இடம் பொறுத்து அடையாளமிட்டுள்ளனர். இதனால் ஒரு நாணயத்தின் காலம், அரசர், இடம் உள்ளிட்டவை எளிதாக வகைப்படுத்தி விடலாம்.

நாணயச்சாலை:

ஆங்கிலேயர் ஆட்சியில் மும்பை, கொல்கத்தாவில் மிகப் பெரிய நாணயச் சாலைகள் அமைக்கப்பட்டன. சுதந்திரத்துக்குப் பின்னர் ஹைதராபாத் நிஜாமிடம் இருந்த நாணயச்சாலை இந்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு வந்தது. சுதந்திர இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஒரே நாணயச் சாலை நொய்டாவில் உள்ளது.

1988-இல் உருவாக்கப்பட்ட இந்த நாணயச்சாலையில், முதல்முறையாக எஃகு (ஸ்டேய்ன்லெஸ் ஸ்டீல்) நாணயங்கள் உருவாக்கப்பட்டன.

இந்தியாவில் இருவகை நாணயங்கள் வெளியிடப்படுகின்றன. அன்றாட புழக்கத்தில் இருக்கும் நாணயங்கள் "குடியரசு நாணயம்' என்றும், தலைவர்கள், முக்கிய நிகழ்வுகள், வரலாற்று சின்னங்களை நினைவுக் கூறும் வகையில் உருவம் பொறிக்கப்பட்டு வெளியிடுவதை "நினைவு நாணயங்கள்' என்றும் அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் அதிகபட்சமாக தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலின் ஆயிரமாவது ஆண்டை முன்னிட்டு ஆயிரம் ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டது.

ரூபாய் நோட்டு பரிசு:

ரூபாய் நோட்டுகளும் சேகரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிலும், பிறந்த தேதி பதிவிட்ட ரூபாய் நோட்டுகள் தற்போது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. அதாவது, ரூபாய் நோட்டுகளில் பிறந்த தேதி, மாதம், வருடம் உள்ளிட்டவை அச்சிட்டிருக்கும். உதாரணத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள் 12.12.1950 எனில் ரூபாய் நோட்டில் உள்ள வரிசை எண் "121250' என அச்சிட்டிருக்கும். ஒருவரின் பிறந்தநாள், திருமணநாள் உள்ளிட்ட முக்கிய தினங்களை நினைவுக் கூறும் வகையில் இதுபோன்ற ரூபாய் நோட்டுகளைப் பரிசாக அளிக்கின்றனர்.

நாணயத்தின் மறுபக்கம்:

நாணய சேகரிப்பு குறித்து மூன்றாம் தலைமுறையாக நாணயச் சேகரிப்பில் ஈடுபட்டு வரும் ஏங்கல்ஸ் பாண்டியனிடம் பேசியபோது:

'நாணயம் என்பது ஒரு வணிகப் பொருள் மட்டுமின்றி, நாட்டின் வரலாறு, சிறப்பம்சங்களை அறிய உதவும் சான்றுகளாகும். அதிலும், பழங்கால நாணயங்கள் நாட்டின் வரலாற்று ஆவணங்களாக விளங்குகின்றன. அதனால், இதனை அழிய விடாமல் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும். பலரின் வீடுகளில் பழங்காலப் பொருள்களை வைத்திருப்பர். அது

குறித்து சரியான புரிதல் இல்லாமல் பூட்டி வைத்திருப்பர். அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாதம்தோறும் நாணயக் கண்காட்சி நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் இந்தக் கண்காட்சி நடத்தப்படும். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாணய சேகரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் வந்து தங்களிடம் உள்ள பழங்கால நாணயங்கள், ஸ்டாம்புகள் மற்றும் அரியவகை பொருள்களை விற்பனை செய்வர்.

நாணயச் சேகரிப்பில் 90 சதவீதம் பேர் வாங்கி விற்பவராகவே இருப்பர். 10 சதவீதம்தான் நாணயச் சேகரிப்புக்காக நாணயங்களை வாங்குவர்.

அப்படி வாங்கும் பலர் தங்களின் முழு நிதியையும் நாணயச் சேகரிப்பில் விட்டு விடுகின்றனர். ஒருவர் ஒரு பொருளை சேகரிக்க ஆர்வம் இருந்தால், முடிந்த அளவு குறைந்த நிதியில் பெற முயற்சிக்க வேண்டும். ஆரம்பக் கட்டத்தில் அதிக பணம் கொடுத்து நாணயம் வாங்கிவிட்டு, பின்னர் அதை விற்க முடியாமல் தவிக்கும் பலர் உள்ளனர்.

ஒருவர் தனக்கான சேகரிப்பில் ஒன்றுக்கு மேல் இருந்தால் அதை விற்றுவிட்டு அந்தப் பணத்தில் வேறு வகை நாணயத்தை வாங்கலாம். அதுபோல், அஞ்சல்தலை சேகரிப்பில் ஆரம்பக்கட்டத்தில் ஈடுபட முயற்சிக்கும் ஒருவர், தனது வீடு, அலுவலகத்தில் உள்ள பழைய அஞ்சல்உறையில் உள்ள அஞ்சல் தலைகளைச் சேகரிக்கலாம். பின்னாளில் அதுகுறித்து சரியான புரிதல் ஏற்பட்டவுடன் அதில் முதலீடு செய்ய வேண்டும்'' என்கிறார் ஏங்கல்ஸ் பாண்டியன்.

படங்கள்: ஏ.எஸ்.கணேஷ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக டிஜிபி சங்கா் ஜிவாலுக்கு இன்று பணி நிறைவு விழா

பிளஸ் 2 மாணவி பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

சத்திரம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஆட்சியரிடம் பாமக மனு

தில்லி பல்கலை.யின் 67 கல்லூரிகளுக்கு மீண்டும் யு-ஸ்பெஷல் பேருந்துகள் சேவை: முதல்வா் ரேகா குப்தா தொடங்கிவைத்தாா்

இளைஞா் கத்தியால் குத்தி கொலை: 4 போ் கைது

SCROLL FOR NEXT