ஞாயிறு கொண்டாட்டம்

புதுப்பொலிவு...

பழம்பெருமை வாய்ந்த சென்னையில் ஏராளமான கல்லூரிகள் இருந்தாலும், கவின் கலை கற்பிக்கும் பழமையான கல்லூரி என்ற பெருமைக்குரியது 'அரசு கவின் கலைக் கல்லூரி'.

எஸ். சந்திரமெளலி

பழம்பெருமை வாய்ந்த சென்னையில் ஏராளமான கல்லூரிகள் இருந்தாலும், கவின் கலை கற்பிக்கும் பழமையான கல்லூரி என்ற பெருமைக்குரியது 'அரசு கவின் கலைக் கல்லூரி'. சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது .

ஆங்கிலேய அரசுப் பணிகளிலும், தொழிலகங்களிலும் தொழிலக வரைவாளர்கள், வார்ப்பாளர்கள், கைவினைஞர்களை உருவாக்கும் நோக்கத்துடன் ஜார்ஜ் டவுனில் கவின் பள்ளியாக 1850 மே 1-இல் ஆங்கிலேய ராணுவப் பணியில் இருந்த புகழ் பெற்ற மருத்துவர் அலெக்சாண்டர் ஹண்டர் தொடங்கினார்.

லண்டனிலுள்ள கிழக்கு இந்தியா ஹவுஸ், ராயல் அகாதெமி ஆகிய நிறுவனங்களுடன் ஆலோசனை செய்த டாக்டர் அலெக்சாண்டர் ஹண்டர், இந்தியாவின் எதிர்கால கலைக் கல்வியைக் கருத்தில் கொண்டு 8 பேர் கொண்ட குழுவை அமைத்தார்.

இந்தக் குழுவின் பரிந்துரையின்படி, இங்கு கலையியல் துறை, தொழிலகத் துறை என இரண்டு துறைகள் ஏற்படுத்தப்பட்டன. இவ்விரு துறையிலும் வல்லுநர்கள் இங்கிலாந்திலிருந்து வரவழைக்கப்பட்டு, அடிப்படை வடிவமைப்பு, வரைகலை அடிப்படைகள் பயிற்றுவிக்கப்பட்டன.

சுமார் 20 ஆண்டுகள் அங்கே செயல்பட்டு, 1870-இல் தற்போதைய வளாகத்துக்கு இடம் பெயர்ந்தது. இந்தப் பள்ளி ஆங்கிலேயே அரசின் பொதுத் துறையின் நிர்வாகத்தில் 1852-இல் கொண்டு வரப்பட்டது.

1877 -இல் இந்தப் பள்ளியை நிர்வகித்த இ.பி.ஹாவெல் முன்னெடுப்பில் தச்சு வேலை, மரம் செதுக்குதல், உலோக வேலைப்பாடுகள் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன. இவர், இந்தியாவின் மரபார்ந்த கலை பாராம்பரியத்தின் மீது பெரும் ஆர்வம் கொண்டிருந்ததால் அவற்றை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தினார். இவரது ஆதரவில், மேற்கத்தியத் தாக்கத்தின் அடிப்படையில் நீர்வண்ண ஓவியம், எண்ணெய் வண்ண ஓவியம், உயிர் மாதிரி , களிமண் வடிவமைப்பு ஆகியவை கவின் கலைக்கல்விக்கு வளம் சேர்த்தன.

மருத்துவர் டி.பி.ராய்செளத்ரி இந்தப் பள்ளியின் முதல் இந்திய முதல்வராக 1929-இல் பொறுப்பேற்றார். இவர் மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை, காந்தி சிலை ஆகியவற்றை வடிவமைத்தார்.

உள்நாட்டு, அயல்நாடுகளின் படைப்பாற்றலை ஆதரித்த மாறுபட்ட ஆளுமையாக விளங்கிய இவருக்கு பின்னர் கே.எஸ்.பணிக்கர் 1957-இல் முதல்வராகப் பொறுப்பேற்றார். இவரது காலத்தில் 1961-இல் இந்தப் பள்ளி சென்னை கலை, கைவினைக் கல்லூரியாக மேம்படுத்தப்பட்டது. 1973-இல் தொழில்நுட்பக் கல்வித்துறையின் கீழ் இந்தக் கல்லூரி கொண்டுவரப்பட்டது.

கலைப் பண்பாட்டுத் துறையை 1991-இல் தமிழ்நாடு அரசு தோற்றுவித்தபோது, இந்தக் கல்லூரியானது அந்தத் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் இணைவைப் பெற்று செயல்பட்ட இந்தக் கல்லூரி 2015-16 முதல் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை, கவின்கலை பல்கலைக்கழகத்தின் இணைவுடன் செயல்படுகிறது.

இந்தக் கல்லூரி வளாகத்தில் உள்ள பழைமையான கட்டடங்கள் பழமை மாறாமல், வடிவமைப்பும் மாறாமல் புதுப்பிக்கும் பணியை தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறை ரூ.73 கோடி மதிப்பீட்டில் மேற்கொண்டு வருகிறது.

பழமையான கட்டடங்களின் பழமைத் தன்மைக்கு பாதகம் ஏதும் ஏற்படாமல் புதுப்பிப்பது, தற்காலத் தேவைக்கேற்ப புதிய கட்டடங்களைக் கட்டுவது என்று இரண்டு கட்டங்களாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதுதவிர, புதிய கட்டடங்கள் கட்டுவதற்காக ரூ. 21 கோடியை தமிழ்நாடு அரசு ஒதுக்கியிருக்கிறது.

தற்போதுள்ள கட்டடங்களில் மேற்பகுதியில் அமைந்திருக்கும் மெட்ராஸ் டெரஸ் மேற்கூரைப் பகுதியும், சுவர்களும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருப்பதால் அவற்றை சீர் செய்யும் பணியும் நடைபெறுகிறது. ஆத்தங்குடி டைல்ஸ்களை கொண்டு வகுப்பறைகள் சீரமைக்கப்படுகின்றன. மின்கம்பிகள் பழமையானவை என்பதால், புதிய ஓயரிங் பணி மேற்கொள்ளப்படுகிறது.

மிகவும் பழமையான கல்லூரியின் நூலகமும் தற்போது சீரமைக்கப்பட இருக்கிறது. இங்கு இந்தியா, வெளிநாடுகளில் 160 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி தற்போது வெளியாகியுள்ள கவின்கலை தொடர்பான நூல்கள், கலை களஞ்சியங்கள் என 6 ஆயிரத்துக்கும் மேலானவை உள்ளன.

காலத்துக்கேற்ப பணிகள்...

கவின் கல்லூரியில் நடைபெறும் சீரமைப்புப் பணிகள் குறித்து ஓவியர் மணியம் செல்வன் கூறியது:

'இந்தக் கலைக் கல்லூரியின் முதல் இந்திய முதல்வராகப் பணியாற்றிய ராய் சௌத்ரி காலத்தில் இங்கே படித்தவர் என் தந்தை ஓவியர் மணியம். அவர் தமிழ்ப் பத்திரிகையுலகின் புகழ் பெற்ற ஓவியர். அவர் படித்த அதே கவின் கலைக் கல்லூரியில் நானும் 1967 முதல் 1973 வரை படித்ததால், நான் பெருமைப்படுகிறேன். இங்கே மாணவர்களின் படைப்புகளைக் கொண்டு ஆண்டுதோறும் கண்காட்சி நடத்தப்படுகிறது. மாணவர்களின் கலைத்திறன் பொது வெளியில் அங்கீகாரம் பெறுவதற்கு இக்கண்காட்சி பெரும் உதவியாக உள்ளது.

இதுதவிர கல்லூரி மாணவர்கள் பல்வேறு கலைக்காட்சிகளில் பங்கேற்று பெருமை சேர்த்து வருகின்றனர். பழமையான இந்தக் கல்லூரியில் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெறுவது மகிழ்ச்சியை அளிக்கிறது. காலத்துக்கு ஏற்ப அப்பணிகள் நடைபெறுவது சந்தோஷம்தான்'' என்கிறார்.

-ராய் சௌத் வடித்த உழைப்பாளர் சிலையில் ஓவியர் ராமுவும் ஒரு மாடலாக இருந்திருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT