நகைக் கடைகளில் நகைகள் அணிந்திருக்கும் மார்பளவு உருவப் பொம்மைகளும், துணிக் கடைகளில் உள்ள மனித உருவப் பொம்மைகளும் பிளாஸ்டிக் அல்லது ஃபைபர் பிளாஸ்டிக், நைலான் பொருள்களால் செய்யப்பட்டவை. இவை பல நூறு ஆண்டுகள் ஆனாலும் மக்காது; மறுசுழற்சியும் செய்ய முடியாது.
இந்த நிலையில், நாட்டிலேயே முதல் முறையாக மக்கும் மேனிக்வின்களை பல வடிவங்களில் ஈரோடு பள்ளிப்பாளையத்தில் இயங்கிவரும் 'ஜோதி ஸ்பெஷாலிட்டி பேப்பர்ஸ்' நிறுவனம் உருவாக்கி வருகிறது. இதற்காக அந்த நிறுவனத்தினர் திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பின்னலாடை தயாரிக்கும் நிறுவனங்களிலிருந்து கிடைக்கும் துணிக் கழிவுகளைப் பயன்படுத்துகின்றனர்.
'இது எப்படி சாத்தியமாகிறது' என்று அந்த நிறுவனத்தில் உரிமையாளர்களில் ஒருவரான ஐம்பத்து ஆறு வயதான மணியிடம் பேசியபோது:
'துணிக் கழிவுகள் பெரும் தலைவலியாகியுள்ளது. 'எப்படி கழிவுகள் இல்லாமல் செய்வது?' என்று ஆடை தயாரிப்பு நிறுவனத்தினர் திணறுகின்றனர்.
இயந்திரங்களைத் துடைக்கவும், அழுக்குகளைக் கைகளிலிருந்து சுத்தம் செய்யவும் தொழில் நிறுவனத்தினர் பயன்படுத்துகின்றனர். இந்தத் துணி கழிவுகளும் ஒருவிதத்தில் சுற்றுப்புறத் தூய்மைக்கு ஒரு சவாலாக அமைகின்றன.
'துணிக் கழிவிலிருந்து மதிப்புள்ள காகிதத்தைத் தயாரித்தால் என்ன?' என்று தோன்றியது. துணிக் கழிவுகளை தண்ணீரில் சிறிது ஊற வைத்து அரைத்து பசை சேர்த்து அதிலிருந்து பல தடிமன்களில் காகிதம் தயாரித்தோம். காகிதப் பைகள், சாமான்களை சுற்றி அனுப்பும் காகிதம்... என பல வகை காகிதங்களைச் செய்தோம். பல வண்ணங்களில் தயாரித்தோம்.
அதற்குப் பிறகுதான் துணிக் கூழில் மேனிக்வின் பொம்மைகளைச் செய்தால் என்ன? என்று தோன்றியது. தலை, மார்பு, கைகள் கால்கள் என்று செய்து பிறகு ஒன்றாக இணைத்தபோது, கச்சிதமாக அமைந்தது.
அச்சிலிருந்து எடுக்கப்பட்ட வடிவங்களை வெயிலில் காய வைத்து, மேம்படுத்தி, நிறம் பூசி விற்பனையை கடந்த டிசம்பரில் ஆரம்பித்தோம். ஆயத்த ஆடைகளில் இணைக்கப்படும் பல்வேறு அட்டைகளையும் நாங்கள் தயாரிக்கிறோம். இவை எல்லாமே நாளடைவில் மக்கும் தன்மை கொண்டவை.
இவை மறுசுழற்சிக்கு ஏற்றவை. மேனிக்வின்களை ஆண். பெண், சிறார்கள் உருவத்தில் செய்கிறோம். விலங்குகள் உட்பட எல்லா உருவங்களையும் துணிக் கூழில் உருவாக்கலாம். ஆடைகளைத் தொங்க விடப் பயன்படும் ஹேங்கர்ககளையும் துணிக் கூழில் செய்கிறோம். மேனிக்வின்கள், ஹேங்கர்கள் மீது தண்ணீர் பட்டாலும் ஒன்றும் ஆகாது. தண்ணீரில் ஊறவைத்தால் நைந்து போகும். இவை மண்ணில் போட்டால் மூன்று மாதத்துக்குள் மக்கி மண்ணோடு மண்ணாகிவிடும்.
கொல்கத்தாவைச் சேர்ந்த ஒருவர் கரும்புச் சக்கையிலிருந்து மேனிக்வின்களை உருவாக்குகிறார். பிளாஸ்டிக் மேனிக்வின்கள் ஒவ்வொன்றும் ரூ.13,500 விலைவரும். துணிக் கூழில் செய்யப்படும் மேனிக்வின் தயாரிக்க மனித உழைப்பு அதிகம் தேவை. உருவாக்க நேரம் அதிகம் தேவைப்படுகிறது. ஒரு மேனிக்வின் உருவாக்க குறைந்தது நான்கு நாள்கள் தேவைப்படுகிறது. சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாப்பதில் அக்கறை உள்ள நிறுவனங்கள் மட்டுமே துணிக் கூழில் செய்யப்படும் மேனிக்வின்களை வாங்குகிறார்கள்.
ஒரு முழு மேனிக்வின் எடை 15 கிலோவிலிருந்து 40 கிலோ வரை இருக்கும். ஒரு பொம்மையை உருவாக்க சுமார் 40 கிலோ துணிக் கழிவு தேவைப்படும். துணி கூழ் தயாரிக்க ராட்சஷ அரவை இயந்திரங்கள் உண்டு.
இங்கிலாந்தில் தேவையில்லாத, பழையதான பிளாஸ்டிக் மேனிக்வின்களைப் களைவதற்கு மயானம் ஒன்று உள்ளது.
மேனிக்வின் விலை 5 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரையில் உள்ளது. 'தனிஷ்க்' உட்பட பல முன்னணி நிறுவனங்கள் இயற்கை மேனிக்வின்களை வாங்குகின்றனர். உள்நாட்டு தேவைகள் போக, சவூதி அரேபியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்காக மாதம் 200 மேனிக்வின்களை உற்பத்தி செய்கிறோம். ஆஸ்திரேலிய சந்தையிலும் விரைவில் அறிமுகமாகிறோம்.
எனது நிறுவனத்தில் மனைவி அமுதாவும் கூட்டு உரிமையாளர். தொழில் நடக்கத் தேவையான மின்சாரத்தை சூரிய ஒளியில் தயாரிக்க, வேண்டிய தகடுகளைப் பொருத்தியுள்ளோம். மழை நீரை சேகரித்து, அந்தத் தண்ணீரையும் பயன்படுத்து
கிறோம். கழிவுநீரை சுத்திகரிக்கும் இயந்திரமும் எங்களிடம் உள்ளது. சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கும் வகையில், எங்கள் தொழிலையும் அதே திசையில் அமைத்துக் கொண்டுள்ளோம்' என்கிறார் மணி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.