'உலகின் வணிகத் தலைநகரம்' என்று அழைக்கப்படும் நியூயார்கில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பையும், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹுவை காரசாரமாக விமர்சிக்கிறார் ஸோரன் குவாமே மம்தானி.
நவம்பர் 4-இல் நடைபெறும் நியூயார்க் மேயர் தேர்தலில், ஜனநாயகக் கட்சி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இவர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவர் வெற்றி பெற்றால் நியூயார்க் நகரின் முதல் இந்திய வம்சாவளி மேயராக அறியப்படுவார்.
1991-இல் உகாண்டாவின் தலைநகரான கம்பாலாவில் பிறந்தவர். அதே ஆண்டில்தான் இவரது தாய் மீரா நாயர் தனது இரண்டாவது திரைப்படமான 'மிசிசிப்பி மசாலா'வை வெளியிட்டார். சேரிவாழ் குழந்தைகளின் வாழ்க்கையை சித்திரித்த மீரா நாயரின் முதல் திரைப்படமான 'சலாம் பாம்பே' பல சர்வதேச விருதுகளை வென்றது. 2001-இல் வெனிஸ் திரைப்பட விழாவில் கோல்டன் லயன் விருதை வென்ற 'மான்சூன் வெட்டிங்' படத்தையும் மீரா நாயர் தயாரித்து இயக்கியிருந்தார். மீரா நாயர் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் படித்தவர்.
மம்தானிக்கு ஏழு வயதாக இருந்தபோது, அவரது தந்தை மஹ்மூத் மம்தானி கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் வேலை கிடைக்கவே, குடும்பம் நியூயார்க் மாநகருக்கு குடிபெயர்ந்தது.
நியூயார்க் சென்ற ஜூனியர் மம்தானி, நகரத்தின் சிறந்த பொதுப் பள்ளிகளில் ஒன்றான பிராங்க்ஸ் உயர்நிலை அறிவியல் பள்ளியில் பட்டம் பெறுவதற்கு முன்பு, தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான மன்ஹாட்டன் தனியார் பள்ளியில் பயின்றார்.
2014-இல் பட்டம் பெற்றபின், ஜூனியர் மம்தானி, தனது தாயின் தொகுப்புகளில் பணிபுரிந்தார். அரசியல் கூட்டங்கள், பிரசார அமைப்பாளராக மாறினார். 2018-இல் அமெரிக்க குடிமகன் அந்தஸ்தைப் பெற்றார். 2020-இல், மம்தானி மாகாணத் தேர்தலில்
போட்டியிட்டு வென்றார். அடுக்குமாடிக் குடியிருப்பில் வாடகை வீட்டில் வசிக்கிறார். சொந்தமான கார் இல்லாததால், மெட்ரோ ரயிலில் பயணிக்கிறார்.
நியூயார்கில் பொருளாதார சமத்துவமின்மையை சரி செய்ய பெரிய அளவிலான கொள்கைகளை மம்தானி அறிவித்துள்ளார். பெரும் பணக்காரர்கள் மீது அதிக வரி விதிப்பதும், உயர்ந்து வரும் வீட்டு வாடகையை சீர் செய்து கட்டுக்குள் வைப்பதும் மம்தானி கொள்கையில் அடங்கும்.
'எட்டு மணி நேர வேலை, டாக்சி ஓட்டுவது போன்ற வேலைகளில் வரும் வருமானம், மாதாந்திர வங்கித் தவணைகள் கட்டுவதற்கும், குடும்ப செலவுகளுக்கும், குழந்தைகளைப் படிக்க வைக்கவும் போதுமானதாக இருக்க வேண்டும்' போன்ற மம்தானியின் சோசியலிச கொள்கைகள் நியூயார்க் வாசிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.