அரசின் அருங்காட்சியகங்களில் மட்டுமே காணப்படும் பண்டைய தமிழர்களின் புழங்குபொருள்களை தனது இல்லத்திலேயே காட்சியகமாக வைத்து விழிகளை வியப்படையச் செய்துள்ளார் திருச்சி உறையூரைச் சேர்ந்த யோகா ஆசிரியர் பெ. விஜயகுமார்.
ஆதரவற்றோரின் உடல்களை தனது சொந்தச் செலவில் அடக்கம் செய்தல், நாணயங்கள் சேகரிப்பு, அஞ்சல் தலை சேகரிப்பு, யோகா பயிற்றுநர், சமூக ஆர்வலர் என பன்முகத் தன்மைகளைக்
கொண்ட இவர், தனது இல்லத்தில் வைத்துள்ள புழங்குபொருள்கள் காட்சியகம்தான் இன்றைய இளம் தலைமுறையினரை வியப்படையச் செய்துள்ளது.
இவற்றை பார்வையிடுவதற்காக தொல்பொருள் ஆராய்ச்சி மாணவர்கள், வரலாற்று ஆய்வு மாணவர்கள், பழங்காலப் பொருள் சேகரிப்பாளர்கள் பலரும் தினம்தோறும் வருகை தருகின்றனர்.
இவற்றைப் பார்வையிட வருவோருக்கு ஒவ்வொரு பொருள்கள், அதன் பயன்பாடு, பயன்படுத்தப்பட்ட காலம், வரலாறு உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் விஜயகுமார் விளக்குகிறார். அவர் இல்லாத தருணத்தில் அவரது மனைவி வழக்குரைஞர் சித்ரா, சட்டப்படிப்பு படித்து வரும் மகள் கீர்த்தனா ஆகியோர் விளக்குகின்றனர்.
இதுகுறித்து விஜயகுமாரிடம் பேசியபோது:
'எனது தாத்தா, பாட்டி காலத்தில் பயன்படுத்திய பொருள்கள் பார்த்து வியந்தேன். மூன்று தலைமுறையைக் கடந்து அழியாமல், உறுதியாக இருந்த பொருள்கள் என்னை ஈர்த்தது. பின்னர், அதனை தேடி பயணம் செய்யத் தொடங்கினேன். மலைக் கிராமங்கள், குக் கிராமங்களுக்குச் சென்று பொருள்களைச் சேகரித்தேன். தற்போது காட்சியமாக வளர்ந்து நிற்கிறது.
பண்டையத் தமிழர்களின் கலை, கலாசாரம், பண்பாடு, வாழ்வியல் முறைகள், தொழில் சார்ந்த பொருள்களை இன்றைய தலைமுறை அறிந்துகொள்வதற்கான எனது சிறிய முயற்சி இது. காட்சியகத்தில் உள்ள பொருள்கள் குறித்த தகவல்களை தமிழ், ஆங்கிலத்தில் ஆவணப்படுத்தி உள்ளோம்.
திரிகை, அம்மிக் கல், ஆட்டுக்கல், உரல், குத்துரல், குந்தாணி, மரத் தொம்பை, பத்தாயம், கமலை, உறி, சிம்னி விளக்கு, பெட்டர்மாக்ஸ் விளக்கு, இஸ்திரி பெட்டி, முட்டுக்கட்டை, கரண்டி, மத்து, கிண்ணங்கள், தட்டுகள், லோட்டா, கும்பா, திருகுச் செம்பு, அண்டா, கெண்டி, தூக்கு வாளி, வடிகட்டி, கல் சட்டி, தோசைக் கல், பனியாரச் சட்டி, கூஜா, சுரக்காய் கூடு, ஆப்பைக்கூடு, மரக்கா, படி அளவைகள், லிட்டர் அளவைகள், தோல் இசைக் கருவிகள், காற்றிசைக் கருவிகள், மீட்டிசைக் கருவிகள், பழங்கால பூட்டுகள், சாவிகள், சீப்புகள், பாக்கு வெட்டி, வேளாண் கருவிகள், வானொலி பெட்டி, தொலைபேசி, பூஜை சாமான்கள், பூஜை விளக்குகள், எச்சில் உமிழும் கலன், வெற்றிலைப் பெட்டி, அரிவாள்மனை, மூங்கில் குலவை, கால்நடைகளுக்கு பயன்படுத்தும் பொருள்கள், தானியங்கள் வைக்கும் கலன்கள், குதிர்கள், எலிப் பொறிகள், ஓடுகள், அகல்விளக்கு, செங்கல், கண்ணாடி குடுவைகள், கொலு பொம்மைகள், சிகை அலங்காரத்துக்கான பொருள்கள், இளவட்டக்கல், லாந்தர் விளக்கு, ஏர் கலப்பை என ஆயிரக்கணக்கான பொருள்களை இல்லத்தில் வைத்துள்ளேன்.
இவையனைத்தும் மண், கல், மரம், இரும்பு, வெண்கலம், அலுமினியம், சில்வர் உள்ளிட்டவற்றால் செய்யப்பட்ட பண்டைய தமிழர்களின் புழங்குபொருள்கள். மரத்தால் செய்யப்பட்ட சங்கிலி, மணி என வியக்க வைக்கும் கலைநயமிக்க பொருள்களாகும்.
புழங்குபொருள்கள் என்பது ஒரு காலத்தில், ஒரு குறிப்பிட்ட இடத்தில், ஒரு சமூகத்தினர் தன் வாழ்வுக்காகப் பயன்படுத்தி வந்த பொருள்களைக் குறிப்பதாகும். இது ஒரு பண்பாட்டின் கண்ணாடியாகவும், அந்தக்கால மக்களின் வாழ்க்கை முறை, கலாசாரம், பொருளாதாரம் போன்றவற்றை அறிய உதவும் ஆதாரங்கள். கலைப்பொருள்கள், கைவினைப் பொருள்களும் புழங்குபொருளைச் சார்ந்து, மக்களால் பயன்படுத்தப்பட்டிருப்பதை அறிய முடியும்.
சங்க இலக்கியத்தில் பல்வேறு வகையான புழங்குபொருள்கள் பற்றிய தகவல்கள் உள்ளன. ஐங்குறுநூற்றில் வேளாண் புழங்குபொருள்கள் பற்றியும், அகநானூற்றில் இல்லம் சார்ந்த புழங்கு பொருள்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னோர்கள் உணவு சார்ந்த புழங்குபொருள்கள், வீட்டு உபயோகப் புழங்குபொருள்கள், தொழிற்கள புழங்குபொருள்கள் என மூன்று வகைகளில் பயன்படுத்தியுள்ளனர். உணவுகளைச் சமைப்பதற்கும், அவைகளைப் பாதுகாப்பாகப் பக்குவப்படுத்தி வைப்பதற்கும், உணவுகளை உண்பதற்கும், கால்நடை, பறவைகளுக்கு உணவு கொடுப்பதற்கும் பல்வேறு விதமான கலன்களைப் பயன்படுத்தினர்.
பழந்தமிழர்கள் தங்களின் தேவைக்காக மண், கற்கள், மரம், இரும்பு, வெண்கலம் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி புழங்குபொருள்களை உருவாக்கினர். இவை ஆண்டுகள் கடந்து அழிக்க முடியாதவையாக இருந்திருப்பதை இன்றைய தொல்பொருள் ஆய்வுகளே நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.
பழங்காலத் தமிழர்கள் வேளாண் கருவிகளும், வேட்டைக் கருவிகளும் உலகுக்கு முன்னோடி. இவை மட்டுமின்றி மரப்பாச்சி பொம்மை, பல்லாங்குழி உள்ளிட்ட விளையாட்டுப் பொருள்களையும் மரம், கற்களில் வடித்துள்ளனர். பச்சை மண்ணால் செய்யப்பட்ட மட்கலப் புழக்கம் இன்றும் அதன் மதிப்புக்குறையாமல் உள்ளது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்த சமூகத்தைப் பற்றி அறிந்துகொள்ள புழங்குபொருள்கள் குறித்த செய்திகள்தான் இன்றும் முக்கியத் தரவுகளாக அமைந்துள்ளன. பண்பாட்டுச் சூழல் ஆய்வுக்கான கருவூலமாகத் திகழ்கின்றன.
அடுக்களைகளில் நீண்ட நெடுங்காலமாக கோலோச்சி வந்த பாத்திரங்கள் பலவும் காட்சியகங்கள் நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றன. இத்தகைய பாத்திரங்கள் பயன்பாடு மட்டுமன்றி ரசனையின் அடையாளமாகவும் அக்கால மக்களின் வாழ்க்கையில் இடம்பெற்றிருந்தன. இன்றைய தலைமுறையினர் அவற்றைப் பயன்படுத்துவது இல்லை. ஏன், பார்த்திருக்கவும் முடியாது'' என்கிறார் விஜயகுமார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.