ஆக்ரா தாஜ்மகாலைப் போலவே அதிசயிக்கும்படி, மத்திய பிரதேசத்துக்கு உள்பட்ட இந்தூருக்கு அருகேயுள்ள புர்ஹான்பூரில் உள்ள தனது பள்ளியின் 50 ஏக்கர் வளாகத்துக்குள் நான்கு படுக்கை அறை கொண்ட தாஜ் மகால் பங்களாவைக் கட்டியுள்ளார் ஆனந்த் பிரகாஷ் சௌக்ஸி.
தன்னுடன் வாழும் மனைவி மஞ்சுஷாவுக்கு பரிசாகக் கட்டியுள்ள ஐம்பத்து ஆறு வயதான ஆனந்த் பிரகாஷ் சௌக்ஸி கூறியது:
'தாஜ் மகால் பங்களா மக்ரானா வெண்ணிற சலவைக் கற்களால் கட்டப்பட்டுள்ளது. கட்டி முடிக்க ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் இரண்டு கோடி ரூபாய் செலவானது. 2017-இல் கட்டட வேலை தொடங்கப்பட்டது. 2022-இல் நிறைவு பெற்றது. இடையில் கரோனா ஊரடங்கு வந்ததால், கட்டடம் நிறைவு பெறுவதும் தாமதமானது.
இதன் கட்டடக் கலை ஆடம்பரத்துக்கான சின்னமாகக் கருதப்படவில்லை. கலைச்சின்னத்தின் பின்னணியில் உள்ள இதயப் பூர்வமான நேச உணர்வின் வெளிப்பாடாகவும் அடையாளமாகவும் மதிக்கப்படுகிறது. இதை உருவாக்கினாலும், எனது மனைவி மகனுடன் தனியே வசித்து வருகிறேன்.
அசல் தாஜ் மகாலின் நீள அகலங்களை ஒப்பிட்டால், இந்த பங்களா மூன்றில் ஒரு பங்குதான் இருக்கிறது. ஆனால் உருவ அமைப்பில் மாற்றம் இல்லை. நேர்த்தியான குவிமாடங்கள், நுணுக்கமாகச் செதுக்கப்பட்ட தூண்கள். அழகாக வளைந்த கதவுகளைக் கொண்ட இந்த பங்களா காலத்தால் அழியாத அன்புக்கும், முகலாய காலத்தின் தலைசிறந்த கலைப் படைப்பின் மரபுக்கும் பாராட்டு ஆகும்.
இந்தப் பங்களா என் மனைவிக்கு மட்டுமல்ல; நகரின் மக்களுக்கும் ஒரு பரிசாக அமைந்துவிட்டது. திருமணத்துக்கு முன்பான படப் பிடிப்புகள் இங்கு நடக்கின்றன.
ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கிறார்கள். உண்மையில் பேரரசன் ஷாஜஹான் தனது மனைவி மும்தாஜுக்காக இந்த புர்ஹான்பூரில்தான் தாஜ் மகாலைக் கட்ட வேண்டும் என்று நினைத்தார். ஏனென்றால், மும்தாஜின் பிரசவம் புர்ஹான்பூரில்தான் நடைபெற்றது. பிரசவத்தின்போது மும்தாஜ் இறந்தார். தனது சாம்ராஜ்யத்தின் நடுநாயக இடத்தில் கட்ட வேண்டும் என்பதற்காக ஆக்ராவில் கட்டினார்.
ஒரிஜினல் தாஜ் மகாலுக்கு ஈடாக எனது சொந்த ஊரில் ஒரு சிறிய தாஜ் மகாலைக் கட்டினேன். கட்டியபோது எழுந்த சந்தேகங்களைப் போக்க ஒரிஜினல் தாஜ் மகாலுக்கு அடிக்கடி சென்று பார்த்து வருவேன்.
மனைவி மேல் கொண்ட காதலுக்காக, இந்த தாஜ்மகால் பங்களாவை அர்ப்பணித்தேன். உலகில் குறைந்து வருவது பரஸ்பர அன்புதான். மக்களிடையே பரஸ்பர மரியாதையுடன் கூடிய அணுகுமுறை இருக்க வேண்டும். ஒருவரையொருவர் மதிக்க, நேசிக்க வேண்டும்.
அன்பையும் மனித நேயத்தையும் வளர்த்துகொள்ள வேண்டும். இந்தச் செய்தியைப் பரப்புவதற்காகவே கட்டியிருக்கிறேன். எங்கள் காதல் இன்றைக்கும் வலுவாக இருக்கிறது'' என்கிறார்ஆனந்த் பிரகாஷ் செளக்ஸி.
சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் அம்ருதீன் ஷேக் தாவூத், திருவாரூருக்கு அருகில் அம்மையப்பன் கிராமத்தில் ஒரிஜினல் தாஜ் மகாலின் மினி பதிப்பை தனது தாயின் நினைவாக 2023-இல் உருவாக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.