ஹிமாசலப் பிரதேசத்தில் அமைந்துள்ள கார்லி, பிராக்பூர் ஆகிய கிராமங்கள் தனித்துவமான கட்டடக் கலைக்குப் பெயர் போனவை. இங்கு ஐரோப்பிய பாணி மாளிகைகள், பள்ளிகள், மருத்துவமனை என பலவற்றை வித்தியாசமாய் காணலாம். இதனால் இந்தியாவின் முதல் பாரம்பரிய கிராமங்களாக 1997-இல் தேர்ந்தெடுக்கப்பட்டன.
ஜஸ்வான் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக முன்பு இருந்தது. இங்கு குதியால் சுட் சமூகத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் அந்த காலத்திலேயே சர்வதேசப் பயணங்களை மேற் கொண்டவர்கள். இதனால் அந்த நாடுகளின் கட்டடக் கலைகளைத் துல்லியமாக அறிந்து வந்து, அதே பாணியில் இங்கு வீடுகளையும், மாட மாளிகளையும் கட்டினர்.
காங்கரா பள்ளத்தாக்கில் உள்ள தெளலத் மலைத் தொடரிலிருந்து வெகு தொலைவில் பாரம்பரியமான கட்டடங்களைக் கொண்டு இந்த இரு கிராமங்களும் அமைந்துள்ளன. இத்தாலியன், போர்ச்சுக்கல், இஸ்லாமிய, ராஜஸ்தான் கட்டடக் கலைகளை இணைத்து இவை கட்டப்பட்டன. கற்களாலான பாதைகள், தண்ணீர்த் தொட்டிகள், கடுகு வயல்கள், ஸ்லேட் ஓடுகள் வேயப்பட்ட கூரைகள் கொண்ட இரட்டை மாடி வீடுகள் என பலவற்றை இந்தக் கிராமங்கள் கொண்டுள்ளன.
ஜஸ்வான் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசியின் பெயரான 'பிராக்பூர்' என சூட்டப்பட்டுள்ளது. இந்தக் கட்டடங்களில் சில தங்கும் விடுதிகளாகவும், உணவகங்களாகவும் மாறியுள்ளன. பாழடைந்தக் கட்டடங்கள் சந்ததியினரால் இன்று புதுப்பிக்கப்படுகின்றன. நகரின் பிரபலமான இடமான ஜட்ஜ் கோர்ட் இப்போதும் பார்வையாளர்களை வரவேற்கிறது.
இங்கு கோட்டை, கோயில்கள், செராய்கள் பார்க்கப்பட வேண்டியவை. இங்கு நடைபெறும் சந்தை வெள்ளி வேலைகளுக்குப் பிரபலம். நெசவாளர்களின் சால்வைகள்,போர்வைகள் உடனே தைத்துகொடுக்க இரவு முழுவதும் தையல் தொழிலாளர்கள்... என எல்லாம் உண்டு. இந்த இரு கிராமங்களும் காங்கிராவிலிருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.